ஏழு ஸ்வரங்களுக்குள் நீயும்
எட்டாத எட்டாம் ஸ்வரத்தில் நானும்.
உனக்குள்ளேயே தொலைந்து போனேன்.
நீயில்லாத பொழுதுகளிலும்
என்னை மீண்டும் தொலைக்க உன்னைத்
தேடிக் கொண்டேயிருக்கிறேன்.
இருண்ட இரவில் நிலவின் ஒளியில்
இதயத்தினுள் ஊடுருவி உறுத்தியது
நீயில்லாத தனிமை.
இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை…
இது எப்போது ஆரம்பித்தது என்றும் புரியவில்லை…
ஆனால் மனதிற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
பருவமும், காலமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.
என் இதய வானில் மூடியிருக்கும் கருமேகங்களைக்
களைந்தெறிய நீ என்னைத் தொடர்ந்து வருகிறாய்
நீ எனக்களித்த அத்துணை இன்பங்களையும்
உனக்கே திருப்பியளிக்க நான் விழைந்தாலும்
மேலும், மேலும் என்னையே கடன்காரனாக ஆக்குகிறாய்!
என் இருண்ட பகுதிகளைக் கடக்க
உன் தோளின் மீது சாய்ந்து துயர் துடைத்துக் கொள்கிறேன்.
இருந்தும்
நீ என்னிடம் இருப்பது போல ஆத்மார்த்தமாக
என்னால் உன்னிடம் இருக்க முடியவில்லை.
காரணம் என் ஆத்மா என்னிடமில்லையே!
இருண்மை காட்டும்
கவிதா மொழி
மோன மலை தகர்க்கும்
வார்த்தை சலனம்
புறமுகம் தவிர்த்து
நிழலுறு பற்றி
பிறக்கும் கவிதை