முன்தினம் பார்த்தேனே – இசை விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் உண்டு. அது புகழ்பெற்ற பாடல் ஒன்றின் வரியைப் படத்தின் தலைப்பாக வைப்பது! எம்.ஜிஆர் காலத்திலிருந்தே இந்த ட்ரெண்ட் இருந்து வருகிறது. உதாரணத்திற்கு, சிரித்து வாழ வேண்டும், சங்கே முழங்கு, உனக்காகவே வாழ்கிறேன், உன்னை நான் சந்தித்தேன், ஒரு நாள் ஒரு கனவு, விண்ணோடும் முகிலோடும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் புதிதாக இடம்பெற இதோ வந்திருக்கும் படம் ‘முன்தினம் பார்த்தேனே’. என்ன ஒரு வித்தியாசம் என்றால், இந்த வரிக்குரிய பாடல் வந்தது வெகு சமீபத்தில்தான், ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில். மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்தில் சஞ்சய் நாயகனாக நடிக்க, பூஜா, ஏக்தா, லிஸ்னா என்று மூன்று கதாநாயகிகள்! இப்படத்திற்கு ஆறு பாடல்களைத் தந்திருக்கிறார் சாய் தமன் (பாய்ஸ் திரைப்படத்தில் ஐவரில் ஒருவராக நடித்தவர்!). வாருங்கள், கேட்போம்!

இன்றே இன்றே

அழகிய கிடாரிங், கார்ட்ஸ், அதன் பின்னே பெண் கோரஸ் ரீங்காரம் என்று ஆரம்பத்திலேயே அசத்திவிடுகிறார் தமன். பிறகு புல்லாங்குழல், அதனுடன் கலக்கும் ரஞ்சித்தின் குரல் – அட! மெலடியை பாடல் முழுவதும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். வயலினையும் எலெக்ட்ரிக் கிடாரையும் சரியான அளவில் உபயோகப்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கு வரும் மௌத்-ஆர்கன் கூட இதம் தருகிறது. கதாநாயகன் காதலில் விழுந்த சந்தோஷத்தில் பாடும் பாடல் போல! ப்ரியனின் வரிகள் இசையுடன் அழகாய் கைகோர்க்கின்றன. இதம் தரும் மெலடி.

பேசும் பூவே

கிடாரில் ஆரம்பம் – மீண்டும். அதன் பின் கொஞ்சம் பீட்ஸ் சேர, க்ருஷ்ஷின் குரலில் மிகவும் மென்மையாகத் தொடங்குகிறது பாடல். அதன் பிறகு கொஞ்சம் அதிகமாகவே டெக்னோ சாயல் அடிக்க ஆரம்பிக்கிறது. இருந்தும் பரவாயில்லை. சுசித்ராவின் குரலும் நன்றாகப் பொருந்தியிருக்கின்றது. "உன்னிடம் எதைக் கண்டு நான் மயங்கினேன்" என்று மாற்றி மாற்றி இருவரும் புலம்புகிறார்கள். விவேகாவின் வரிகள் முழுவதாகப் புரிகிறதே என்று ஆச்சரியம்தான் படவேண்டும். காரணம், தமன் தன் கருவிகளை மீண்டும் மிகவும் நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே, ஏ.ஆர்.ரஹ்மானின் டெக்னோ மெட்டுகள் நினைவிற்கு வருகின்றன. இருந்தால் என்னவாம்! ரஹ்மானின் சாயல் இல்லாமல் இனி யார் இசையமைப்பாளராக முடியும்! தமனைப் பாராட்டுவோம் – வித்தியாசமான முயற்சி.

மனதின் அடியில்

தாளம் போட வைக்கும் பீட்ஸ். கிடார் இல்லையா என்று கேட்கிறீர்களா, கண்டிப்பாக உண்டு. மேற்கத்திய பாணிக்கு தாவுகிறார் தமன். கவிஞர் ப்ரியனின் வரிகளுக்கு ப்ரியதர்ஷினி குரல் தந்திருக்கிறார். மீண்டும் காதலைப் பற்றிய பாடல்தான். இரண்டாம் சரணத்திற்கு நம்மூர் இசை பாணிக்கு மாறி, வயலின், மிருதங்கம் என்று ஒரு கலக்கு கலக்கி ஆரம்பித்த இடத்திலேயே கொண்டுபோய் விடுகின்றார். மாற்றம் நடக்கும் இடத்தில், பாடகரும் தன் குரலை மாற்றி ஒரு விதமான எஃபெக்டைத் தருகிறார். இருந்தும், பாடலின் அமைப்பில் ஏதும் புதிதாக இல்லை. இதைப் போலவே ஆயிரம் மெட்டுகள் கேட்டாகிவிட்டது!

மாயா

ஒரு விதமான கோரஸுடன் ஆரம்பித்து, உச்ச ஸ்தாயியில் இன்னொரு கோரஸ், பின் அதைத் தொடர்ந்து கிடாரும் ஒரு கைகொடுத்து, நரேஷ் ஐயரின் குரலில் உருவம் பெறுகிறது இப்பாடல். ரோஹிணியின் வரிகளில் இன்னுமொரு காதல் பாடல். ஜனனியின் குரல் கனகச்சிதமாக இருக்கிறது. இருந்தும் பாடல் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது. காரணம், நம் காதுகள் ஏற்கெனவே பலமுறை கேட்டு ப் பழகிவிட்ட பீட்ஸ், கிடாரிங் போன்ற விஷயங்கள்தான். வயலின், புல்லாங்குழல் எல்லாம் சேர்ந்து கொஞ்சம் புத்துயிர் தரமுயற்சித்தாலும், பாடலின் முதுகெலும்பு என்னவோ பீட்ஸும் கார்ட்ஸும்தானே! அதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசம் தர முயன்றிருந்தால், பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கனவென

கிடாரோடு ஹரிசரணின் குரல் கலக்க – இன்னும் ஒரு பாடல், மேற்கத்திய பாணியில். அதனைத் தொடர்ந்து சுசித்ராவின் ராப் – புரிந்தால் எனக்கு சொல்லுங்கள். ரோஹிணின் காதல் வரிகள். மீண்டும் காதலா?! ஆமாம், படத்தின் பெயரிலிருந்தே புரிந்து கொண்டிருக்க வேண்டும்! பாடல் முழுவதையும் வெறும் கிடார், எலெக்ட்ரிக் கிடார், பீட்ஸ் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டே முடித்துவிட்டார் தமன்.

முந்தினம் பார்த்தேன்

டெக்னோ போக, இப்பொழுது ஜாஸ். பியானோ, சாக்ஸ், ட்ரம்பெட், விசில் என்று கலந்தடித்து ஒரு ஜாஸ் உணர்வைத் தரமுயன்றிருகிறார் தமன். ஜெயித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். பிரியனின் வரிகளை தமனும், சுசித்ராவும் பாடியிருக்கின்றார்கள். மொத்தமாகவே பத்து வரிகள் இருந்தால் அதிகம். ஜாஸ் பாடல்களில் வருவது போலவே, அதே வரியை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார். ஏதோ போதையிலிருப்பது போலவே, ஸ்டைலாக பாடியிருக்கின்றார். பாராட்ட வேண்டிய முயற்சி.

சில பாடல்களில் அதிகம் சிரத்தை எடுத்து முயற்சித்திருக்கிறார். ஒரு சில பாடல்களுக்கு அத்தனை யோசிக்காமல், மேலோட்டமாக இசையளித்திருக்கிறார். பார்க்கப்போனால், இப்பொழுது வரும் அநேக இசைத்தட்டுகள் அப்படித்தான் இருக்கின்றன! ஒரு படத்தில் "எல்லா பாடல்களும் டாப் க்ளாஸ்" என்று சொல்லும் காலமெல்லாம் போய்விட்டது போல! சரி சரி – பரவாயில்லை, தமன் இன்னும் நிறைய பாடல்களுக்கு இசையமைக்கட்டும். அவரின் திறமையை மேலும் கண்டுவிட்டு, தீர்ப்பளிப்போம்!

About The Author