"யாருக்கு முதல் இன்விடேஷன்?"
"ராஜேந்திரனுக்குத்தான்" என்றேன்.
ஊர்மிளா இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. திகைப்புடன் என்னைப் பார்த்தாள்.
"உங்க அண்ணனுக்கா?"
தலையசைத்தேன். அவள் வியப்பு புரியாமல் இல்லை.
"இன்னும் உங்களுக்குப் புத்தி வரலே…" என்றாள் விமர்சனக் குரலில்.
எதிரே மஞ்சள் அட்டைகள். சுந்தர் நகரில் கிரஹப்பிரவேசத்திற்கு அவசியம் வருமாறு அழைப்புடன். கீழே… சம்பத், ஊர்மிளா சம்பத்.
அவருக்கு எதுக்கு அனுப்பணும்? நம்மை என்னெல்லாம் பேசினார்? சுத்தமா மறந்து போச்சா அவ்வளவும்?
மறக்க முடியுமா? பிறந்த தினத்திலிருந்து இன்றுவரை அண்ணன் என்ற உறவில் ஒரு அந்நியன். பிறந்த சில நாட்களில் அம்மா. சில வருஷங்களில் அப்பா. முக்கிய உறவுகளை இழந்த எங்களுக்கு ஆதரவு விஸ்வநாத பெரியப்பா.
கறாராய்ச் சொல்லிவிட்டார். "ராஜூவை நான் படிக்க வச்சிடறேன். அப்புறம் ராஜூ வேலை தேடிக்கிட்டு தம்பியைக் கரை சேர்த்துரணும்."
பெரியப்பா சொன்ன மாதிரியே ராஜூ வேலையில் சேர்ந்ததும் உதவியை நிறுத்தி விட்டார். எனக்கு சி.ஏ. படிக்க ஆசை. ராஜுவுக்கு என்னைக் கழற்றிவிட ஆசை.
"அதெல்லாம் வேணாம், நீயும் ஒரு வேலை தேடிக்க."
படித்த பி.எஸ்.சிக்கு பேங்க் வேலை சுலபமாய்க் கிடைத்தது. ராஜுவுக்குத் திருமணம் ஆனது. மன்னி வந்ததும் சொந்த வீட்டுக்கு அடி போட்டாள்.
"நீதாண்டா பார்த்துக்கணும்."
ஒரு வேலையை என்னிடம் வாங்குவதில் சமர்த்தன். வெண்ணையாய்க் குழைவான். எத்தனை லீவு. எவ்வளவு அலைச்சல். ஒவ்வொரு கல்லாய்ப் பார்த்துக் கட்டிக் கொடுத்தேன். கிரஹப்பிரவேசத்தன்று முக்கிய ஸ்தானங்களில் அண்ணியின் உறவுகள்! நான் வேண்டாத கறிவேப்பிலை.
எனக்குப் புரிய ஆரம்பிக்கும்போது அதற்குள் என்னால் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் வாங்கிவிட்டிருந்தான் அவன். என் சம்பளத்தைக் கூட!
"நீ இப்ப தனி ஆள். உனக்கு என்ன செலவு? சாப்பாடு கூட இங்கதானே?"
நானே பெண்ணைத் தேடிக் கொண்டேன். ஊர்மிளாவை விஸ்வநாத பெரியப்பாதான் சிபாரிசு செய்தார். ராஜேந்திரன் திருமணம் செய்து வைப்பான் என்று பொய் சொன்னேன்.
நான் இல்லை என்ற நினைப்பில், அண்ணியும் அவனும் பேசியதை ஒரு நாள் கேட்க நேர்ந்தது.
"என்ன பதில் சொல்றது, அந்தப் பொண்ணு வீட்டுலேர்ந்து தெனம் வந்து விசாரிச்சுட்டுப் போறாங்க. என்னமோ கடன் கொடுத்தாப்பல."
"இது வேற உபத்திரவம். ஜாதகம் பொருந்தலேன்னு விரட்டிரு."
"நான் எதற்கு நடுவுல? அப்புறம் வீண் பொல்லாப்பு. நீங்களே அதையும் சொல்லிருங்க. இப்ப நாம செலவழிச்சுத்தான் கல்யாணம் செய்யணும் உங்க தம்பிக்கு."
"அவனாலே எப்பவுமே எனக்கு நிம்மதி இல்லே." ராஜேந்திரன் சூள் கொட்டினான்.
என்னுள் ஏதோ மளுக்கென்று முறிந்தது. நானே வெட்கம் விட்டு ஊர்மிளா வீடு தேடிப் போனேன்.
"நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவேன் என்ற உறுதியும் இருந்தால் போதும்."
ஊர்மிளாதான் எனக்குச் சாதகமாகப் பேசியிருக்கிறாள். மணமாகி வீட்டினுள் நுழைந்தபோது ஆரத்தி கூட இல்லை.
"வேற வீடு பார்த்துக்க" என்ற விரட்டல்தான். அப்போது முடிவெடுத்ததுதான். அதுவரை குழந்தை இல்லை; வேறு கேளிக்கை இல்லை. முரட்டுப் பிடிவாதம். நினைத்ததைச் சாதிக்க ஊர்மிளாவின் அப்பாவும் கடன் தந்தார்.
இதோ, என் உழைப்பின் பலன். சொந்த வீடு.
என்னை நினைவுகளிலிருந்து மீட்டாள். "கர்வமா உங்கண்ணா எதிர்ல நிமிர்ந்து பார்க்கவா?"
"இல்லே. நன்றிக் கடன்" என்றேன் நிதானமாய்.
"என்ன சொல்றீங்க?"
"கிரியா ஊக்கின்னு கேள்விப்பட்டிருக்கியா? அவன் மட்டும் தன் கூட்டுல என்னை அடைச்சிருந்தா சொந்தமா பறக்கணுங்கிற சிந்தனையே எனக்கு இல்லாமப் போயிருக்கும். நிர்த்தாட்சண்யமா அவன் உதறினதுனால, இப்ப எனக்குன்னு வீடு, என் ரசனை புரிஞ்ச மனைவி, நிம்மதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதுக்கு நன்றி சொல்றது அவசியம்தானே?" என்றேன்.
என்னை இப்போது கனிவோடு பார்த்தாள்.
************************