"ஆனால், ஜேட் மாமன்னருக்கு மிக உதவியாக இருந்தது அவரின் மந்திரச் சரடு. வானத்தின் மீது இருந்த அவரின் மாளிகையிலிருந்து சன்னல் வழியாக அவர் குனிந்து கீழே பார்ப்பார். வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கடுமையாக உழைத்ததைக் கண்டு மிகவும் பரிதாபப் பட்டார். அவர்களுக்கு இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவென்று ஒரு சரடு கொடுத்தார். வேலை துரிதமாகவும் சுலபமாகவும் நடந்தது."
"ச்சின் மன்னனுக்கு இந்த மந்திரச் சரடைப் பற்றி புரிந்து போனது. அவன் சரடை அவிழ்க்கச் சொன்னான். அவற்றைச் சேர்த்துப் பின்னி ஒரு நீண்ட சாட்டையாக்கினான். சாட்டையை வைத்து சுளீரென்று அடித்தான். இந்தச் சாட்டையை வைத்து அடித்து அடித்தே மலைகளிடம் வேலை வாங்கினான். பாறைகளையும் சாட்டையை வைத்து அடித்தான். பாறையிலிருந்து உதிரம் கூட வழிந்தது. இன்றும் பதிக்கப் பட்ட அந்தச் சிவப்பு நிறக் கற்கள் சுவரில் காணப் படுகின்றன."
"சுவர் கட்டும் வேலை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. மலை மீது வடக்கே பாலையை நோக்கி முன்னேறியது சுவர். படை படையாக இருந்த கட்டுமான ஊழியர்களுக்கு இடையே மேற்பார்வையாளராய் ஒரு பழைய அரச குடும்பத்து இளவரசர் இருந்தார். அவரைக் கண்டாலே ச்சின் மன்னனுக்கு கடும் வெறுப்பு. ஒரு நாள், திடீரென்று இளவரசர் காணாமல் போனார். அதே நேரத்தில் அந்த இளவரசரின் மனைவி தன் வீட்டில் தன் கணவனுக்கு ஏதோ ஆபத்து நேர்கிறது என்று உணர்ந்தாள். மிகவும் கவலையுற்ற அவர் தன் கணவனைத் தேடி பெருஞ்சுவருக்கே போனாள். அங்கே தன் கணவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று பார்ப்பதே அவளின் நோக்கம்."
"ஒரு கட்டை வண்டியில் தான் பயணம் செய்து போனாள். வேலையிடத்துக்கு வந்த பிறகு அங்கே ஊழியர்களிடையே தன் கணவன் இல்லை என்று அறிந்தாள். யாருக்கும் கணவனைப் பற்றிய எந்த விவரமும் சொல்லவும் இல்லை. ச்சின் மன்னனையே கேட்க நினைத்து மாளிகைக்குப் போனாள்."
"என் கணவன் எங்கே என்று சொல்லுங்கள் என்று மன்றாடினாள். ‘ஒரு விபத்து ஏற்பட்டுப் போனது. சுவர் விழுந்த போது அவன் மீது விழுந்து விட்டது. நீ கவலைப் படாதே இளவரசி, இங்கே என் மாளிகையில் என் செல்ல மனைவியாக நீ வசிக்கலாம்’, என்றார்."
"இளவரசி கதறினாள். ச்சின் மன்னனே தன் கணவனைக் கொன்றிருக்க வேண்டும் என்று அவளின் உள்ளுணர்வு சொன்னது. நிச்சயம் அவளுக்கு நியாயமோ இரக்கமோ கிடைக்காது என்று அவள் அறிந்தே இருந்தாள்."
"அந்தப்புரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட போது, சீக்கிரமே நான் நியாயம் கேட்க டிராகன் அரசரிடம் போவேன் என்று சூளுரைத்தாள். சட்டென்று பிடியிலிருந்து விடுபட்டு ஓடிப்போய் அங்கிருந்த குளத்திற்குள் குதித்தாள். உடனேயே, அவள் டிராகன் அரசனின் முன்னால் நின்றாள். "என்ன விசேஷம் இளவரசி? சுவர் வேலை எப்படிப் போகிறது?", என்று கேட்டார் டிராகன் அரசர்.
"வேலை நடந்த படியே தான் இருக்கிறது. ஆனால், கொடுங்கோலன் ச்சின் அரசன் தான் வேலையாட்களை மிகவும் கொடுமைப் படுத்துகிறான். ஈக்களைப் போல இறந்து கொண்டிருக்கிறார்கள் உழைப்பாளிகள். என் கணவனும் கூட நிழல் உலகிற்கு அனுப்பப் பட்டிருக்கிறான். அரசே, அந்த அப்பாவி மக்களுக்கு உதவிட தயவு செய்து யாரையேனும் அனுப்புங்கள்."
"அந்த மந்திரச் சாட்டையில்லாவிட்டால் அவனால் ஒன்றுமே செய்ய முடியாது. மிக புத்திசாலியான என் மனைவியையே நான் அனுப்புகிறேன். போய் எப்படியாவது அந்த சாட்டையை அபகரித்துக் கொண்டு வந்து விட்டால் சுவர் கட்டும் வேலை நின்று விடும். மக்கள் பிழைப்பர்."
"அடுத்த நாளே, மிக அழகிய இளவரசி ச்சின் மாளிகையில் தோன்றினாள். அந்தக் கொடுங்கோல் அரசனின் கவனத்தை ஈர்த்தாள். அரசன் இளவரசியை விட்டுப் பிரிவதேயில்லை. பைத்தியமாக அவளுடனேயே இருந்தான். ஆகவே, சுவர் கட்டுமிடத்திலிருந்து காணாமல் போனான். மந்திரச் சாட்டையை மட்டும் தன்னிடமே கவனமாக வைத்திருந்தான். தூங்கும் போதும் தன் மணிக்கட்டில் முடிந்து கொண்டான். இளவரசி அதை அவிழ்த்துக் கொண்டு ஓடி விட்டாள்."
"விழித்துப் பார்த்த ச்சின் மன்னனுக்கு கோபம் மிகுந்தது. சாட்டையுடன் இளவரசியும் காணாமல் போயிருந்ததால். அவனின் கோபமெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. சாட்டை போனது போனது தான். மலைகளும் பாறைகளும் அவனின் ஆணைக்குக் கட்டுப் படவில்லை. ஆறுகள் அவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நீரை நிறுத்தவில்லை. ஆகவே, சுவர் கட்டும் பணியை நிறுத்த வேண்டியதாகி விட்டது. பாதியிலேயே நின்று போனது பெருஞ்சுவர்."
"அவ்வளவு தானா கதை?", என்று கேட்டான் பேரன்.
"ம்,. அவ்வளவு தான். பிற்காலத்தில் எத்தனையோ பேர் சுவரைக் கட்டி முடிக்க முயன்றார்கள். ஆனால், யாராலும் முடிக்க முடியவில்லை. பாலைவனத்தில் பாதியில் நின்றது சுவர். முதலில் திட்டமிடப்பட்ட குதிரை லாட உருவம் உருப்பெறவேயில்லை."
(முடிந்தது)
(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“