முட்டைக் கறி

தேவையானவை:

முட்டை – 6,
சின்ன வெங்காயம் – 15,
தக்காளி – 4,
காய்ந்த மிளகாய் – 8,
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி,
சோம்பு – கால் தேக்கரண்டி,
ஏலக்காய் – 1,
பட்டை – 1 துண்டு,
இலவங்கம் – 1 துண்டு,
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி,
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
உப்பு – அரை தேக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு,
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, உப்பு, சிறிது மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வையுங்கள். ஆறிய பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகாய், பட்டை, இலவங்கம், சோம்பு, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு, அரைத்த மசாலாவையும் உப்பையும் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கிப் பச்சை வாசனை போன பிறகு, அரை கோப்பை நீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

நன்றாகக் கொதித்தவுடன் அதில் முட்டைத் துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். நன்கு பந்து போலச் சுண்டி வந்ததும் கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டுக் கிளறுங்கள்.

முட்டைக் கறி,  தோசை, சப்பாத்தி, சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

About The Author