முட்டை (1)

பாளைங்கோட்டைக் கான்வென்ட்டில் நானும் என்னுடைய சகோதரிகளும் படித்துக் கொண்டிருந்த கால் நூற்றாண்டுக்கு முந்தின காலத்தில், திருநெல்வேலி ஜில்லாவிலேயே யூனிஃபாம் அமுலில் இருந்த ஒரே பள்ளிக்கூடம் எங்கக் கான்வென்ட் தான். அன்றைய திருநெல்வேலி ஜில்லா என்பது இன்றைய தூத்துக்குடி, கன்யாகுமாரி மாவட்டங்களையும் உள்ளடக்கிய விசாலமான நிலப்பரப்பு. கிட்டத்தட்டக் கால்வாசித் தமிழ்நாடு.

பச்சை வெள்ளை சீருடையில், கோனார் ஒற்றை மாட்டு வண்டியில், கோஸ் பெட்டியில் உட்கார்ந்து பள்ளிக்குப் போகிற போது, துணிப் பைக்கட்டையும் தூக்குச் சட்டியையும் சுமந்து கொண்டு, மஃப்டியில் போகிற மற்ற லோக்கல்ப் பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பார்க்க இளக்காரமாயிருக்கும்.

யூனிஃபாம் எல்லாம் சூழ்ச்சியாய் இருந்தாலும், அந்தக் காலத்தில் பாளையங்கோட்டைக் கான்வென்ட்டில் இங்லீஷ் மீடியம் கிடையாது. மூணாங் கிளாசில் தான் ஏ பி ஸி டி யே சொல்லித் தருவார்கள். அதிலும் ஒரு ஆறுதல் என்னவென்றால், மற்ற சாதாரணப் பள்ளிக்கூடங்களில் ஆங்கில அரிச்சுவடிக்கே ஆறாங்கிளாஸ் வரைக் காத்திருக்க வேண்டும்.

திருவனந்தபுரம் அத்தையின் குட்டிக் குட்டிப் பெண்கள் கால் வருஷ அரை வருஷ விடுமுறைகளில் பாளையங்கோட்டைக்குப் படையெடுக்கிற நாட்களில், எங்கள் மேலே இரக்கமேயில்லாமல் இங்லீஷில் போட்டுத் தாக்குகிறபோது, எங்களுடைய கான்வென்ட் மமதை காணாமற் போகும்.

கோழி முட்டை என்கிற கோள வடிவமான வஸ்து, ஓட்டுக்குள்ளேயிருந்து வெளியேறி, பக்குவப்படுத்தப்பட்டுப் பரிமாறப்படுகிற போது, அதனுடைய ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு என்பது போன்ற இன்றியமையாத தகவல்களெல்லாம் அந்தத் திருவனந்தபுரத்துப் பெண்குட்டிகளின் ஆங்கில உரையாடல்களிலிருந்து நாங்கள் கிரகித்துக் கொண்டது.

வெங்காயம் நறுக்கிப் போட்டுத் தோசை மாதிரி வார்த்தால் ஆம்லெட்டாம்.

அதையே கிண்டிவிட்டுப் பொறியலாக்கினால் ஸ்க்ராம்பிள்.

வெங்காயமில்லாத வெறும் முட்டைக் கலக்கல் ரம்பிள் டம்பிள்.

கலக்காமல் கொள்ளாமல் அப்படியே தோசைக் கல்லில் பொறித்தெடுத்து பெப்பர் சால்ட் தூவிப் பரிமாறினால், அது புல்ஸ் ஐ.
இம்மாதிரியான முட்டை ஐட்டங்களோடு, எனக்கே எனக்கான பிரத்தியேக முட்டை ஸ்பெஷல் ஒன்றும் இருந்தது. மிலிட்டரியிலிருந்த எங்கப் பெரிய மாமா சொல்லிக் கொடுத்த வித்தை.

முட்டையின் குவிந்த ஓட்டுப் பகுதியில், குண்டூசி அல்லது ஊக்கு கொண்டு மிக நுண்ணிய துளையொன்று போட்டு, அதில் வாய்வைத்து உறிஞ்சியிழுப்பேன். வெள்ளைக் கரு முதலில் வாய்க்குள்ளே வரும். தொடர்ந்து, மஞ்சள் கரு வருகிறபோது, நம்ம நாக்கு சும்மாப் பரமானந்தம் கொள்ளும். சோலி முடிந்ததும், அந்தக் காலி ஓட்டைப் பூப்போல வைத்து விடுவேன், மற்ற முழு முட்டைகளோடு. கோழி முட்டை அல்ல, அது போலி முட்டை என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியாது. பாட்டி, அம்மா, அக்கா எல்லாருமே ஏராளமாய் ஏமாந்திருக்கிறார்கள்.

இந்த முட்டை உறிஞ்சல் என்னுடைய ஏகபோக உரிமையென்றாலுங்கூட, புல்ஸ் ஐ என்பது தான் நமக்குப் பிரியமான ஐட்டம். பிற்காலத்தில் சென்னைக் கையேந்தி பவன்களில், ஆப்பாயில் என்று அறியப்பட்டுப் பிரபலமடைந்த உணவு வகை.
ஹாஃப் பாயில்டு என்பதன் தமிழ் மொழி பெயர்ப்புத்தான் ஆப்பாயில் என்பது என்று புரிபட எனக்குக் கனகாலம் ஆச்சு.
அம்மா புல்ஸ் ஐ போட்டார்களென்றால் வெள்ளைப்பரப்பின் மையத்தில் மஞ்சள் கரு, மிக மெல்லிய ஆடையினால் போர்த்தப்பட்டுப் புடைத்துக் கொண்டு நிற்கும். விரலால் மிருதுவாய் நீவினால் ஆடை நசிந்து மஞ்சள் வழியும். அதில் விரலை முக்கிச் சூப்பினால், ஆஹா, பரவசப்பட்டு நாக்கு ஒரு முறை பரலோகம் போய்த் திரும்பும்.

கோழி முட்டை ஒன்றின் விலை அப்போது ஒரணா.

அதாவது ஆறு நயாப் பைசா.

ஆனாலும் கோழி முட்டை அந்தக் காலத்தில் கடைகளில் காணக் கிடைக்காத அரிய வஸ்து. கூடையில் வைத்துக் கூவிக் கொண்டே தெருவழியாய் வருகிறவர்களை வழிமறித்து வாங்கிக் கொண்டால் தான் உண்டு.

காசு கொடுத்தவுடன் முட்டைகள் கைமாறி விடுவதில்லை.

முட்டைகளெல்லாம் செக் அப் செய்து தான் வாங்கப்படும்.

ஒரு முக்கால் பாத்திரத் தண்ணீரில் முட்டைகள் ஒவ்வொன்றாய் மெல்ல வைக்கப்படும். தண்ணீரில் முட்டை முங்கி விட்டால் நல்ல முட்டை. நீரில் மிதந்தால் கூமுட்டை.

ஃப்ரிட்ஜ் என்கிற ஐஸ் அலமாரி அரண்மனைகளில் மட்டுமே கொலுவிருந்த அந்தக் காலத்தில் முட்டைகளைப் பரிசோதித்து வாங்கிக் கொள்வது அவசியமாயிருந்தது.

எங்களுடைய பரம்பரை வீடு, அரண்மனை இல்லையென்றாலும் அட்டகாசமான பரப்பளவு. வீட்டுக் கட்டிடத்தையடுத்து அசத்தலான ஒரு தோட்டம் வேறே.

தென்னை, பனை, பூவரசு, புளிய மரம் போன்ற ஜனரஞ்சகமான மரங்களோடு, சீத்தாப்பழம், மாதுளை, அரை நெல்லிக்காய், நார்த்தங்காய், ஆமணக்கு போன்ற அபூர்வமான தாவர இனங்களும் எங்கள் தோட்டத்தில் உண்டு.

தவிர, பாட்டியின் பராமரிப்பில் ஒரு மினி கோழிப் பண்ணையும் இருந்தது.

அந்தக் கோழிகள் இடுகிற முட்டைகள் எங்கள் குடும்பத் தேவைகளுக்குப் போதாமல் போனதற்குக் காரணங்கள் ரெண்டு.
ஒன்று, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேறு விசேஷ நாட்களிலும் முட்டைக் கோழிகள் முழுசாகவே வயிற்றுக்குள் போய்விடும்.
ரெண்டு, அக்கம் பக்கத்திலிருந்து வந்து கேட்ப வர்களுக்கு சகாய விலைக்கு விற்கப்பட்டுக் கோழிகள் பாட்டியின் பாக்கெட் மனியாய் மாறிவிடும்.

பாக்கெட் மனி, பாட்டிக்கு மிகவும் அவசியமாயிருந்தது.

அருகிலிருந்த அசோக் டாக்கீஸில் பாட்டி மாசம் ஒரு படம் பார்த்தாக வேண்டும். வெள்ளி, சனி சாயங்காலங்களென்றால், குழந்தைகள் நாங்களும் பாட்டியோடு ஒட்டிக் கொள்வோம்.

தரை டிக்கட் நாலணாதான். மாடியில், சோஃபாவில் உட்கார்ந்து படம் பார்க்கிற அளவுக்குத் தகுதியிருந்தாலும், நட்சத்திரங்களை அண்மையில் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பாட்டி எப்போதுமே சிமென்ட் பெஞ்ச் போட்ட தரை டிக்கட் தான்.

(தொடரும்)

About The Author