முதுகு

கோவிலுக்கு வருகிற அந்த சில நிமிஷங்களாவது சும்மா இருக்கக் கூடாதோ? வேடிக்கைதான்.

அகிலாண்டேஸ்வரி சந்நிதி.

வெள்ளிக்கிழமை மாலை. அருகில் உள்ள பெரிய குத்து விளக்கின் சுடர்பட்டு அம்பிகையின் மூக்குத்தி ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. கண்களில் கருணைப் பிரவாகம்! பாதங்களை வருடுகின்ற ரோஜா மாலை.

"பாருங்கள், என்ன பயம் உங்களுக்கு?" என்று காட்டும் கரங்கள் காதுகளில் சக்கரமிட்ட தாடங்கம்.

இருக்கின்ற கவலைகளையெல்லாம் மறக்க வேண்டிய இந்த இடத்தில் இவர்களுக்கு இல்லாத கவலைகள் ஏன்தான் வருகிறதோ?

அதோ பாருங்களேன். அந்த ஜீன்ஸ் பேண்ட்டும் கலர் கலரான டீஷர்டும் போட்ட அவருக்கு நிச்சயமாக நாற்பத்தைந்து வயதுக்குக் குறைவில்லை. முன் வழுக்கை. அவர் மனம் அம்பிகையிடமில்லை. வாய் மட்டும் சம்பந்தமில்லாமல் ஏதோ சுலோகத்தை தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அம்பிகை சந்நிதி பக்கம் அவர் பார்வையில்லை. அங்கே எதிர்புறத்தில் துப்பட்டா அணியாமல் சூரிதார் அணிந்த அந்த காலேஜ் பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார். சீ! என்ன இது வயசுக்கான விவஸ்தையில்லாமல்!

ஆனால் அந்தப் பெண் மட்டும் லேசுபட்டதா என்ன? அதனுடைய பார்வையெல்லாம் அந்தக் காலேஜ் பசங்க இருக்கிற பக்கம்தான். அந்தப் பசங்களின் லுக்கும், அசட்டுப் பேச்சும் சகிக்கவே இல்லை.

கோவிலுக்கு வருவார்கள்! கும்பிடுவார்கள். ஆனால் இப்படியா?

என் பக்கத்தில் இருவர் சீரியசான சம்பாஷணையில் மூழ்கியிருக்கிறார்கள். "ஜீ.எம். ராஜனை எஸ்.ஈ.ஆரிலிருந்து ப்ரமோட் செய்து மாற்றி விட்டார்களாமே!"

"அப்படியா, அவர் வி.எஸ்.ஆருக்கும், ஏ.வி.கேக்கும் ஜூனியராச்சே! சூப்பர்ஸீட் பண்ணியாச்சா?"

என்ன பேச்சு பாருங்களேன்.. கோவிலில் வந்து! யார் எங்கே போனாலும் இந்த இரண்டு பேருக்கும் தங்களின் பழைய சேரிலிருந்து பக்கத்து சேருக்குக் கூட மாற்றல் கிடையாது. இவர்களுக்கென்ன? யாரோ கண்னுக்குத் தெரியாத ஜீ.எம் பற்றி கவலை?

அங்கு ஒரு ஆண்ட்டி. "ஏண்டா, சீனு, ராஜு, ஆஷா, எல்லோரும் எங்கே போய்த் தொலைந்தீர்கள்?" இப்படி கோயிலில் உரத்த குரலிலா பேசுவார்கள்?

என் பின்னால் ஒரு தலையாய பிரச்னை விவாதிக்கப்படுகிறது.

"அந்தக் குமார் சமாச்சாரம் தெரியுமோல்லியோ? அவன்தான். அவன் அப்பா போலவே இவனும் ஒரு சபலிஸ்ட். அந்த நாராயண சாமி பெண்ணோட எங்கோ ஓடிட்டானாம். டீ.வியும் சினிமாவும் பார்த்துப் பாத்து கொழந்தகள் கெட்டுக் குட்டி சுவராய்ப் போறதுகள்."

உரையாடல் எப்படி?!

நானும் வந்ததிலிருந்து அங்கும் இங்கும் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது ஒருத்தராவது சிரத்தையோடு சாமியைப் பார்கிறார்களோ! ஊஹூம்! நம்ப கோயில்களில்தான் இப்படி!

கோயிலுக்கு வருகின்ற கொஞ்ச நேரமாவது மனசை அடக்கி……!

"கற்பூர ஆரத்தி வாங்கிக்கோங்கோ" அர்ச்சகரின் குரல்.

சட்டென்று நினைவுக்கு வருகிறேன். அட! கற்பூர ஆரத்தியா? எப்போது ஆயிற்று? கவனிக்கவே இல்லையே?

About The Author

4 Comments

  1. Dr. S. Subramanian

    அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதை இக்கதை நிரூபிக்கிறது

  2. Dr. S. Subramanian

    Before somebody thinks that I have misquoted the proverb which goes as ikkaraikku akkarai pachchai”, I want to explain why I used the reverse statement. The person in the story who is observing/hearing the remarks/comments of all others in the temple is criticizing those people about not paying attention to worship but indulging in gossip. Our story-teller, on the other hand, is not indulging in gossipping (perhaps due to the absence of an associate with whom he/she can talk) but paying attention to what others are saying, forgetting the purpose for which he/she came to the temple. KarpUra Arathi was missed by this person too. Still ikkarai is more pachchai than akkarai when you consider the details.”

  3. kalpagam

    யதார்தத்தை நச்சென்று கூறும் கதை! பாரட்டுக்கள் ரஜனா!

Comments are closed.