வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளை என்கிற அசைக்க முடியாத தகுதியின் அடிப்படையில், பெற்றோரை வைத்துப் பேணுகிற பாக்கியம் எனக்கே வாய்த்தது.
சகோதரிகளெல்லாம் கல்யாணமாகிப் போய், இந்தியாவின் பல பாகங்களில் வசித்தாலும், வாப்பா அம்மாவைப் பார்க்க ரெண்டு மூணு மாசத்துக்கொருதரம் மெட்ராஸ்க்கு வந்து போகிற அளவுக்குப் பாசப் பிணைப்பு நீடித்தது.
டாக்டர் தங்கச்சி மட்டும் அரேபியா போய்த் திரும்பி வந்து சென்னையில் ஸெட்டில் ஆனாள்.
ஆனால் எங்களையெல்லாம் பார்க்கிற வசதிதான் வாப்பாவுக்குக் குறைந்து கொண்டே வந்தது. கண் பார்வை மங்க ஆரம்பித்தது.
அதி தீவிர ஆன்மீகவாதியான வாப்பா, கண்பார்வை குறைந்து கொண்டே வந்த காலத்திலும் அதிகாலையில் சுபுஹ் தொழுகைக்குப் பின்னால் குர்ஆன் ஓதுவார். கண்ணாடியைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு, எழுத்துக்களுக்கும் கண்களுக்குமிடையே கண்ணாடியை முன்னும் பின்னும் நகர்த்தி ஃபோக்கஸ் செய்து வாசிப்பார். மிச்சமிருக்கிற பார்வைக்கும் இது குந்தகமாய்ப் போகும் என்று சொல்கிறதைக் காதில் போட்டுக் கொள்ளாத அளவுக்கு ஆன்மீகப் பிடிவாதம்.
நாளாவட்டத்தில், கொஞ்சங்கூட மிச்சமில்லாமல் பார்வை பூஜ்யமாகிப் போனது. ரெண்டு கண்களிலும் மாறி மாறி செய்த ஆப்பரேஷன்கள் டாக்டர்களுக்குத்தான் பிரயோஜனப்பட்டன.
குடும்பத் தலைவராய் ஆட்சியிலிருந்த காலத்தில் வாப்பா சர்வாதிகாரியாயிருந்தவர். அந்தச் செருக்கையும் பேராண்மையையும் அப்படியே கட்டிக் காத்து வந்தார். பார்வை பறிபோனதைப் பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டார், பிறர் பேச சம்மதிக்கவும் மாட்டார்.
வாழ்க்கையே இருண்டு போய் விட்ட வேதனை அவருடைய உள்மனசில் இல்லாமலா இருக்கும்! ஆனாலும் ஒரு முக்கல் முனகல் கிடையாது.
இந்தப் பார்வையற்ற நிலையிலும், தினமும் ஐந்து வேளை மசூதிக்குப் போய், ஜமாத்தோடு தொழுகையில் கலந்து கொண்டேயாக வேண்டும்.
ஸ்கூட்டரில் நான் கூட்டிக் கொண்டு போவேன். என்னால் இயலாத சந்தர்ப்பங்களில் கடைப் பையனொருவன் சைக்கிளில் அழைத்துப் போவான். கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் சைக்கிளின் காரியரில் உட்கார்ந்து போவது பயங்கர அசௌகரியம் என்றாலும் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவே மாட்டார்.
வாழ்க்கையில் ஒரேயொரு முறையாவது வாப்பாவின் வேதனையை உணர வேண்டும், ஒரேயொரு நாளாவது, அவருடைய இருண்ட உலகத்தில் பிரவேசித்துப் பார்க்க வேண்டுமென்கிற தார்மீக உந்துதலில், ஒரு ஞாயிற்றுக் கிழமை முழுக்கக் கண்களை மூடிக் கொண்டு வாழ்வது என்று முடிவெடுத்து, காலைத் தொழுகையிலிருந்து ஆரம்பித்தேன்.
சில மணி நேரங்கள் சிரமத்தோடு கழிந்தன.
குளிப்பதற்கென்று பாத்ரூமுக்குள்ளே போனபோது, கை நழுவி விழுந்த சோப்பைத் தடவித் தடவிப் பார்த்துக் கண்டெடுக்க முடியாமற் போய்த் தோற்றுக் கண் திறக்க நேர்ந்தது.
சில மணி நேரங்கள் என்னால் தாக்குப் பிடிக்க முடியாத இருட்டு வாழ்க்கையை வாப்பா ஏழு வருஷமாய், மனவுறுதியோடு வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்கையில் மனசு அழுதது அவருக்காக.
கண்களைப் பாதுகாக்க முடியாமற் போனாலும் உடலின் மற்ற அவயவங்களின் ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் ரொம்ப ஆர்வம் வாப்பாவுக்கு.
படுக்கையில் படுத்துக்கொண்டே கைகளையும் கால்களையும் மடக்கி நிமிர்த்தி உடற்பயிற்சி செய்வது அவருடைய வழக்கம். அவருடைய அறைக்குள்ளே, சுவரைத் தொட்டுக் கொண்டே வாக்கிங் போவார். அவ்வப்போது, தட் என்றொரு சத்தங் கேட்கும்.
அறைக்குள்ளே எட்டிப்பார்த்தால், எதிர்த்த சுவரில் அவர் முட்டிக் கொண்டது தெரிய வரும். கேட்டால், "இல்லியே" என்பார்.
பாத்ரூமுக்குள்ளே தனியாய்ப் போகாதீர்களென்றால், தனியாய்த்தான் போவார்.
பாத்ரூமுக்குள்ளே வழுக்கி விழுந்து, நெற்றிக்கு மேலாய்த் தலையில் தோல் கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த அர்த்த ராத்திரியில் போய் டாக்டர் தங்கச்சியை எழுப்பிக் கூட்டிக் கொண்டு வந்தேன்.
டெட்டால் போட்டுத் துடைத்து விட்டு, தோல் மரத்துப் போகும் ஊசி செலுத்தாமலேயே அவள், வழுக்கைத் தலையில் தையல் போட்டாள்.
அர்த்த ராத்திரியில் அப்படித்தானே செய்ய முடியும்!
தையல் போடுகிற மூணு நிமிஷமும் ஒரு உஸ் ஒலி கூட எழுப்பாமல், ஒன்றுமே நடக்காதது போலத் தங்கச்சியிடம் சுகம் விசாரித்துக் கொண்டிருந்த வாப்பாவின் ஆண்மைத் திமிர் அளவிட முடியாதது.
வாப்பாவின் அறையை ஒட்டினாற்போலத்தான் கிச்சன். கிச்சனில், சுவற்றை ஒட்டினாற்போல டைனிங் டேபிள்.
காலையில் நாஷ்ட்டா ரெடியாகிற நேரம் அவருக்கு மானசீகமாய்ப் புலப்படும் போல. சுவரைத் தடவித் தடவி வந்து, டைனிங் டேபிளில் அவருக்குள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொள்வார்.
அன்றைக்கும் அப்படித்தான் வந்து உட்கார்ந்து, அவருக்கெதிரேயிருந்த ப்ளேட்டைத் தடவிப் பார்த்து, ஈரமில்லை என்று உறுதி செய்து கொண்டு, இட்லி தோசைக்குக் காத்திருந்தார். இட்லி தோசையைவிட அண்டா என்று அறியப்படுகிற முட்டை முக்கியம்.
"ராத்திரி முட்டைல வெங்காயம் போட்டிருந்திச்சி. வெங்காயம் வேண்டாம்னு சொல்லு" என்றார் வாப்பா, பக்கத்திலிருந்து பரிமாறிக் கொண்டிருந்த என்னிடம்.
"இல்ல வாப்பா, இதில வெங்காயம் இல்ல. இது ஒங்களுக்குப் புடிச்ச புல்ஸ் ஐ’ என்றேன்.
"என்ன பேர் சொன்ன?"
"புல்ஸ் ஐ வாப்பா."
"புல்ஸ் ஐ ன்னா மாட்டுக் கண்ணுன்ல அர்த்தம்?"
"ஆமா வாப்பா, மாட்டுக் கண்ணுதான்."
தட்டிலிருந்த முட்டையில் விரல்களைப் பதித்த வாப்பா, கொஞ்ச நேரம் அப்படியே இருந்தார். பிறகு வாயிலிருந்து வார்த்தைகள் மெல்ல உதிர்ந்தன.
"மாட்டுக் கண் எதுக்கு, எனக்கு இப்ப வேண்டியது மனுஷக் கண் இல்லியா மகனே!"
வாப்பாவுடைய வெளிறிப்போன விழிகளில் முதன் முதலாய்க் கண்ணீர் முத்துக்கள் திரண்டிருந்தன.
(சமநிலைச் சமுதாயம், மார்ச் 2009.)