முதல் வேலை முதல் அதிகாரி (1)

மா ஃபெங் (சீனா)

போன கோடையில் மாநில நீர்சேமிப்பு பயிற்சிப்பள்ளியில் படிப்பு முடித்தஜோரில் இங்கே வந்து சேர்ந்தேன். ஜிவுஜிவுவென்றிருந்தது, புதிதாய் வேலைக்குப் போகிற பயமா ஆர்வக்கோளாறா தெரியவில்லை. முதல் வேலைன்னா எல்லாப் பிள்ளைங்களுக்கும் இப்டித்தான் இருக்கும் போல! சைக்கிள் சவாரி. பின்ஸ்டாண்டில் பெட்டிபடுக்கை. பஸ் வேணாம் என்றிருந்தது, வேலைன்னு ஆயிட்டால் ரொம்ப தூரம் சுத்தறாப்ல இருக்குமே, பட்டிக்காடுன்னா பஸ்சாவது ஒண்ணாவது, நடராஜா சர்வீஸ், இல்லன்னா, சைக்கிள். உடம்புல தெம்பு வேணும். பழகிக்கணும்.

விடியுமுன் கிளம்பியது, போய்ச்சேர்ந்தது உச்சி, ஊருக்குள்ள நுழைஞ்ச ஜோரில் – டமால்! ஊரே சந்துபொந்தா கோமணமாக் கெடந்தது, ஒரு கிழவன். காத்துப்போன பந்தாட்டம் கோணாமாணா, நெளிசல் நடை. வெயில் மண்டையப் பொளக்குது, இவனானா முழுக்க மூடிய மேல்கோட்டு, விளையாட்டுக்கான கால்சராய், நாடாமுடிச்சு. தலையில் பெரீய்ய வைக்கோல் தொப்பி. ஏய் ஐயா, வெயிலை மறைக்கறியா, குளிருக்கு மூடிக்கறியா? குனிஞ்ச தலை, கூன் முதுகு, கையப் பின்னால கட்டிக்கிட்டிருந்தான். கால்கள் நேரா இல்லாமல் பக்கவாட்டில் நீட்டி ஒரு எகிறல் நடை. தவக்காத் துள்ளல். கிணிங் கிணிங். பெரிய எழுத்து கிணிங் கிணிங்! தலையைக் கூடத் தூக்கவில்லை அவன். சீரான அதே துள்ளலில் அவன்பாட்டுக்கு எதிரே… கிட்டத்தில்… சட்டெனத் தலையைத் தூக்க… வலப்பக்கமாக…. நானும் சைக்கிளை வலப்… டமால்! நானும் கீழே விழுந்தேன். எனக்கானால் செம அலுப்பு. பசி. வழிய மறிச்சி இந்தப் பேமானி. ஹேண்டபாரைத் தயிர்கடைய வெச்சிட்டான்,,,, கோபம் குமுறி வந்தது. நடுத்தெருவில் தவழ்ந்து சைக்கிளைத் தூக்கி நிறுத்தினேன்.

”செவுடாய்யா நீயி?” என்று கத்தினேன். ”மணியடிச்சிட்டுத்தானே வர்றேன்…?” உடனே வெட்கம், கடுமையாப் பேசுகிறேன்… அவன் ஒண்ணும் ஒதுங்கிக்காம இல்லை, என்ன கொஞ்சம் அசமந்தம். அட அவனை மோதித் தள்ளிட்டு இந்தத் தெனாவெட்டு தப்பு. அவனுக்கு என்ன பிரச்னையோ கர்மமோ. கடுப்பாயிருப்பான் கிழவன், என்னைச் சும்மா விடப் போறதில்லை, போட்டுத் தாளிக்கப் போறான்…

தொப்பியை எடுத்துக் கிட்டான். மெல்ல எழுந்தான். என்ன நிதானமாப் பேசினான்! ”இதுக்கெல்லாம் கடுப்பானா எப்டி, நான் மாட்டேன். நீயும் விழுந்து வாரினே. நானும்! அவங்கவங்க வழியப் பாத்துப் போவம்… ஆச்சா?” இப்போது அவனை நல்லாப் பார்த்து வைத்தேன். ஆள் வயசாளி ஒண்ணும் அல்ல. நாப்பதுக்கு மேல சொல்லேலாது. வெளிறிய சதுர முகம். சம்மர் வெட்டு வெட்டியிருந்தான் தலையை. என்னை ஒரு நோட்டம் பார்த்துவிட்டு தூசி தட்டிக் கொண்டான். திருப்பித் தலை தொங்க, கை பின்னால்… அதே நெளிசல் நடை, எதுவுமே நடக்காத மாதிரி! பக்கத்துத் தெரு திரும்பும் வரை அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். வித்தியாசமான ஆளுத்தான்!… வண்டியில் ஏறினேன்.

பிராந்திய கட்சியமைப்பின் நிர்வாக அலுவலகம் போனபின் எனக்கான பணி ஒதுக்கப்படும். வெள்ளப் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் எனக்கு வேலை போட்டிருந்தது. காம்பவுண்டுள்ளே தெற்கால் பெரிய வீடு. என்னொத்த வயசுக்காரன் ஒருத்தன். ”ஏய் நான் குன் யோங்சங். என்னை அண்ணன் குன்-னு கூப்டு. அல்லது தம்பி குன்! ஒன் இஷ்டம்.” அறையைக் காட்டினான். ”இதான் நம்ம அலுவலகம், வரவேற்பறை, நம்மோட படுக்கையறையும் இஃதே! குண்டுசட்டில குதிரை ஓட்டு, என்ன சொல்றே?”

உற்சாகமான நல்ல பையன். பேசிட்டே என் சாமான்களை இறக்கி அவிழ்க்க உபகாரம் செய்தான். முகம் கழுவ இதமாய் வெந்நித்தண்ணி கொண்டுவந்தான். பாதி தர்ப்பூசணி சாப்பிடத் தந்தான், ஒரே மணிநேரம், நாங்கள் சகஜமாகி விட்டோம்.

மதியம் சிறு தூக்கம் போட்டபின், வேலைபத்திக் கொஞ்சம் சொன்னான். பிராந்திய கட்சியமைப்பின் கீழான தாற்காலிக ஏற்பாடு இந்த வெள்ளப் பாதுகாப்பு மையம். முதல் செயலர் இதன் தலைவர். ரெண்டாவது நிலை அதிகாரி, கிராமக் கட்டுமானக் கழகத்தின் இணை இயக்குநர் ஐயா தியான், அவரே இப்போது நம்மை மேய்க்கிறவர். ”வா நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.”

கட்டுமானக் கழகம் தெருவில் அந்தாண்டை தனித்தனி வீடுகளின் கொத்தில் கொஞ்சம் தள்ளி கிழக்கால. நாங்கள் உள்ளே போகிறபோது மேஜையில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். தம்பி குன் சொன்னான். ”புது ஆள் ஒருத்தர் வந்திருக்காரய்யா” ஐயா தியான் தலையெடுக்காமல், ம் என்றார். ”இது தோழர் பென் ஜி” என அவன் தயங்கினான். ”படிச்சி முடிச்சி நேரா வர்றாப்டி…” பிறகுதான் தியான் ஐயா பேனாவை எறிந்துவிட்டுத் தலையைத் தூக் – தூக்கிவாரிப் போட்டது. என்ன கிரகச்சாரம்டா, எனது முதல் அதிகாரி… நான் தள்ளிவிட்ட ஆசாமிதான்!

தம்பியாபிள்ளை நான் முக்கிய பிரமுகர் என்கிற மாதிரி என்னை ஒரு நாற்காலி காட்டி உட்கார்த்தி, பிளாஸ்க்கில் இருந்து வெந்நீர் ஊற்றிக் குடிக்கத் தந்து உபசாரம் செய்தாறது. மேஜையில் தாறுமாறாக் கிடந்த புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் அடுக்கி வைத்தான். தியான் ஐயாவிடம் அசைவில்லை. என் முதல் காரியம், அவர் சொன்னார், இங்கத்திய எல்லா நதிகளையும், ஓடைகளையும் பத்தி அவன் கத்துக்கட்டும். பிறகு சில முக்கிய கிராமங்கள், அவன் போய்ப் பார்க்க வேண்டும். முனகல் குரல். பஞ்சப் பட்டினி பனாதை போல. பேசி முடிச்சி திடீர்னு சொன்னார். ”ஏய் உன்னை எங்கியோ பாத்திருக்கேன்! நாம சந்திச்சிருக்கோம்!” எங்க, என்று கேட்டான் குன் ஆச்சர்யத்துடன். என் முகம் சிவந்துவிட்டது, நான் என்ன பேச! என் அதிர்ஷ்டம் அப்போதுதான் யாரோ ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு உள்ளே… நாங்கள் வெளியே. ஜுட்!

திரும்பியபோது குன் என்னைக் கேள்விமேல் கேள்வி துளைத்தெடுத்தான். காலையில் நடந்ததை அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. ”அது பரவால்ல, அதுக்காகவெல்லாம் ஒன்னப் போட்டுப்பாக்க மாட்டார். ஐயா நல்ல மாதிரி” என்று ஆறுதல் சொன்னான் குன். ”நான் செம கடுப்பாயிருந்தேன். மணியை அடி அடின்னு அடிக்கிறேன், அந்தாள் தலையை நிமித்தவே இல்லை, கண்டுக்கிறவே இல்லை…” குன் சிரித்தான். ”எதுக்கும் அசங்க மாட்டாரு, பீரங்கி வெடிச்சாலே பொட்டுவெடிதான் அவருக்கு!”

முதல் வாரத்தில் ரெண்டே வாட்டிதான் எங்கள் அலுவலகம் வந்தார். நானும் குன்னும் அவர் இடம் போய் ஆகிக்கழிந்த வேலைகள் பத்திச் சொல்ல ஒரு வாட்டி. ரொம்ப சாவகாசமான மனுசன் என்றுதான் தோணியது. நடக்கிறபோதே முனகினார். முணுமுணுத்தாப் போலப் பேசினார். எந்தப் பிரச்னையைச் சொன்னாலும் கொட்டாவியுடன் கேட்டுக் கொண்டார்… எதுவுமே அந்தாளை உலுக்க முடியாது போலிருந்தது. சகதி எருமை. அக்கடான்னு ஒரு அதிகாரி, என் அதிர்ஷ்டந்தான் அது. ஆனால் எனக்குன்னு என்ன வேலை தந்தாலும் என்னால முடிந்த அளவு அதை சிரத்தையாச் செய்தேன்…

முக்கியமாய் நான் என் வேலை என்னென்ன என்று பழகிக் கொள்ள வேண்டியிருந்தது. அதே சமயம் பக்கத்தூர்களுக்கு வெள்ளக் கட்டுப்பாடு எற்பாடுகளைப் பற்றித் தகவல் சொல்ல தம்பி குன்னுக்கு உதவி செய்தேன். வரைபடத்தில் பிராந்திய கம்மாய்களையும் கால்வாய்களையும் அறிந்து கொண்டேன். நிறைய விவரங்கள் வாசித்தேன். இந்தப் பக்கம் மூணு ஆறுகள், மேற்கு மலையில் இருந்து கீழே சமவெளிக்கு ஓடிவருகின்றன. பெரும்பாலும் இவை வறண்ட மணல்வெளி. ஆகஸ்டு 1954ல் பெரிய பெருக்கு பின்வருடங்களில் ஒண்ணும் நடக்கவில்லை. இந்த வருடமும் அப்டியொண்ணும் விசேஷமா நடந்துறாது, என்றுதான் இருந்தது. அடைமழைக்காலமும் முடிகிற வேளை அது. ‘ஆடி’ அடங்கி விட்டது! மழை மூட்டம் எதுவும் இல்லை. வானம் நிர்மலம்.

ஆனால் நான் வந்த ஒன்பதாவது நாள் இடிச்சது பார் ஒரு இடி. பகலெல்லாம் மழைச்சாயலே இல்லை, மாலை வரமேற்கே மேகந் திரண்டது. மணி பத்து, குன் படுக்கையைக் கிடத்தி ஏறியாச்! அவன் கேட்கிறாப் போல எதோ நாவலை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. ழாங் பள்ளத்தில் இருந்து சேதி. மலையாற்றிலிருந்து யோங்கன் நதிக்கு விநாடிக்கு நூறு கனமீட்டருக்கும் மேலே தண்ணீர் வரத்து! அதிர்ச்சியாய் இருந்தது. நான் படித்தறிந்தபடி யோங்கன் நதியில் 1954ல் கூட இத்தனை பெருக்கு இல்லை… குன்னிடம் சொல்ல, ஆளுக்கு ஒரு தொலைபேசியில் படபடவென்று பள்ளமான பகுதிகளுக்கெல்லாம் தகவல் பறந்தன. அதற்குள் ஆன்லே பகுதியில் இருந்து வந்த சேதி கலவரப்படுத்தியது. தொலைபேசியை எறிந்தபடி அலறினேன். ”ஆன்லே அணையில் உடைப்பெடுத்து விட்டது!” அறையிலிருந்து தியான் ஐயாவுக்குத் தெரிவிக்க தலைதெறிக்க ஒடினேன். எப்பவோ தூங்கப் போயிருந்தார். ஆனால் விளக்கு எரிந்தபடி யிருந்தது. ”ஐயா எந்திரிங்க…” நான் கத்தினேன். ”யோங்கன் ஆறு கொந்தளிக்கிறது… ஆன்லே அணையில் வேறு உடைப்பு…”

தலைதூக்கிப் பார்த்தார். ”ஆன்லேயில் எந்தப் பக்கமா உடைப்பு?” நெடுஞ்சாலைக்குக் கிழக்கால. நாற்பதடிக்கு மேல அகலமான உடைப்பு. ஒரே துள்ளா எழுந்து என்னோடு மைய அலுவலகம் வரப் போறார் என நினைத்தேன். கிடந்த கோலத்திலேயே ”ச் அது பரவால்ல” என்றார். ”அதைவிடப் பள்ளமான வயலுக்குக் கொஞ்சம் போல நீர் வரத்து குறையும் விவசாயத்துக்கு… அவ்ளதான்.”

”நான் சொன்னது கேட்டிச்சா?” எனக்குக் கோபம். ”ஆன்லேயில் உடைப்புன்னு சொல்லிட்டிருக்கேன்.” – ”அதனால என்னான்றே? தண்ணி பெருகி வடியட்டும் அதுபாட்டு…” படுக்கைலேர்ந்து அவரை இழுத்து பெல்ட்டால விளாறலாமா… தலைவரா இவர், எப்டிதான் இவரைப் போட்டாங்களோ… எலும்பே இல்லாத அற்பப் பிறவி. இவரைப் போல சத்தியமா நான் பார்த்ததே இல்லை.

அப்போதுதான் குன் உள்ளே பாய்ந்தோடி வந்து கத்தினான். ”சன்சா நதிலயும் நீர்மட்டம் ஒசந்துகிட்டே வருது…” டக்கென்று எழுந்து உட்கார்ந்தார். ”நீர் வரத்து எவ்வளவு?” சன்சா நகரச் செயலாளர் பேசினார். அளவு சரியாத் தெரியல, என்றாலும் டிராகன் அரசன் கோயில் பின்பக்கம் வரை ஏறியிருக்கு… ”அப்டின்னா குறைஞ்சது விநாடிக்கு 90 கன மீட்டர்.” போர்வையை உதறி வீசினார். ”ஹைமன், தியான்ஜியா ஊருக்குச் சொல்லு போயி” என்றார் என்னைப் பார்த்து. ”எல்லாரும் அணைப் பக்கமிருந்து வெளியேறச் சொல்லு. ஜல்தி!”

எங்கள் அலுவலகத்துக்கு ஓடிவந்த போது நிறையப் பேர் வந்திருந்தார்கள். தோழர் ஹாவ் (எங்கள் புதிய செயலாளர் அவர்), தோழர் வேங், (எங்கள் குழுவின் தலைமையலுவலக முதல்வர்), இயக்குநர் நியூ, (ராணுவப் பிரிவு), பிராந்திய பொதுப் பணித்துறை ஆட்கள் நிறையப் பேர்… எல்லாருக்கும் குன் தகவல் சொல்லியிருக்க வேண்டும். சிலர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள், சிலர் வரைபடத்தை வைத்துக் கொண்டு நீர்வழிகளைப் பற்றி பரபரப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் ”தியான் ஐயா எங்கே?” என்றார்கள். ”வந்திட்டிருக்காரு” என்றான் குன்.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. S SANKARANARAYANAN

    மொழிபெயர்ப்பு என்ரு குரிப்பிடவும் யென் பெயரை தமிழில் யெச் ஷன்கரனரயனன் என்ரு வெலியிடவும்

  2. S SANKARANARAYANAN

    pls mention it is a translation – you can put my name as thamizhil – s shankaranarayanan
    thanks

Comments are closed.