தேவையானவை:
தக்காளி – 5 (நன்கு பழுத்தவை),
வெங்காயம் – 2,
முருங்கைக்காய் – 3,
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி,
புளி – சிறிதளவு,
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய் – அரை மூடி,
சோம்பு – அரை தேக்கரண்டி,
தாளிக்க:
பட்டை – 1,
கடுகு – அரை தேக்கரண்டி,
சீரகம் – அரை தேக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். தேங்காய், சோம்பு இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, கீறிய பச்சை மிளகாய் நான்கையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, முருங்கைக்காயையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியவுடன், இதில் மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கிச் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்.
முருங்கைக்காய் நன்கு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய், சோம்பு இரண்டையும் சேர்த்து, பிறகு புளிக் கரைசலையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்க வேண்டியதுதான். சுவையான முருங்கைக்காய் தக்காளிக் குழம்பு தயார். சாதத்துக்குப் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்!
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!