"ஏய் ..ன்னா பாத்துட்டே போறே…காசு தரமாட்டியா…?"
யார் கண்ணில் படக்கூடாது என்று வேக வேகமாக அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தேனோ அவளின் குரல் மெல்லிசாகக் கேட்டபோது அது என்னை நோக்கித்தான் என்ற தவிர்க்க முடியாத உள்ளுணர்வில் அப்படியே நின்று விட்டேன் நான்.
என்னைக் கண்டால் அவள் நிச்சயம் ஏதாவது கேட்பாளே.. கொடுக்க வேண்டி வருமே.. என்ற ஆதங்கம் கூட இல்லை எனக்கு. அவளைப் பார்ப்பதே மிகவும் மன வேதனைக்குரிய விஷயம் என்ற காரணத்தால்தான் அதைத் தவிர்க்க விரும்பினேன். அந்தப் பகுதியில் உள்ள என் அலுவலகத்திற்கு சமீப காலமாகத்தான் வந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதை விட அவளை அந்த நிலையில் காணச் சகிக்கவில்லை என்பதே உண்மை.
"ஏய், நீ சேகரன்தானே… ராஜா …சேகரன்….தானே….ராஜாசேகரன்….ராஜாசேகரன்…எங்கூடப் படிச்சீல்லே…" என்னை அவள் அப்படிச் சட்டென்று அடையாளம் கண்டு சரியாகக் கூப்பிடுவாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்தப் பாலத்துக்கு அடியில் அதன் ஆரம்பத்திலிருந்த பஸ் ஸ்டாப்பிலிருந்து இறங்கி ரயில்வே கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தேன் நான்.
ஏழெட்டு ஆண்டுகள் தொலை தூரத்தில் பணியாற்றிவிட்டு அப்பொழுதுதான் மாறுதலில் வந்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. அடேயப்பா…எவ்வளவு மாறி விட்டன அந்தப் பகுதிகள்! ஏராளமான கடைகளும் பெரிய கட்டடங்களும் வங்கிகளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும்..! ஆனாலும் நடந்து வந்த அந்தப் பாதையில் ஏனோ அத்தனை மாற்றங்கள் தென்படவில்லை. சங்கரன் நாயர் டீக்கடை மட்டும் அப்படியே இருந்தது. வழக்கம்போல் கூட்டம் இப்பொழுதும் மொய்த்துக்கொண்டு…
…ஒரு சிறிய டிபன் சென்டர் வேறு. ரெண்டுக்கும் மத்தியில் டேபிள் சேர் போட்டு ஆட்டுக்கல் மாதிரி சப்பரமாய் அமர்ந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார் நாயர். நாயர்வாள் என்று இப்பொழுது கூப்பிட்டால் அடையாளம் தெரியுமோ என்னவோ. சே…சே…! கூடாது…அவருக்கும் வயசாச்சு…நமக்கும் ஆயிப்போச்சு…
நான் வேலை பார்த்த மோட்டார் பம்ப் செட் கடை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். அங்கு ஏதோ கணினி மையம் இயங்குவதாய் போர்டு தொங்கியது. இதெல்லாம் கிடக்கட்டும்…மெதுவாய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். எங்கே ஓடிப் போகிறது…ஆனால் இந்தச் சத்தம்…? ஏய்…சேகரா…நில்லுடா…நில்லுடா…ட்ட்டாய்…. – அழைப்பு ரொம்பவும் வித்தியாசமாய் இருப்பதைக் கண்டு தவிர்க்க முடியாமல் திரும்பினேன். பயம் தொற்றிக் கொண்டது மனதில்.
பாலத்துக்கு அடியில் வீணாய்க் கிடந்த இடத்தில் குப்பை கூளங்கள். அசிங்கங்களுக்கு நடுவே இருந்து வெளியே வந்தாள் அவள். ஓடிவந்து என் கைகளைப் பற்றிக் கொண்ட வேகத்தில் நான் சற்றுப் பின் வாங்கினேன்.
ஏய்…என்னா…சும்மாயிருக்கமாட்ட…? ….நீங்க போங்க சார்… அவள் கையைப் பிடித்து உதறி விட்ட ஒருவர் இப்படிக் கூறினார். ஓங்கி அவள் கன்னத்தில் அறைவதுபோல் சைகை செய்தார். தலை முடியனைத்தும் சடை பிடித்துப் போய், கட்டை கட்டையாய்த் தொங்கிக் கொண்டிருக்க, என்னென்னவோ வாடிய பூச்சரங்கள் நாரும் பூவுமாய் அதில் தொற்றிக் கொண்டிருந்தன.
கிழிந்த ரவிக்கையும், திறந்திருந்த மார்பும், புடவை என்று முழுசாக இல்லாமல், நார் நாராய்க் கிழிந்து தொங்கும் பாவாடையோடு, அதில் நீண்டு தொங்கிய நாடாவை இழுத்து வாயில் கடித்துக் கொண்டு ஈஈஈஈஈஈ…..என்று ஈறைக் காட்டிக்கொண்டு நின்றாள் அவள்.
"நீங்க போங்க தம்பி…ஏதாச்சும் கடிச்சு வச்சிறப் போவுது…" என்ற அந்தப் பெரியவர், அவள் கையைப் பிடித்து இழுத்து கொஞ்ச தூரம் அவளை விலக்கி விட்டுவிட்டு நடையைக் கட்டினார்.
"உஹும்….ம்ம்ம்ம்…..ஏய் சேகரா… என்னை அடிக்க வர்றாரு…பார்த்திட்டே போறீல்ல…?" சிணுங்கிக்கொண்டே அவள் மீண்டும் வந்து நிற்க… அந்தப் பெரியவர் பார்த்தவாறே போய்க் கொண்டிருந்தார்.
"டீ சாப்பிடுறியா…?" முன்பு அவளிடம் வழக்கமாய்க் கேட்கும் அதே கேள்வி. அவள் பதிலை எதிர்பார்க்காமல் நாயர் கடையை நோக்கி நடந்தேன்.
நானு…நானு….நானு…யேய்…நானும் வர்றேன்…நானு…நானு….வேணு….வேணு….வேணு…..
என்னதிது? மாறி ஒலிக்கிறது? திரும்பிப் பார்த்தேன். பஞ்சமியின் வாய் முனகிக் கொண்டிருந்தது. வேணு…வேணு…வேணு… இப்போது அவள் அந்த மூலைக் குத்துக் கல்லில் உட்கார்ந்து அழ ஆரம்பித்திருந்தாள். இனி அவளுக்குத் தன்னைப் பற்றிய நினைவிருக்காது. தான் இப்படியே டீயைக் குடித்துவிட்டு அல்லது உடனேயே கூட நழுவி விட வேண்டியதுதான். இதுதான் சரியான சந்தர்ப்பம். இல்லையென்றால் இன்னும் சற்று நேரம் கழித்து என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. இப்பொழுது அழுது கொண்டிருக்கும் அவள் திடீரென்று எழுந்து வந்து என்ன ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று சொல்ல முடியாது. அதற்குள் இந்த இடத்தை விட்டுக் காலி செய்து விட வேண்டியதுதான்… எண்ணங்கள் தந்த படபடப்பில் சிறு கூட்டத்திற்கு நடுவே புகுந்து மறைந்து நின்று கொண்டு அவளைப் பார்த்தேன். நிச்சயம் அவள் இன்று ஏதேனும் கலாட்டா செய்யக் கூடும். இனி அவளுக்குத் தன் நினைப்பு கண்டிப்பாக இருக்காது.
பக்கத்து சந்தில் புகுந்து ஓடினேன். அவளைக் காதலித்து ஏமாற்றி விட்டு, அவள் வயிற்றில் சுமையையும் ஏற்றிவிட்டு, வசதியாய் வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இன்று அவள் மனச் சிதைவுக்கு முற்றிலும் காரணமாய் இருக்கும் வேணு என்கிற வேணுகோபால், அந்தப் பெரு நகரத்தின் வேறொரு மூலையில்தான் இருக்கிறான் என்கிற உண்மை அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
"அவளுக்கென்னடா அழகாத்தானே இருக்கா…கட்டிக்கிட வேண்டிதானே…?"
"நல்லாச் சொன்னீங்கடா…அவ ஜாதி என்ன.. என் ஜாதி என்ன? வீட்டுக்குத் தெரிஞ்சதின்னா என்னை ரெண்டாக் கூறு போட்ருவாங்க தெரியும்ல…?"
"அப்போ ஏண்டா அவளைக் காதலிச்சே…?"
"யாரு காதலிச்சா…? இல்ல யாரு காதலிச்சான்னு கேட்குறேன்…என்னடா எல்லாருமாச் சேர்ந்து இப்டி ஒளர்றீங்க…? எதிர்த்த வீட்டுல இருந்திட்டு அவதானே என்னை சைட் அடிச்சா…? என்னை வம்புக்கு இழுத்தவளே அவதாண்டா…நானா அலைஞ்சேன் அவ பின்னாடி…?"
"அடப் பாவி…! அப்போ வெளியூர் போனது…சுத்தினது…லாட்ஜ்ல ரூம் போட்டது…இதெல்லாம் பொய்யா…?"
"அதெல்லாம் அவ நச்சரிப்புத் தாங்க மாட்டாம செய்ததுடா…அவளுக்கு உடம்பு தேவப் பட்டுச்சு…ஆம்பிள உடம்பு…என்னைப் பயன்படுத்திட்டா…அவ ஆசையைத் தீர்த்துக்கிட்டா…அதுக்கு நானா பொறுப்பு?"
(மீதி அடுத்த இதழில்)