திட்டமிட்டபடி தங்களது கம்பெனியின் கனவுத் தயாரிப்பான குட்டிக் காரைக் கொண்டு வர முடியவில்லையே என்ற வருத்தத்துடன் மீட்டிங்கிற்கு வந்தார் எம்.டி சுதர்சனம்.
"பாக்டரியை வேறு மாநிலத்திற்கு மாற்றி விடலாம், அல்லது மூடி விடலாம். மாற்றினால் சில கோடி ரூபாய்கள் நஷ்டம் வரும், தாமதமாக கார் கொண்டு வரலாம். மூடினால் பல கோடிகள் இழப்புடன் நற்பெயரும் கெடும். என்ன செய்யலாம்?" என்றார்.
வட்டமாக அமர்ந்திருந்த டைரக்டர்கள் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொன்னாலும் மறைமுகமாக இங்கேயே நடத்துவோம் என்றார்கள். இடம் மாற்றினால் பதவி போனாலும் போகும். குடும்பத்தையும் மாற்ற நேரிடும் என்ற எண்ணம்!
அவர்களுக்கு கேக்கும், தேநீரும் கொண்டு வந்த பணியாள் அமீர் தயக்கத்துடன் கேட்டான்.
"நான் சொல்லலாங்களா?"
வியப்புடன் தலையசைத்தார் சுதர்சனம்.
"இது கிராமங்க. இங்க கார் அப்படின்னாலே ஆடம்பரம், தங்களால வாங்க முடியாத பொருள்! இந்த எண்ணம்தான் இந்த எதிர்ப்புக்கு மறைமுகமான காரணம். இங்கே இருப்பது விவசாய நிலம் இல்லை. அதனால நீங்க புதுசா ஒரு ஃபாக்டரி இங்கேயே துவங்கணும்"
என்ன சொல்கிறான் இவன் என்று முறைத்தனர் அத்தனை எம்.பி.ஏக்களும்.
"ஆமாங்க! சைக்கிள் ஃபாக்டரி துவங்குங்க. சல்லிசான விலையில இந்த கிராமத்து ஆளுங்களுக்கு சைக்கிளைக் கொடுங்க. தங்களால காசு கொடுத்து வாங்க முடியற பொருள்னு ஃபாக்டரிக்கு அனுமதி கொடுப்பாங்க, இந்த ஃபாக்டரிக்கும் சேர்த்து!"
கை தட்டினார் சுதர்சனம்.
கடுகுக்கதை என்றாலும் காரம் சிறிதும் குறையவில்லை. நன்று! கே.எஸ். செண்பகவள்ளி, மலேசியா
Simply superb! principle of management….