மீண்டும் பஞ்சமி (2)

அட! நாசகாரா.. இப்படிப் பேசுகிறானே பிடியே கொடுக்காமல்? கடைசி வரை மூச்சு விடவில்லையே பஞ்சமியும்… அதுவே அவள் அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாள் என்பதற்கான சாட்சி. இம்மி அளவுக்குக் கூட யாருக்கும் தெரியாது. நண்பர்கள் நாங்கள் நாலைந்து பேர் தவிர. ஒருவகையில் பார்த்தால் இந்தப் பாவத்தில் எங்களுக்கும் பங்கு உண்டுதான். ஆனால் ஒன்று…ஒரு நாள் ஒரு பொழுது கூட பஞ்சமி எங்களைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்டதில்லை. எங்களுக்கும் தெரியும் என்பதாகவே அவள் காட்டிக் கொண்டதில்லை.

‘முழுக்க முழுக்க நான்தான் அவரை விரும்பினேன். நான்தான் அவரை நெருங்கினேன். இதில் வேறு எவருக்கும் பங்கு இல்லை. இது என் மனம் சார்ந்தது. என் தாகம் சார்ந்தது. என் வேட்கை சார்ந்தது. என் தாபங்களை வேறு எவரும் அறிவதற்கில்லை. அது என்னோடு பிறந்து என்னோடேயே அழிந்த ஒன்று.’

மனதிற்குள் புழுங்கிப் புழுங்கி மதி கலங்கிப் போனாள் பஞ்சமி. எப்படிப்பட்ட பெண் அவள்! என்ன ஒரு ஆத்ம தரிசனம்? எப்படியான ஒரு தற்சார்பு நிலை? அவளை மட்டும் மணந்திருந்தால் வேணுவின் வாழ்க்கை எத்தனை அழகானதாயிருக்கும்? பரந்த சொத்துக்கு ஆசைப்பட்டு, முறைப்பெண் என்கிற பெயரில் ஒரு புளி மூட்டையைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறான் இன்று. மனசாட்சி இல்லாதவன். ஒரு பெண்ணால் முழுக்க முழுக்க விரும்பப்பட்ட ஆண் மகன் அவன். அந்த நேசத்தை, அன்பை, காதல் உணர்வுகளை ஆத்மார்த்தமாக உணராமல் போய் விட்டானே? உதறி எறிந்து விட்டானே பாவி? என்னதான் வாழ்க்கை அவன் வாழ்ந்து கழித்தாலும், அவன் மனசாட்சி அவனைச் சும்மா விடுமா? எங்கோ ஓர் ஓரத்தில் இருந்து அவனை மெல்ல மெல்லக் கொல்லாது? புத்தி பேதலித்து நிற்கும் நிலையிலும் வேணு…வேணு என்கிறாளே இவள். அவன் மனது இவளை இப்படி நினைக்குமா? நினைக்கும்.. நிச்சயம் நினைக்கும். வாழ்க்கையில் செய்த தவறுகளை உணராமல் போன மனிதன் எவனுமில்லை. அதற்காக ஒரு நாளேனும், ஒரு பொழுதேனும் வருந்தாமல் கழிந்த ஜீவன் எதுவுமில்லை. அதுதான் நியதி… அதுதான் சத்தியம்… இந்த நினைப்போடேயே ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன் நான். வெகு நேர அமைதி என்னைத் தொற்றிக் கொண்டது. பஞ்சமியின் முகம் மனத் திரையில்.

"என்ன சார்…சைலன்டாயிட்டீங்க…? உடம்பு சரியில்லையா? டீ சாப்டிட்டு வருவமா?"

"ஒண்ணுமில்லீங்க…மனசு சரியில்லை… வர்ற வழில அந்தப் பஞ்சமியப் பார்க்க வேண்டியதாப் போச்சு"

"அய்யய்ய…அவ கண்ணுல பட்டுட்டாளா? சொன்னீங்களே…கூடப் படிச்சவன்னு…""ஆமா… ரொம்பப் பாவமாயிருக்கு. அவ பார்க்கிற பார்வை இருக்கே… அப்பாடி! அதத் தாங்கவே முடியாதுங்க.. .நம்மளக் கிண்டிக் கெழங்கெடுக்கிற பார்வை அது…"
"பழசையெல்லாம் ஞாபகப்படுத்தறாளாக்கும்"

"பெரிய வேதனைங்க…அது சரி… அவ குழந்தை இப்போ எங்கன்னு சொன்னீங்க…?" மறந்துபோனவனாய்க் கேட்டேன். "அதான் சொன்னோமே சார்…குருடுன்னு"

"என்ன சொல்றீங்க அமிர்தலிங்கம்…??" அதிர்ந்து போனேன் நான். உண்மையில் இதற்கு முன் இந்தப் பேச்சு வந்த நாளில் இச்செய்தி கருத்தில் வாங்கியதாகவே தோன்றவில்லை எனக்கு.

"நாங்கதான் அன்னைக்கே சொன்னோமே சார்… நீங்க சரியாக் காதுல வாங்கல போலிருக்கு! வள்ளுவர் நகர்ல ஒரு காப்பகத்துல விட்டுட்டாங்கன்னு…"

"யாரு…?" "பஞ்சமியோட அப்பாருதான்?"

"அவரும் அவரு சம்சாரமும்…?" "ரெண்டும் இந்த வேதனைலயே மண்டையப் போட்ருச்சுங்க…."

தன் தாயை ஏமாற்றி இப்படிப் பேதலித்து அலைய விட்டவனை என்றாவது பார்க்க நேர்ந்தால் கூடப் பாவம் என்று அந்தச் சிசு நிரந்தரமாய்த் தன் கண்களை மூடிக் கொண்டதோ?

இறைவா…! இந்த உலகத்தில் ஏனித்தனை சோகங்களையும், வேதனைகளையும், உலவ விட்டிருக்கிறாய்? மனசு இம்மியும் தாங்காத அளவுக்கான இந்த அவலங்களெல்லாம் என்று முற்றிலும் அழிந்து படும்? என்ன வரம் வேண்டும்?
கேட்டார் கடவுள்.

என்ன கேள்வி இது?
அது கூடத் தெரியாத நீ
என்ன கடவுள்?

மனதின் வேதனையை மீறி தொடர்புடைய கவிதை வரிகள். கசிந்துருகும் எண்ணங்கள்.

ஒரு முழுமையற்ற அந்த நாளின் இருள் சேரும் மாலைப் பொழுதினில் அங்கிருந்து கிளம்பி நடைப் பிணமாய் வெளியேறி வந்து கொண்டிருந்த வேளையில் சாலையோரமாய் இருந்த அந்தக் கோயிலின் கிண்டா மணி டணால் டணால் என்று தொடர்ந்து வேகமாய் ஒலித்து அந்தப் பிராந்தியத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. கற்பூர ஆரத்தி ஜெகஜோதியாய் ஒளிர பக்திப் பரவசத்தோடு இருபுறமும் பக்தர்கள் கூடி நிற்க, நேர் பிரகாரத்தைப் பார்த்து சற்றே விலகி, தனித்துவமாய் வாய்கொள்ளாத வெள்ளைச் சிரிப்போடு எதையோ எதிர்நோக்கி இரு கைகளையும் ஏந்தியவாறு நின்று கொண்டிருந்த பஞ்சமியைக் காண நேரிட்டபோது, காலையில் மேற்கொண்டு எந்தக் கலகமும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதாக அவளின் அந்த வெள்ளந்தியான இருப்பு குறித்து உணர, இதற்கு முன் அந்தப் பகுதிக் கடைக்காரர்கள் சிலர் அம்மாதிரி ஒரு நிகழ்வின்போது அவளை சதும்ப அடித்துக் காயப்படுத்தியிருந்தது நினைவில் வந்து துன்புறுத்த, அம்மாதிரி எதுவும் இல்லை என்ற ஆறுதலே அப்போதைக்கு என் மனதை சாந்தப்படுத்துவதாய் இருந்தது.

(முடிந்தது)

About The Author