அண்ணியின் அப்பா பாண்டிச்சேரியிலிருந்து தினமும் ஒரு முறை தவறாமல் அழைக்கிறார். தன் ஒரே மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை அவருக்கு. நானும் மருத்துவமனையில் இருப்பதால் அவருக்கு ஒரே நடுக்கம். "ரோகிணி, நீயும் மாப்பிள்ளையும் ஒரு ரெண்டு மாசத்துக்கு வேற வேலை தேடிக்கலாமா. உயிர்க் கொல்லியால்ல இருக்கு இந்த சார்ஸ். ஒரு வருஷம் பிள்ளைங்க படிப்பு போனாப் போகுது. என்ன பெரிய படிப்பு. எங்க ரெண்டு பேருக்கும் தூக்கமே போச்சு. அம்மா உன்னைப் பத்தியே நினைச்சிட்டு அழுதுகிட்டேயிருக்கா," என்கிறார். இத்தனைக்கும் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியது அவருக்கு தெரியும். அண்ணியால மட்டும்தான் அவருடைய பேச்சிற்கும் நச்சரிப்பதற்கும் ஈடு கொடுக்க முடிந்தது. அப்போதைக்குப் பணிந்து விட்டு மறுபடியும் அடுத்த நாளே அண்ணியை அழைத்துத் தொந்தரவு செய்தார்.
வழக்கமாய்ப் பிடிக்கும் பேருந்து போய்விட்டிருந்ததால், அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பேருந்தில் ஏறியமர்ந்த எனக்கு அடுத்த வீடு யீபிங்கின் திடீர்ப் பாராமுகம் ஒரு புறம் சிரிப்பையும் மறுபுறம் சலிப்பையும் தந்தது. சீருடையில் இருந்த நான் யாருடனும் அமராமல் தனியாக அமர்ந்தேன். டன் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரே காரணத்திற்காக நான் திடீரென்று யீபிங்கிறகு அந்நியமானேனா, எப்போதும் என்னிடம் சிரித்துச் சிரித்துச் சிநேகமாகப் பேசுவாரே.
யீபிங்கின் சிறார்கள் இருவரும் போன தீபாவளிக்குக் கூட அண்ணனின் குழந்தைகள் ராதா, ரகுவுடன் போட்டி போட்டுக் கொண்டு அம்மா தயாரித்திருந்த எல்லா முறுக்கையும் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர். ‘பாட்டி முறுக்கு தாங்க’ என்று அரைகூறைத் தமிழில் கேட்கக் கற்றிருந்தான் ஜூன்ரோங். தீபாவளி தோறும் அவர்களுக்கும் சேர்த்தே அம்மா முறுக்கு சுடுவார். ஒவ்வொரு முறையும் தீபாவளி தான் தமிழர் புத்தாண்டு என்ற எண்ணத்தில் யீபிங் கூறும், புத்தாண்டு வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு, தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மத்தியில் வரும் என்ற விளக்கமும் நான் கொடுப்பதுண்டு. சீனப்புத்தாண்டு வந்தால் பதிலுக்கு எங்களை பலத்த உபசரிப்பால் ஒரேயடியாய்த் திணற அடித்து விடுவார்.
கட்டடத்தின் எல்லா வீட்டுச் சங்கதிகளையும் யீபிங் எனக்குச் சொல்வார். கிடைக்கும் பத்து நிமிடத்தில் பத்தாயிரம் விஷயங்களை நாடகப்பாணியில் முகத்தில் பளிச் பளிச் என்று உணர்ச்சிகளுடன் மளமளவென்று சொல்வார். வம்பு பேசுவது போலத் தோன்றினாலும் நோக்கம் யாரையும் புண்படுத்துவதாகவோ கோள் சொல்வதாகவோ இருந்ததில்லை. இல்லை, எனக்கு தான் அப்படித் தோன்றியதோ அதுவும் தெரியவில்லை.
இல்லத்தரசியாக இருக்கும் அவருக்கு பன்னிரண்டு தளங்களிலும் உள்ளவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியறியவும் பகலில் கணிசமாக நேரமிருந்தது. சிறுவயதில் தானும் ஒரு தாதியாக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டதாயும் பல முறை கூறியிருக்கிறார்.
அடுத்து வந்த பேருந்து திறுத்தத்தில் ஒரு நடுத்தர வயது மலாய் மாது என்னருகில் இருந்த இருக்கையில் உட்காராமல் கைக் குழந்தையோடு நின்றபடியேயிருந்தார். எழுந்து கொண்டு அவரை உட்காரச் சொல்லலாமென்றால், அவர் நிச்சயம் அந்த இடத்தில் உட்காரமாட்டார் என்று தோன்றவே சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். சீருடையில் இருக்கும் நானும் நான் உட்கார்ந்த இடமும் அண்மையில் தீண்டத் தகாததாகியிருந்ததுவே!
சீனக்கடைக்காரர்கள் கடைகளிலும் கடை வீடுகளிலும் சீனர்களின் பணத்தாள்களை எரிப்பது கண்ணில் பட்டது. பௌர்ணமியா அமாவாசையா என்று மனம் கணக்கிட முயன்றது. சாலைகளிலும் உணவங்காடிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சிங்கப்பூரர்கள் வீட்டிலேயே சமைக்கத் தொடங்கிவிட்டனரோ?!
கடைசியாக யீபிங் பேசியது ஒரு சனிக்கிழமை மாலை. கடைக்குப் போய் விட்டுத் திரும்பியவள் எங்கள் கட்டடத்தின் கீழ்த் தளத்தில் யாருக்காவோ இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற படியிருந்ததைப் பார்த்தேன். திடீர் கழிப்பறைகள், சமையல் சாமான்கள், மேசை நாற்காலிகள் என்று எல்லாம் மளமளவென்று ஏராளமான சாமான்கள் வந்திறங்கியிருந்தன. சீன எழுத்துக்களும், வாசகங்களும், படங்களும் கொண்ட பந்தலும் பூக்களும் கட்டியிருந்தார்கள். உடற்பயிற்சியாக இருக்கட்டுமென்று படிக்கட்டிலேயே ஏறி வந்தவளை அன்று யீபிங் கதவைக் கூடத் திறக்க விடாது பிடித்துக் கொண்டார். "செல்வி, அந்தக் கிழவி திடீர்னு ராத்திரி தூக்கத்துலயே செத்துடுச்சாம், தெரியுமா. ஆஸ்துமாத் திணறல் வேற உண்டாமே அதுக்கு. இருக்கற வரைக்கும் அந்தக் கிழவி ஒரு அவமானச் சின்னமாவும் பாரமாவும் இருந்திச்சி. இப்போ ஊருக்கு காண்பிக்க இந்த ஆடம்பரம். கீழ பார்த்தியா ஏற்பாடெல்லாம், இப்பெல்லாம் ஒரே நாள்ள அடக்கம் பண்ணனுமாமே? அதான் மளமளன்னு ஆரம்பிச்சிட்டாங்க," என்று ஆரம்பித்து ஏகப்பட்ட தகவல்களை அள்ளித் தெளித்தார். யீபிங்கிற்கு எங்கள் வட்டாரத்தில் கொடுத்திருந்த ‘பீபீசி’ என்ற பட்டப்பெயர் மிகப் பொருத்தம்.
(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“