முல்லா மகள் பக்கத்து நாட்டில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். அவளுக்குத் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அவளைப் பார்க்க முல்லா அந்த நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.
அரபு நாடுகளில், அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்து செல்வதுதான் வழக்கம். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு திருடர் பயமும் உண்டு.
முல்லா நீண்ட தொலைவு பயணம் புறப்பட்ட செய்தியை அவரின் நண்பரும் பக்கத்து வீட்டுக்காரருமான அப்துல்லா அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.
அவர் முல்லாவை நோக்கி, "முல்லா அவ்வளவு நீண்ட பயணம் செல்கிறீர்களே. வழியில் திருடர் பயம் அதிகமாயிற்றே! நீங்கள் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீர்களா?" என்று கேட்டார்.
"நானோ ஏழை. வயதானவன். திருடன் என்னை என்ன செய்வான்? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே" என்றார் முல்லா.
அதற்கு அப்துல்லா, "திருடனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உங்களிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும்?" என்று கேட்டார்.
"நீங்கள் சொல்வது சரிதான். நான் என்ன செய்வது? பயணத்தைத் தவிர்க்க முடியாதே!" என்று கவலையுடன் கூறினார் முல்லா.
அதற்கு அப்துல்லா, "கவலைப்படாதீர்கள்! என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டி விடுங்கள்" என்ற கூறி உடைவாளையும் அவரிடம் அளித்தார்.
முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் பக்கத்து வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு, பயணத்தைத் தொடங்கினார்.
ஒரு காட்டு வழியாக முல்லா கழுதை மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.
"கிழவனாரே! உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறாம்" என்று திருடர்கள் மிரட்டினர்.
"என்னிடம் காசு பணமெல்லாம் எதுவும் கிடையாதே. நான் ஒரு பரம ஏழை" என்றார் முல்லா.
"அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும்" என்றார்கள் திருடர்கள்.
"கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா?"என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.
"ஒரு ஏற்பாடு செய்யலாம். உங்களுக்கும் திருப்தியாக இருக்கும் என்று தோன்றுகிறது" என்றார் முல்லா.
"என்ன?" என்று கள்வர்கள் கேட்டனர்.
"என்னிடம் ஓர் உடைவாள் இருக்கிறது. கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா?" என்றார் முல்லா.
திருடர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர். விலை மதிப்புள்ள அருமையான வாள் அது.
அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு முல்லாவைத் தொடர்ந்து போக அனுமதித்தனர்.
பயணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.
வீட்டுக்கு வந்த முல்லாவை அப்துல்லா மகிழ்ச்சியுடன் வரவேற்று, பயணம் எவ்வாறு இருந்தது என்று விசாரித்தார்.
"எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது" என்றார் முல்லா. "என் மகளும் நன்றாக இருக்கிறாள். தங்களுக்கும் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளாள்" என்றார்.
மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அப்துல்லா, "வழியில் திருடர்கள் தொல்லை ஏதாவது ஏற்பட்டதா?" என்று கேட்டார்.
"அதை ஏன் கேட்கிறீர்கள்! நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்லவேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளித்து விட்டேன்" என்றார் முல்லா.
"அப்படியா?!" என வியப்பும் மகிழ்ச்சியுமாய்க் கேட்டார் அப்துல்லா.
"ஆம்! உங்கள் உடைவாள்தான் என் உயிரையும் கழுதையையும் காப்பாற்றித் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று முல்லா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
"உடைவாளைப் பயன்படுத்தி அந்தத் திருடர்களை விரட்டி அடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சரி, எங்கே அது? கொடுங்கள்" என்று திருப்பிக் கேட்டார் அப்துல்லா.
"உடைவாள் என்னிடம் ஏது? அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே" என்றார் முல்லா.
"என்ன!! திருடர்களிடம் கொடுத்துவிட்டீர்களா? அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும்? வாளைக் கொண்டு சண்டை போட்டுத் திருடர்களை விரட்டியிருப்பீர்கள் என்றல்லவா நான் நினைத்தேன்" என்று திகைப்பாகக் கேட்டார் அப்துல்லா.
காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார்.
அப்துல்லா, அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் திகைத்து நின்றார்.