மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! (1)

சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போன்ற பல பேரழிவுகள் பூமி வெப்பமடைதல் மூலமும் ஏற்படலாம். பூமி வெப்பமடைவதற்கு மின்னாற்றலும் ஒரு காரணம்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நீங்கள் உங்கள் வீட்டில், அலுவலகங்களில் எடுத்துக் கொள்ளும் சில நொடி அக்கறை வெப்ப சுனாமியை சில நிமிடங்கள் தள்ளிப் போடலாம்.

இன்றைய காலகட்டத்தில் மி‎ன்சாரத் தேவைகளும் அதிகமாகிவிட்டது. உற்பத்தியும் பற்றாக்குறை ஆகிவிட்டது. அதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பய‎ன்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது.

மி‎ன்சாரத்தை முறையாக உபயோகப்படுத்தும் வழிமுறைகள் இங்கே தொகுத்துத் தருகிறோம். வாருங்கள்.. ஜோதியில் கலப்போம்.

* வெளியில் செல்வதற்கு முன் உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் உள்ள விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, வானொலி, DVD பிளேயர்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அணைத்து உள்ளீர்களா? என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

* தேவையற்ற இடங்களில் விளக்குகள், யாரும் பார்க்காமலே ஓடிக் கொண்டிருக்கும் டிவி, கணினி போன்றவற்றை நிறுத்துங்கள்.

வெளியூர் செல்லுகிறீர்கள் என்றால் மேற்கூறிய அனைத்து உபகரணங்களிலும் மின் சப்ளையை நிறுத்த, பிளக்குகளை பிடுங்கிவிட்டு செல்லுங்கள். ஏனெனில் இத்தகைய மின்சாதனங்களில் stand-by என்னும் வசதி உள்ளதால், நீங்கள் சாதனத்தை நிறுத்தியிருந்தாலும் சிறிதளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டிருக்கும்.

* ஏசி அல்லது ஹீட்டர் ஓடிக் கொண்டிருக்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளை திறப்பதைத் தவிருங்கள்.

* பல் விளக்கும் போதும், சிறு குளியல் போடும் போதும், தண்ணீர் குழாயை மடமடவெனத் திறந்து விடாமல் தேவைப்படும்போது மட்டும் கொஞ்சமாகத் திறந்து கொள்ளுங்கள். தண்ணீர் வீணாகாமலும், தண்ணீரை டேங்க்கில் ஏற்றுவதற்கான மி‎ன்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

* உங்களின் வாட்டர் ஹீட்டர் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுகிறது எனக் கண்டறியுங்கள். ஒருவேளை மிக அதிக மின்சாரத்தை அது எடுத்துக் கொண்டால், மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துங்கள். வாட்டர் ஹீட்டர் மற்றும் தண்ணீர் வரும் குழாய்களின் இன்சுலேசனையும் அவ்வப்போது கவனியுங்கள். இரண்டு நாள்களுக்கு மேல் வெளியூர் செல்லுவதாக இருந்தால், வாட்டர் ஹீட்டர் பிளக்கை பிடுங்கிவிட்டுச் செல்லுங்கள்.

* பகல் நேரங்களில் கூட விளக்குகளைப் போடுவதைத் தவிருங்கள். அலங்காரத்திற்காய் சில சிறிய விளக்குகளைப் போடுவதைத் தவிர்த்து, ஒரு பெரிய விளக்கைப் பயன்படுத்துங்கள் .உதாரணமாக இரு 60 வாட்ஸ் பல்பைவிட ஒரு 100 வாட்ஸ் பல்ப் குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.

* 75% குறைந்த மின்சாரம் தேவைப்படும் ஃபுளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அதிக வெளிச்சம் தேவைப்படாத இடங்களில் மிகக் குறைந்த வாட்ஸ் பல்பை உபயோகியுங்கள். வீட்டின் வெளிப்புறங்களில் பகல் நேரத்தில் விளக்குகளை எரிய விடுவதைத் தவிருங்கள்.

* ஃபிரிட்ஜின் காயில்களை முறையாக சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மின்சார பில் குறைவதுடன், ஃபிரிட்ஜின் வேலைத்திறனும் அதிகரிக்கும். உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜின் உள்ளே வைப்பதற்கு முன் அறையின் வெப்பநிலைக்கு குளுமையாகும் வரை காத்திருந்து பின் உள்ளே வையுங்கள்.

* அவனில்(oven) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளைத் தயாரியுங்கள். அவன் பயன்பாட்டில் உள்ள போது அதன் கதவுகளை திறந்து திறந்து மூடாதீர்கள். உறைந்த (frozen) உணவு அறை வெப்பநிலைக்கு வரும் வரை வெளியே வைத்து பின் அவன் அல்லது மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்துங்கள்.

* வாஷிங் மெஷினில் எப்போதும் முழு அளவு துணிகளை குளிர்ந்த நீரில் துவையுங்கள். டிரையரிலும் முழு அளவு துணிகளைக் காய வையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட முறை காய வைக்க வேண்டி இருந்தால், முதலில் போட்ட துணிகள் காய்ந்தவுடன் அடுத்த முறைக்கான துணியைப் போடுங்கள். டிரையர் சூடாக இருப்பதால் சீக்கிரம் இரண்டாவது முறை போட்ட துணிகள் காய்ந்துவிடும். டிரையரின் லின்ட் பில்டரில் உள்ள அழுக்குகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சூரிய ஒளி நன்றாக அடிக்கும் நாட்களில் துணிகளை வெயிலில் உலர்த்துங்கள்.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவான மின்சாரம் சேமிக்கும் வழிகள். இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எவ்வாறு மின்சாரத்தை சேமிக்கலாமெனப் பார்க்கலாம்.

(தொடரும்)

About The Author