ஆண்மைக்கு அழகு மீசை என்று சொல்கிறார்கள். "மீசை ஆண்களின் முகத்திற்கே ஒரு தனித் தன்மையைக் கொடுக்கிறது. அது ஆண்களின் வீரத்திற்கு அடையாளமாகக் கருதப்படுவதால்தான் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மீசை வைத்துக் கொள்வது தனி கவுரவமாகக் கருதப்படுகிறது" என்று சி.இ.ஹம்ப்ரி கூறுகிறார். (அவர் யாரோ! எனக்குத் தெரியாது!)
ஆண்களுக்கு வயதானாலும் ஆசை போவதில்லை என்பதைத்தான் ‘மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை’ என்று சொல்கிறார்கள். உத்தரப்பிரதேச கவர்னராக இருந்த திவாரி தனது தள்ளாத 86 வயதில் இரண்டு பெண்களுடன் இருந்தார் என்ற செய்தி இந்தக் கூற்றை உண்மைப்படுத்துகிறது. (ஆனால் திவாரிக்கு ஏனோ மீசையில்லை!!)
மீசை கலாசாரத்தை வளர்ப்பதற்காக மீசை வளர்ப்புப் போட்டி ஒன்று நடந்ததாம். ஒரு மாதம் முழுவதும் மீசை வளர்க்க வேண்டும் என்பது போட்டி. கலந்து கொண்ட 44 பேர்களில் (18லிருந்து 30 வயது இளைஞர்கள்) 24 பேர்தான் பாஸ் செய்தார்களாம். பன்னிரண்டு பேர் தோல்வி அடைந்தார்கள். எட்டு பேர் பாதியில் விட்டாலும் அடுத்த மாதம் மீண்டும் வைத்துக் கொண்டார்களாம்.
கின்னஸ் மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் செய்த ஆராய்ச்சியின்படி, மது அருந்தும்போது மீசையில் சராசரியாக ஒன்றரை பின்ட் அளவுக்கு மது சிக்கி விடுகிறதாம். இதற்குக் கூடவா ஆராய்ச்சி? மதுவுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை!!
மீசைகளில் பலவகை உண்டு. அரும்பு மீசை, ஹிட்லர் மீசை, பென்சில் மீசை, தொங்கு மீசை, புஷ்டியான முறுக்கு மீசை, இரண்டு பக்கமும் படர்ந்து எலுமிச்சம் பழங்களை வைத்தால் தாங்குமளவுக்கு மீசை, கிருதாவோடு இணைந்து ஜோடி சேரும் மீசை என வகைப்படுத்தலாம்.
ஹிட்லர் மீசை என்று சொல்லும்போது அது பற்றிய ஒரு செய்தி: பல் துலக்கும் பிரஷ் போல அமைந்த ஹிட்லர் மீசையைப் பற்றி பல கதைகள் உண்டு. முதலாம் உலகப்போரின் போது, ஹிட்லரை அவரது பெரிய மீசையை சிறிதாக்கிக் கொள்ளும்படி ராணுவத்தில் கட்டளையிட்டார்கள் என்று ஹிட்லருடன் இருந்த மாரிட்ட்ஸ் ஃப்ரேய் சொல்கிறார். அப்போதுதான் வாயு முகமூடி முகத்தில் நுழையும் என்பதற்காக அப்படி! ஆனாலும் ஹிட்லர் காலத்தில் அத்தகைய மீசை பிரபலமாக இருந்தது என்பதுதான் உண்மை.
இன்னொரு கதை – ஹிட்லருக்குத் தன் மீசையில் தனி கர்வமாம். ஒரு சமயம் நாஜி பத்திரிகைக் காரியதரிசி, ஹிட்லரிடம் அவரது மீசையை எடுத்துவிடும்படி கூறியபோது ஹிட்லர், "என்னுடைய மீசையைப் பற்றி கவலைப்படாதீர்கள். நான் வைத்திருக்கும் காரணத்திற்காகவே இன்றில்லாவிட்டாலும் இந்த மீசை பிறகு ஒரு நாள் பிரபலமாகும்" என்றாராம். ஆனால் இப்போது நடந்ததோ தலைகீழ்! ஹிட்லர் அந்த மாதிரி மீசையை வைத்துக் கொண்டார் என்பதற்காகவே யாரும் அது போல மீசை வைத்துக் கொள்வதில்லை!
க்ரிஸ் ஹிக் என்பவர் ஹிட்லர் மீசைக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று சொல்கிறார். ஒன்று அவர் சார்லி சாப்ளினின் பரம விசிறி. அதனால் அவரைப் போல் மீசை வைத்துக் கொண்டிருக்கலாம். இரண்டாவது அவருக்குத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள, மற்றவர்களிடமிருந்து அவரைத் தனித்துக் காட்டவேண்டும். அதற்காக இந்த மாதிரியான
மீசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
முதலாம் உலக யுத்தத்தின்போது மீசை ராணுவ வீரர்களின் அடையாளமாயிருந்தது. ராணுவத்திலிருப்பவரின் மீசையைப் பார்த்து அவரது பதவி என்ன என்று கூறலாமாம். பதவி உயர உயர, மீசையின் அடர்த்தியும் அதிகமாகுமாம்! அமெரிக்கக் கப்பற்படையில் வேலை பார்ப்பவர்களின் மீசை அரை அங்குலத்திற்கு மேல் இருக்கக் கூடாதாம்.
1970ம் ஆண்டின் பிற்பகுதி அமெரிக்காவில் மீசை வளர்ப்போரின் இருண்ட காலம். மீசை வைத்திருப்போரை ஒரு வெறுப்போடு பார்த்த நேரம் அது. அதுவரையில் மீசை வைத்துக் கொள்வது ஃபேஷன் என்று கருதப்பட்டு வந்த நிலை மாறி சட்டத்தின் பாதுகாவலர்கள், உருக்குத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள்தான் மீசை வைத்துக் கொள்லலாம் என்பது போன்ற ஒரு நிலை வந்தது.
அமெரிக்காவில் செயின்ட் லூயி எனும் இடத்தில் அமெரிக்க மீசை வளர்ப்போர் சங்கமே இருக்கிறது. அதனுடைய நோக்கம் மீசை வளர்க்கும் கலையை ஊக்குவித்து, அதைப் போற்றிப் பாதுகாத்து, மீசை வளர்ப்பவர்களை அவர்களை வெறுப்பவர்களிடமிருந்து காப்பது. அது மீசையை அனைவரும் ஒத்துக்கொண்டு மீசை வளர்ப்பவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலுதட்டில் அமர்ந்திருக்கும் மீசையின் சுகத்தை அனைவரும் உணர வேண்டும் என்று பாடுபடுகிறது!
மீசை வைத்துக் கொண்ட நாலே அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் : செஸ்டர் கே. ஆர்தர், குரோவர் க்லீவ் லாண்ட், தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் வில்லியம் டஃப்ட். 1909க்குப் பிறகு பதவிக்கு வந்த அனைத்து குடியரசுத் தலைவர்களுமே மீசையில்லாதவர்கள்தான்.
ஓக்லாந்திலுள்ள பேஸ் பால் குழு தனது வீரர்கள் அனைவருக்கும் மீசை வளர்ப்பதற்காக 1971ம் ஆண்டு 300 டாலர் கொடுத்ததாம். கின்னஸ் உலக சாதனை ரிக்கார்ட் படி 1993ம் ஆண்டில் இந்தியாவின் கல்யாண் ராம்ஜி ஜெயின்தான் மிகப் பெரிய மீசை வைத்து சாதனை படைத்தவர். அவரது மீசையின் நீளம் 133.4 அங்குலம்.
தீயணப்புப் படையிலிருப்பவர்கள் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவர்கள் சுவாசிப்பதற்காக உள்ள முகமூடிக்கு மீசை தடையாக இருக்குமாம்.
சில பேருக்கு மீசை வைத்துக் கொண்டால் அழகாக இருக்கும். மீசை இல்லாமல் இருப்பது சிலருக்கு அழகாக இருக்கும். ஆனால் மீசை வைத்துக் கொண்டே பழக்கப்பட்டவர் மீசையை எடுத்துவிட்டால் முகமே மாறி ‘இதற்கு அந்த மூஞ்சியே தேவலை’ என்றாகி விடும்!
சினிமாவில் போலிசிலிருந்து தப்பிக்க மாறுவேடம் போட வேண்டுமென்றால் ஒட்டு மீசை வைத்துக் கொண்டால் போதும். அவரது அம்மாவால் கூட அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.
மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
என்பவை அடிக்கடி நாம் கேட்டு ரசிக்கும் பழமொழிகள்.
அது ஆச்சரியப்பட வைக்கிறது!
அது ஒரு அதிசயம்!
அது ஒரு கவர்ச்சி!
அதுவே பலருக்கு அருவருப்பும் கூட!
ஆம், அதுதான் மீசை.
மீசை
பிறகு வீரமாய்
கவிதை எழுதலாம்
முதலில்
பாரதியார் மீசையை
வரைந்து பார்
(நன்றி : ராஜா சந்திரசேகர்)
நன்று
இத….இதத்தான் எதிர்ப்பார்த்தேன்.
Interesting