முகங்கள் (4)

இறந்த சீனக்கிழவி சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் சிங்கை அழைத்து வரப்பட்டாராம். எப்படியும் எண்பத்தைந்து வயதிற்குக் குறையாதவர். அவருடன் ஒரு அறுபது வயது ஆடவரைப் பார்த்திருக்கிறேன். தாயும் மகனும் என்றே அன்று வரை நம்பியிருந்தேன், யீப்ங் சொன்ன தகவல் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையுமே தந்தது. அவர் கிழவியின் கணவராம். சீனாவில் பெண் குழந்தைகளை அந்தக் காலத்தில் வசதியுள்ளவர்களின் சிறுபிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவென்று அவர்களிடமே விற்று விடுவார்களாம். பெண்ணை வாங்கியவர்கள் வயதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் தங்கள் சிறுவர்களுக்கு மனைவியாக்கி விடும் விநோதம் தான் கிழவிக்கு அவர் கணவனான கதை. இக்காலத்திலோ சீனர்களாலும் இவ்வகைப் பழக்கங்களை மனதாலும் ஏற்க முடிவதில்லை. அந்த ஆளின் வயது அறுபதிற்கும் குறைவாம். சோம்பலின் பயனாய் ஏற்பட்ட தளர்ச்சி வயதைக் கூட்டிக் காட்டியது.

"நம்ம ஊருல, மலாய்க்காரங்க கல்யாணத்துக்கு ‘வோய்ட் டெக்’ல ஒரே இரைச்சல் பண்ணுவாங்க. சீனவுங்க வீட்டுல சாவுன்னாலும் கீழே ஒரே இரைச்சல் தான். நாளைக்கு இந்நேரம் கட்டடத்துல ஒரு கைக்கொழந்த தூங்க முடியுமா?" என்று ஏதோ பெரிய நகைச்சுவையைச் சொன்ன பாவனையோடு சிரித்தார் யீபிங்.

கிழவியை நினைத்தால் தான் எனக்குப் பாவமாய் இருந்தது. அவருக்கு ஒரு குழந்தையும் பிறக்காததால் கணவன் அந்தக் காலத்திலேயே சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்த இடத்தில் தன் வயதுக்கேற்றாற் போல் ஒருத்தியைத் தேர்வு செய்து மணமுடித்து பிள்ளைகள் இரண்டும் பெற்றிருந்தார். ஆனால், இரண்டாம் மனைவி மகனையும் மகளையும் விட்டுவிட்டு சிறு வயதிலேயே இறந்துவிட்டதும் பிள்ளைகளை வளர்க்க சீனா சென்று தன் முதல் மனைவியை அழைத்து வந்தார். கிழவி பெரும்பாலும் எங்கள் கட்டடத்தில் இருக்கும் மகளுடனும், கணவன் சற்று தொலைவில் இருந்த மகனிடமும் வசித்து வந்தனர். இருவரையும் சேர்ந்து பார்க்க நேர்ந்தாலும் இருவரும் வாய் பேசாது மௌனிகளாய் கீழ்த்தளத்திலிருக்கும் இருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடியிருப்பர். ஒருவரோடு ஒருவர் பேசி நான் பார்த்ததே இல்லை.

மகளும் மருமகனும் தம் பிள்ளைகளை பள்ளிகளில் விட்டுவிட்டு வீட்டையும் பூட்டி விட்டு வேலைக்குச் சென்று விடுவர். கிழவிக்கு உணவு வாங்கி உண்ண சில வேளைகளில் காசு கொடுப்பதும் பல வேளைகளில் கொடுக்காமல் செல்வதுமே அவர்கள் வழக்கம். கட்டடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்கும் கிழவி போவோர் வருவோரிடம் அழுது கொண்டு பாவனையாகவே காசு கேட்கும். வயிற்றைத் தொட்டுக் காண்பித்து பசிக்கிறதென்று சொல்லும். நானே ஒரு முறை கொடுத்திருக்கிறேன். யீபிங் கொடுக்காதே என்று தடுத்தும் நான் கொடுத்தேன். அந்தக் கிழவி கண்ட இடங்களில் எச்சில் துப்புகிறாரென்றும், சில சமயம் மின் தூக்கியில் மூத்திரமும் கழிக்கிறாரென்றும் யீபிங் சொன்ன போதும் கூட ஏனோ எனக்குப் பாவமாய்த் தானிருந்தது. சீனவிலிருந்து வரும் சீனர்களைக் கண்டபடி விமர்சித்தார் யீபிங். "வயதான ஒருவரால் அடக்க முடியாது போகாதா, பாவம் அவர்கள் வீடு வேறு பூட்டியிருக்கிறதே," என்று நான் நயமாகக் கேட்டதற்கு யீபிங் தானே பல முறை அருகில் இருக்கும் காப்பிக் கடையில் போய் அவரைச் சிறுநீர் கழிக்கச் சொன்னதாகச் சொன்னார்.

காப்பிக் கடை என்றதுமே யீபிங்கிற்கு சுவாரசியமான அடுத்த தலைப்பு கிடைத்தது. ஆர்வமாய்த் தன் குரலில் புது உற்சாகத்துடன், "செல்வி, அந்த ஏழாம் மாடி கடைசி வீடு மலாய்க்காரங்க வீட்டுல ஒரு வாரமா கரண்டு தண்ணீ எல்லாத்தையும் கட் பண்ணீட்டான் தெரியுமா. அவங்க பீயூபி பில்லி கட்டலயாம். அவங்க வீட்டுல எல்லாரும் முக்குல இருக்கே ‘ஃபூஜி ஈடிங் ஹௌஸ்’னு காப்பிக்கடை, அங்க போயித்தான், அங்கிருக்கிற கழிப்பறையில காலையில முகம் கழுவி, பல்லுத் தேய்ச்சு, குளிச்சுட்டும் வராங்க. என்னிக்கி அந்தக் கடைக்காரன் ஏசப் போறானோ தெரியல்ல. அந்தப் பொண்ணு தான் பாவம் கீழ ‘வோய்ட் டெக்’ல உட்கார்ந்து ராத்திரி படிக்குது." அவர் குறிப்பிட்ட மலாய்க்காரர்கள் வீட்டில் மூன்று வளர்ந்த பிள்ளைகளும் ஒரு தொடக்க நிலையில் படிக்கும் மகளும் உண்டு. மொத்தம் இரண்டு மகங்கள் இரண்டு மகள்கள். மூத்தவள் உயர்நிலை நாங்கில் படிப்பவள். ‘சிட்டி’ என்ற அந்தப் பெண் மிகவும் பொறுப்புடன் படிப்பாள். ஒரு முறை என்னிடம் கூட அறிவியல் பாடத்தில் சந்தேகம் கேட்டுத் தெளிந்தாள். சமீப காலமாய் கணவன் வேலையிழந்ததில் அந்தத் தாய் தன் பிள்ளைகளை வளர்க்க வழி தெரியாமல் திணறுகிறார். நாசி லீமா, கறிப் பஃப் போன்ற காலை உணவுகள் செய்து விற்பார். இப்போது சார்ஸ் நெருக்கடியில் வாங்குவோர் பயத்தில் வாங்குவதில்லை. இருந்த அந்த ஒரே வருமானமும் போனது. அவர்கள் சமூக அமைப்பான ‘மெண்டாகி’ உதவும். ஆனால், சிலர் உதவியை நாடுவதை அகௌரவமாக நினைக்கிறார்களே.

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author