முத்தங்கி

ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மாலை நேரங்களில் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திங்கள் முதல் புதன் வரை மூலவர் சன்னதி, வியாழன் ஹயக்ரீவர் சன்னதி, வெள்ளி தாயார் சன்னதி, சனி சக்கரத்தாழ்வார் சன்னதி, மற்றும் பிரதோஷ நாட்களில் இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் காட்டழகிய சிங்கர் சன்னதி.

நான் இப்படி போகும் இடங்களுக்கெல்லாம் எனக்கு பேச்சுத் துணையாக என்னுடன் வருபவன் தான் ரெங்கன். சுமார் 35 வயதிருக்கும். படிய வாரிய தலைமுடி. நெற்றியில் காம்பஸ்ஸில் வைத்தாற் போல் ஒரு சாந்து பொட்டு. தொளதொளவென்று ஒரு கட்டம் போட்ட சட்டை. முழங்கால் வரை ஒரு காவி படிந்த நாலு முழ வேஷ்டி, கையில் "நாச்சிமுத்து ஸ்டோர்ஸ்" என எழுதியிருக்கும் ஒரு மஞ்சள்பை. வலது கையில் எப்போதும் தாயார் சன்னதி துளசியும், மஞ்சள்காப்பும் இருந்துகொண்டே இருக்கும். சரியாக 6.45 மணிக்கு "ரெங்கா ரெங்கா" கோபுர வாசலில் எனக்காக தினமும் காத்திருப்பான்.ஒவ்வொரு நாள், நான் "எஸ்.எஸ்.என்." வாத்தியார் ட்யூஷன் முடித்துவர ஏழு மணி ஆனாலும் பொறுமையாக காத்திருப்பான். இருவரும் பெருமாளை தரிசித்துவிட்டு 8.45 மணியளவில் வெளியே வரும்போது, கோவில் மடப்பள்ளியில் தினமும் எனக்கொரு தேன்குழலையோ, அல்லது பெருமாள் வடையையோ வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருந்தான்.

பக்கத்து வீட்டு கஸ்தூரியிடம் ரெங்குவைப் பற்றி விசாரித்ததில், அவனுக்கு தெற்கு சித்திரை வீதி அனுமார் திட்டியின் பக்கத்தில் சொந்தவீடு இருப்பதாகவும், அவன் அம்மாவோடு வசித்து வருவதாகவும் கூறினான். ரெங்கன் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு காலேஜில் கிளார்க்காக வேலை பார்த்ததாகவும், 8 வருடங்களுக்கு முன்பு துறையூரில் நடந்த ஒரு ஆக்ஸிடெண்டில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவனது மனைவி இறந்துவிட்டதாகவும் கூறினான். அப்போதிலிருந்து இரண்டு மூன்று வருடங்கள் பிரமை பிடித்திருந்ததாகவும், குணசீலத்தில் 2 மாதங்கள் தங்கியிருந்து, பிறகு தான் சரியானதாகவும் கூறினான்.

1990களில் சீரங்கம் கோவில் அதிகம் பிரபல்யமடையாத காலகட்டங்களில், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கும்பல் அலைமோதும். பக்கத்து கிராமங்களில் இருந்து கும்பல் வந்தவண்ணம் இருக்கும். உள்ளூர்க்காரர்கள் நாங்கள், கும்பலை சமாளிக்க முன்தினமே, கொடிக்கம்பத்தின் எதிரே இருக்கும் அனுமார் கோவில் அருகில் இரவு சுமார் 11.30 மணிக்கு சென்று செட்டில் ஆகிவிடுவோம். காலை நாலேமுக்கால் மணியளவில், பெருமாள் புறப்பாட்டின்போது அவருடனே சென்று சொர்க்கவாசல் மிதித்துவிடுவோம்.

அந்த வருடம் நான் சொர்க்கவாசல் மிதித்துவிட்டு வெளிவரும்போது, ரெங்கன் சந்திர புஷ்கரணியின் அருகில் நின்று கொண்டு என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அன்று புதுத் துணிமணியெல்லாம் உடுத்தி சற்று வித்தியாசமாக காணப்பட்டான்.

"என்ன மாமா, பொறந்தநாளா?", என்றேன் நான்.

"இல்லடா கண்ணா! இன்னிக்கு விசேஷமோன்னோ! அதான் புது ட்ரெஸ்!" என்றான் ரெங்கு.

"அதவிடு!! முத்தங்கி சேவிச்சிட்டியா?" என்றான் கண்கள் படபடக்க.

"எங்க மாமா!! இந்த கும்பல்ல சேவிக்கறது" என்றேன் விரக்தியாக.

"நா அழைச்சுண்டு போறேன் வா!!" என்று என் கையை பிடித்துக் கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

முதலில் கோதண்டராமர் சன்னதியில் சேவை செய்து விட்டு, மணல்வெளி வழியாக என்னை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று எனக்கொரு "தேங்குழல்" வாங்கிக் கொடுத்தான்.

"நீ இங்கேயே இரு!!" என்று என்னை மடப்பள்ளி வாசலில் இருக்க சொல்லிவிட்டு ஆர்யபடாள் வாசலில் அருகில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தான். 5 நிமிடம் கழித்து என்னை அங்கே வருமாறு சைகை செய்தான்.

"வாடா போய் சேவிச்சுட்டு வந்தூட்லாம். சார்ட்ட பேசிட்டேன்", என்றான் ரெங்கன்.

உள்ளே சென்றதில் ராஜமரியாதை கிடைத்தது. பாச்சு பட்டர் தீர்த்தம், சடாரியெல்லாம் தந்தார். திருப்தியாக தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது ரெங்குவிடம் "மாமா! அந்த போலீஸ் உங்க ஃப்ரெண்டா?" என்றேன் அப்பாவியாக.

"அதுவா! நீ ஐ.ஜி. புள்ளேன்னு சொன்னேனா, அதான் அவன் பயந்துண்டு உள்ளே விட்டுட்டான்" என்றான் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.

வேலை கிடைத்து 5 வருடங்கள் கழித்து, சீரங்கம் சென்றபோது, அதே வைகுண்ட ஏகாதசி அன்று ரெங்கனை பார்க்க நேர்ந்தது. 5 வருடங்களில் ரெங்கன் அதிகம் மாறிப் போயிருந்தான். சொட்டை விழுந்த தலை. சற்று குண்டாகியிருந்தான். இப்பொழுது கையில் ஒரு செல்போன் வேறு.

"முத்தங்கி சேவிச்சுட்டியா?" என்றான்.

"இல்லையே" என்றேன்.

"வாங்கோ" என்று எங்கள் இருவரையும் தரதரவென இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

ஆம். இப்போது என் இடத்தை இன்னொரு சிறுவன் நிரப்பி இருந்தான்.

About The Author

4 Comments

  1. கீதா

    காக்கைச் சிறகினிலும் கண்ணனின் கரிய நிறம் கண்ட பாரதி போல் ரங்கன் பார்க்கும் சிறுவரிடமெல்லாம் பிறக்காமலேயே பறிகொடுத்த தன் மகனைப் பார்க்கிறான் போலும். கதை நன்றாக இருந்தது.

  2. Lakshmi Narasimhan

    நல்ல கதை களம். பழக்கப்பட்ட நடை போல இருந்தாலும் சுவையே. வாழ்த்துக்கள்… தொடரவும்….

Comments are closed.