முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். அது நமக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும்.
ரால்ப் எமர்சன், "எந்தச் செயலைச் செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடிகிறது; சாதிக்கிறபோது அந்தச் செயல் ஒன்றும் எளிமையாகி விடவில்லை; நமது முயற்சி அதனை செய்து முடிக்க எளிதாக்குகிறது" என்கிறார்.
எந்தக் காரியமுமே ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றன்ன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டா.
தாமஸ் ஆல்வா எடிசன் சொல்கிறார், "ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நமது பலவீனமே. இன்னுமொருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம்தான் வெற்றிக்கு நிச்சயமானவை" என்று.
புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கைம்மண்ணளவுதான் என்று புத்தகச் சுரங்கங்களைத் தோண்டத் தோண்டப் புரியும். ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள்! அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் சரித்திரப் புகழ் பெறுவதற்கு முன்னால் எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.
1936ல் தியோடர் சேயஸ் கீசல் எனும் நாவலாசிரியர் ஐரோப்பாவிற்குக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கப்பல் எஞ்சின் சத்தத்தின் தாளகதி அவரை ஒரு பாடலை எழுதத் தூண்டியது. அதை அடிப்படையாக வைத்து ஒரு நாவலை எழுதினார். அந்த நாவல் பதிப்பாளர்களால் 27 முறை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பலர் இரண்டு மூன்று முறை தோல்வி கிடைத்தபின் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டு விடுவார்கள். ஆனால் 27 முறை தோல்விக்குப் பிறகு அவரது நண்பர் ஒருவர் அவருக்காக அந்த நாவலைப் புத்தகமாக வெளியிட்டார்; வெற்றியும் அடைந்தார். எழுதிய டாக்டர் சேயஸ் 1991ம் ஆண்டு இறந்தார். அதற்குள் அவரது புத்தகம் 200 மில்லியன் பிரதிகள் 15 மொழிகளில் விற்றிருந்தன. அவரது இறப்பிற்குப் பிறகு மேலும் 22 மில்லியன் பிரதிகள் விற்றன.
‘மல்பெரி தெருவில் அதைப் பார்த்தேன் என்று நினைக்கும்போது’ என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துக் குழந்தைகளின் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. அந்த எழுத்தாளரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு இது.
ஹாரிபாட்டரை உருவாக்கிய ஜே.கே.ரௌலிங்கைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மணமுறிவானதால் நிலைகுலைந்திருந்த பெண்மணி. கீசலைப்போலவே இவருக்கும் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. போதுமான பண வசதியில்லாததால் கிடைக்கும் நன்கொடைகள் மூலமே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனாலும் தான் எழுதவேண்டும் என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது ஹாரிபாட்டர் கதையைப் பல வருடங்கள் தொடர்ந்து எழுதினார். அவருக்குத் தான் எழுதும் கதை மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று சந்தேகம்! யாராவது பிரசுரிக்க மாட்டார்களா? என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. அவர் சொல்கிறார், "நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு என்ன படிக்கப் பிடிக்குமோ அதைத்தான் நான் எழுதினேன்’ என்று.
பல பதிப்பாளர்கள் அவரது புத்தகத்தைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள் ஒருவரைத் தவிர. ஹாரிபாட்டர் புத்தகங்கள் இன்று எவ்வளவு பிரபலமானவை என்று நாம் அனைவரும் அறிவோம்.
2004ம் ஆண்டுக்குள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் அவருக்குக் கிடைத்தது. லட்சக்கணக்கானோர் அவரது புத்தகங்களை வரிசையில் காத்து நின்று வாங்கினார்கள். அவரது விடாத முயற்சி அவருக்கு அலாவுதீனின் அற்புத விளக்காக இருந்தது. அவரது விடாமுயற்சிக்கு முன்னால் ஹாரிபாட்டரின் மந்திர வித்தைகள் கூட ஒன்றுமே இல்லை எனலாம்!
வெற்றிக்குப் பிறகு அவர் சொன்னார், "எனது புத்தகம் பிரசுரமானதே ஓர் அற்புதமான நிகழ்வுதான். ஆனால் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு வாசகர்கள் காட்டும் உற்சாகம்தான்". டி,வியின் முன்னால் கட்டுண்டு கிடந்த குழந்தைகளை தனது புத்தகங்களின் மூலம் மீட்டெடுத்ததே அவர்தான். பல லட்சக்கணக்கானோருக்குப் படிப்பதால் ஏற்படும் சந்தோஷத்தைத் தன் புத்தகங்கள் மூலம் காட்டினார்.
தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், "வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும்தான்! விடாமுயற்சி கொண்டவன், ‘நான் சமுத்திரத்தையும் உட்கொள்வேன்’, ‘என் சங்கல்ப சக்தியால் மலைகளும் நொறுங்கி விழுந்துவிடும்’ என்று சொல்வான். அது போன்ற சக்தியை கொண்டிரு, அது போன்ற மன உறுதியைக் கொண்டிரு; நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்".
கடலை நோக்கி மலை சொல்லியது. "நான் உன்னைவிட பலசாலி. என்னை யாரும் அழிக்க முடியாது" என்று. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளில் கடலின் அலைகளால் மலை மறைந்தது; கடல் அலைகள் தொடர்ந்தன.
ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே! தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு…! ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே…!" இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.
நம் நாட்டின் நோபல் பரிசாளர் தாகூரின் ஆரம்ப காலத்துக் கவிதைகளை வங்கமொழி அறிஞர்கள் பிழைதிருத்தத்திற்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு அவமானப்பட்டவர்தான் தாகூர். அவரது மேதாவிலாசத்தை விடவும் அவரது விடாமுயற்சியே அவருக்கு நோபல் பரிசைக் கொண்டுவந்து கொடுத்தது.
பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியை அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக, மேடம் கியூரி – மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அஹிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது! உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது. அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள்; சாதனை படைத்தார்கள்; தொடர்ந்தும் வருகிறார்கள்.
வெற்றிக்கான பாதையாக எடிசன் கூறுவது : "தேவையானது ஒரு சதவிகிதம் ஊக்கம் – 99 சதவிகிதம் விடாமுயற்சி"
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூலிடிஸ் சொல்கிறார், "இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தைப் பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இவ்வளவு இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது" என்று.
நம்ம ஊர் வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், "முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று!
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். சிகரங்கள் காத்திருக்கின்றன – சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்.
“
எனக்கு கட்டுரை பொட்டி இருந்தது… வெரு எந்த இனைதலமும் எனகு திருப்தி தரவில்லை இது தந்தது. இந்த பக்கதை உருவாக்கியவருக்கு நன்ரி
its really good
ENAKU MIGAVUM SIRANTHADHA IRUTHADHU. ENAKU CONFIDENCE KODUTHATHU. INDHA WEBSITEKU THANKS.
fantastic summary its really useful for everyone who read this website