என் ஆருயிர்த் தோழிக்காகச் சென்னை சென்றேன், மாநகரம் எனக்குப் பிடிக்காதபோதும். என்னுள் இருந்த பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தோழிக்காகச் சற்று விலக்கிவிட்டு நானும் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்யச் சென்றேன். இறுதி ஆண்டுப் பயிற்சிக்காக பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றுக்கு. புத்தி வேண்டாம் என்றது, மனது தோழியின் பிம்பத்தைக் காண்பித்தது. மனம் வென்றது புத்தியை!
முதலில், இவளைப் (தோழி) பற்றிச் சொல்லிவிடுகிறேன். அப்போதுதான், நான் ஏன் அவளுக்காக என்னை மாற்றிக் கொள்கிறேன் என்று உங்களுக்குப் புரியும்.
கல்லூரியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பின் என் வாழ்க்கையில் வந்தாள் இவள். முதலில் அவளது இருப்பு பிடிக்கவில்லை என்றாலும் போகப் போக அவளது இல்லாமை என்னைப் படபடக்க வைத்தது! காதல் என்று சொல்ல மாட்டேன். அவள் எனக்கு மற்றொரு தாயாகவே இருந்தாள். பல வழிகளில் நெறிப்படுத்தினாள். நான் நினைத்தாலே போதும், அது அவளுக்குப் புரியும். அப்படி ஓர் அலைவரிசை இருவருக்கும். ரசனையிலும் இருவரும் ஒத்துப்போனோம்.
அவள் என்மேல் காட்டும் பரிவு என்னை மகிழ வைத்தது. இன்பமோ துன்பமோ முதலில் நினைவுக்கு வருவது அவள்தான். இப்போது அவளுக்காக நான் மாநகரத்தில்…
முதல் நாளில், எனக்கு அறிமுகம் ஆனவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் உதவினார்கள். நகரம் என்னை வியக்க வைத்தது! வந்த முதல் நாளே நானும் நண்பனும் ஓர் ஐந்து கிலோமீட்டர் நடந்திருப்போம். பேருந்து நிறுத்தத்தைக் கண்டுபிடிக்க. ஒருவழியாகக் கோயம்பேடு போய்ச் சேர்ந்தோம், பேருந்து நிலையத்தைச் சுற்றிப் பார்க்க! அடுத்த இரண்டு நாட்கள் பெரிதாக ஏதும் செய்யவில்லை. கிருஸ்துமசுக்கு மறுநாள்தான் பயிற்சியில் சேர்வதாக ஏற்பாடு. காரணம், அவள் கடந்த வாரமே சேர்ந்திருந்தாள். கிருஸ்துமசுக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றிருந்தாள். அதனால்தான், நான் வருவதற்கு இந்தத் தேதியை முடிவு செய்தாள்.
அவள்தான் வந்து என்னை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தாள். சுமார் 45 நிமிடங்கள் சாலை ஓரத்தில் நின்றிருந்தேன். கைப்பேசியில் தொடர்பு கொள்வதாகச் சொல்லியிருந்தாள். நம்பி நின்றேன். அவள் வரவே இல்லை. 46ஆவது நிமிடத்தில் அவளிடம் இருந்து அழைப்பு.
"எங்க இருக்க?" (எனக்குப் பிடித்த குரல்) அழைத்துச் செல்லாமல் விட்டதற்கு ஏதேதோ காரணம் சொன்னாள்.
மதியம் என்னை உணவருந்த அழைத்துச் செல்வாள் என்ற நம்பிக்கையில் சாப்பிடாமலே கழிந்தது பகல் பொழுது. எனக்கு அந்த அலுவலகத்தில் எங்கு சென்று உணவருந்த வேண்டும் என்பது கூடத் தெரியாது.
மாலை வீடு திரும்பும் நேரம் என்னுடன் நடந்து வர அழைத்தேன். நாசூக்காக மறுத்தாள்!
ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று எனக்கு ஏதும் புரியவில்லை. மறுநாள் மாலை அதைக் கேட்டும் விட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில் ஒரு கணம் என்னை ஆட்டம் காண வைத்தது. என்னுடன் அவள் பேச மாட்டாளாம். காரணம், அவள் காதலும் காதலனுமாம்! இதை நான் சென்னை வரும் முன்னமே சொல்லியிருந்தால் நான் இவள் காற்றுபடாத இடத்திற்குச் சென்றிருப்பேன். இப்போது எங்கும் போகவும் முடியாது. காரணம், அதற்குப் பணம் தேவை. என் அப்பாவிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பேன்?
முதல் மூன்று நாட்கள் என்னை வியக்க வைத்த நகரம், அடுத்த நாள் விக்கி விக்கி அழவைத்தது. அவள் காரணம் சொன்ன நொடி, அப்படியே செத்து விடலாம் போலிருந்தது.
இனி அந்தப் பரிவு யாரிடம் கிடைக்கும்?…
அவள் ஏன் முதலில் என்னுடன் பரிவோடு பழக வேண்டும்?…
இப்போது ஏன் விலக முயல வேண்டும்?…
இப்படி ஏகப்பட்ட கேள்விகள்! பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
அவளுக்காக மட்டுமே சென்னை வந்தேன். என் கொள்கைகளை மாற்றிக் கொண்டேன். இப்பொழுது முட்டாளாக நிற்கிறேன். தினமும் அழுகிறேன். தினமும், ஏதாவது ஒரு நிகழ்வு அவளை என் கண்முன் நிறுத்துகிறது. இதை அவளிடம் சொல்லி எந்தப் பயனும் இல்லை. நான் சொல்லி அழவும் யாரும் இல்லை. இந்தக் கொடுமை துரோகிக்கும் வரக்கூடாது!
ஒருவேளை எனக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது!
அவள் எப்போது திரும்பி வருவாள் என்னும் ஏக்கத்துடன் இந்த முட்டாளின் நாட்கள் நகர்கின்றன. ஒருவேளை நீங்கள் அவளைப் பார்த்தால், நான் இறப்பதற்குள்ளாவது ஒருமுறை என்னை ஒரு பார்வை பார்க்கச் சொல்லுங்கள்!
“
என்னுடைய இன்றைய நிலையை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள், நன்றிகள், உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் …
மொக்கை கதை..