அந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிய போது தான் எனக்கே உறைத்தது. அங்கே அந்தப் பழக்கடை இல்லையென்று‚ வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அட‚ அருகேயிருக்கும் எந்த வண்டியையும் காணவில்லையே? நினைத்துக் கொண்டு தலையை நன்றாக நிமிர்த்தி பார்வையை நீளச் செலுத்தினேன்.
சாலையோர நீண்ட வெளிகளில் எங்குமே கடைகளைக் காணவில்லை. தூரத்தில் காலனி திரும்பும் இடம்வரை சும்மாவே கிடந்தது.
என்னவாயிற்று? இன்று ஏதேனும் பந்த்தா? அல்லது வியாபாரிகள் கடை அடைப்பா? செய்தி அறிய விட்டுப் போயிற்றா? அப்படியானாலும் இத்தெருவோரச் சிறு வியாபாரிகளுக்கு விலக்கு உண்டே? இவர்களையுமா தடை செய்து விட்டார்கள்?
பின்புறம், வழக்கம் போல் உழவர் சந்தை இயங்கிக் கொண்டிருந்தது. நேரம் கடந்து விட்டது என்பதற்கடையாளமாய் வாயிலில் சில பைக்குகளும், ஒன்றிரண்டு சைக்கிள்களும் மட்டும் நின்று கொண்டிருந்தன.
உள்ளே கடைகளை எடுத்து வைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. மிஞ்சிய காய்கறிகளை எடுத்துச் செல்லுதலும் அங்கேயே மூட்டைக் கட்டி வைத்தலுமான பணிகள் மும்மரமாய் இருந்தன.
முழுவதும் மூடுவதற்குள் உள்ளே போய் வாங்கி வந்து விடுவோம் என்ற அங்கேயே வண்டியைப் பூட்டிவிட்டு நடந்தேன். வண்டி தனியாய் நிற்கிறதே என்று மனதிற்குள் ஒரு பயம்.
உள்ளே நுழைந்து வரிசை வரிசையாக நோக்கினால் ஒரு பழக்கடை கூடக் கண்ணில் தென்படவில்லை. என்னவாயிற்று? எல்லாப் பழங்களுக்கும் சீசன் முடிந்துவிட்டதா? ஒவ்வொன்றுக்கும் மாறிமாறித் தானே காய்ப்பு என்பது தொடங்கும்?
மாதுளம் பழத்திற்கு இப்பொழுது மவுசு என்றார்களே? சாத்துக்குடி சீசன் முடிந்து போயிற்று. ஆனாலும் ஒரு கடை கூடவா இருக்காது? சுற்றிச் சுற்றி வந்தேன்.
தக்காளிப் பழக்கடை தான் இருந்தது. "கிலோ அஞ்சு ரூபா சார்… நாட்டுத் தக்காளி…" முடியப் போகும் நேரத்தில் கூடக் கூவிக் கொண்டிருந்தார்கள். அவரவர் பாடு அவரவர்க்கு. விற்று முடித்து, காசு பார்த்து, வயிறு நிறைக்க வேண்டுமே?
எந்தப் பழக்கடையும் இல்லாததால் ஏதோவோர் மகிழ்ச்சி தான் மனதில். இருந்திருந்தாலும் விருப்பமின்றித் தான் வாங்கியிருப்பேன். என் முழு விருப்பமான பர்சேஸ் என்பது வெளியே கடை வைத்திருக்கும் அந்தப் பழக்கடையில் வாங்குவது தான்.
நேராக அங்கே கொண்டு என் வண்டியை நிறுத்துவேன். நான் தொலைவில் வருவது கண்டே அவன் பழங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விடுவான். அப்போதைய சீசனுக்கு என்ன பழங்களோ அதைத் தேர்வு செய்து தருவான். நிறுவை சற்றுக் கூடத்தான். விலையோ மற்றவர்களைக் காட்டிலும் கம்மிதான் எனக்கு. அவனது தொடர்ந்த வாடிக்கையாளன் ஆயிற்றே நான்.
சொல்லப்போனால் முதலிலே அவனது சம்சாரம் தான் எனக்கு அறிமுகம். அருகிலிருக்கும் இளநீர்க் கடைக்கு இளநீர் குடிக்கப் போன எனக்கு "பழம் வாங்கிட்டு போங்கண்ணே…" என்ற அந்தப் பெண்ணின் உபசரிப்பு, ஈர்த்தது.
உண்மையைச் சொல்லுவதானால் முதலில் அவளது அழகை ரசிப்பதற்காகத் தான் அங்கே பழம் வாங்கினேன. நின்று இளநீர் குடிக்கும் போது மெட்டியும் கொலுசுமிட்ட அவளது அழகான பாதங்கள் கண்ணில் பட்டன. சிறு பழ வியாபாரியாய் இருந்தால் என்ன? அவள் கால்கள் அழகாய் இருக்கக்கூடாதா? வெள்ளிக் கொலுசு பளபளக்க அந்தப் பாதங்கள் சுடுமணலில் நின்றது.
காலையிலிருந்து மாலை வரை எவ்வளவு நேரம் அப்படி நிற்பாள் அவள்? அவளுக்கே ஒரு யோசனையின்றி இருக்கலாமல்லவா? எனவே சொன்னேன்.
"பழம் பேக் பண்ணி வருதுல்ல, அட்டைப்பெட்டி…‚ அதுல ஒண்ணை எடுத்து, தரைல விரிச்சுப் போட்டு, அது மேல நில்லுங்க… இல்லன்னா, ஒரு செருப்புப் போட்டுக்குங்க… எவ்வளவு நேரம் இப்படி சூட்டுல நிப்பீங்க?"
"செருப்புப் போட்டா அந்தச் சூட்டுக்கு பித்த வெடிப்பு வருது சார்…" அண்ணே, சார் ஆகியிருந்தது இப்போது.
"வெறுந்தரைல நிக்குறது அதைவிட சூடாச்சே…"
"சரிங் சார்…"
– எதற்குச் சரி என்றாள்? புரியவில்லை. ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது போலத் தோன்றியது. மறுநாளிலிருந்து அது அங்கே அரங்கேறிற்று.
அந்தப் பூப்பாதங்களுக்கு பூமிச் சூட்டிலிருந்து விடுதலை.
"ஏன் சார்… சாத்துக்குடி மட்டும் போதுமா? மாம்பழம் வாங்கிட்டுப் போங்க… ஆப்பிள் வாங்கிக்குங்க… பார்த்துப் போட்டுத் தரேன் சார்…"
மெல்லிய புன்னகையோடு அவளின் அத்யந்த உபசரிப்பு சிலிர்க்க வைத்தது.
"சாருக்கு நல்லதா பார்த்துக்குடு பாப்பா…" – இளநீர்க் கடைக்காரனின் சிபாரிசு வேறு. பளபளக்கும் கூரிய அரிவாளோடு அருகில் இருக்கும் அவன், அவளுக்குப் பாதுகாப்போ.
வீட்டிலே நானும் என் மனைவியும் தான். எங்களுக்கு அவ்வளவு பழம் தேவையில்லை தான். சாத்துக்குடி தவிர வேறு எது வாங்கினாலும் என் மனையாள் தொடப்போவதில்லை. உடல் நிமித்தம் அவள் ருசிக்கும் ஒரே பழம் அது ஒன்று தான்.
அப்படியிருக்க இத்தனை எதற்கு? கேள்விக்கு மனதில் பதில் விழும் முன்னேயே நிறுத்து முடித்து கைக்கு வந்துவிட்டது சரக்கு.
"இந்தாங்க சார்… கொண்டு போங்க… ராஜபாளையம் சப்பட்டை… ஆஸ்திரேலியா ஆப்பிள் சார்… மாவாக் கரையும் வாயில…"
அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததா? அல்லது அருகிலுள்ள ஊட்டியிலிருந்தா, தெரியாது. வழக்கமாய்ச் சொல்வது அப்படி.
வெறும் இருபத்தஞ்சு ரூபாயில் முடிவது நூற்றைம்பதில் சென்று நின்றது. ஆனாலும் அந்தக் கொஞ்ச நேரத்தில், அங்கு நிற்கும் பொழுதுகளில் அவளின் அழகு என்னைக் கொள்ளை கொண்டு போனது‚
தப்பாய் மனதில் எதுவும் இல்லை தான். பார்க்காவிட்டால் பெருத்த நட்டமாய் நினைத்து மனது ஏக்கம் கொள்கிறதே? அது ஏன்? இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பு செழுமையோடிருப்பின் அவளைப் பிடிக்க முடியாது. முழு வட்ட நிலா ஒன்று தினமும் வெயிலில் வாடுகிறது‚
எனக்குத் தான் இப்படியெல்லாம் தோன்றுகிறது. கிறுக்கு‚ என்பாள் என் மனைவிக்குத் தெரிந்தால்…‚
அவள் நிறைவோடு தான் இருந்தாள். தன் புருஷனை அவள் கவனித்த விதமே அதற்குச் சான்று…
பின்புறம் அந்தக் காம்பவுண்ட் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன். சாலையில் போவோர் வருவோருக்குத் தெரியக்கூடாது என்று‚ என்ன ஒரு இங்கிதம் பாருங்கள்? வியாபாரத்துக்கு இடையே அவள் அவனை கவனித்தாள்.
"வெஞ்சனம் போட்டுக்குங்க… ஒண்ணுமேயில்லாம சாப்பிடுறீங்க?" – அவனை அவள் உபசரித்த விதம் ஊடே வந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்ட பாங்கு… எனக்கு ரொம்பவும் மனசுக்கு ஏக்கத்தைத் தான் ஏற்படுத்தியது.
ஒரு நாள் விடாமல் கடுமையான உழைப்பும், அன்றாட வாழ்வின் ஜீவிதத்திற்கான இடைவிடாத போராட்டமும், அமிழ்ந்து கிடக்கும் அவர்கள் வாழ்வில் தான் எத்தனை பொறுப்புணர்ச்சியும் பெருந்தன்மையும், அன்பும் அக்கறையும், நிறைவும் தாண்டவமாடுகிறது…
கை நிறைய வந்து கொட்டும் எத்தனை இடங்களில் மனம் நிறைந்து கிடக்கிறது? இந்த மேன்மை எங்கே தவழுகிறது?
இப்படியாகத் தான் அந்த இடத்திற்குப் பழகிப் போனேன் நான். சொல்லப் போனால் பழங்கள் பயன்படுத்தும் நல்ல பழக்கமே அந்தப் பெண்ணால் தான் ஏற்பட்டுப் போனது எனக்கு.
உழவர் சந்தையை விட்டு வெளியே வந்தேன். பழங்கள் எதுவும் வாங்குவது போல் இல்லை. அதுதான் கடையே இல்லையே? இருந்திருந்தாலும் வாங்கியிருப்பேனோ என்னவோ? எனக்கு மனப்பூர்வமான விருப்பம் அந்தப் பெண்ணிடம் வாங்குவது தான்.
என் வண்டி வெயிலில் அம்போவென்று நின்றது. யோசித்த போது கடந்த நான்கைந்து நாட்களாகவே அந்தப் பழக்கடையில் அந்தப் பெண் இல்லையென்று தோன்றியது. இன்றோ கடையே இல்லை. எந்தக் கடையும் இல்லையே?
"என்னங்க நீங்க இருக்கீங்க? உங்க சம்சாரம் என்னாச்சு?" என்றேன். அன்று அவனிம் கேட்டது ஞாபகம் வந்தது.
"அவுளுக்கு முடியல சார். டாக்டர் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டாரு…" என்றான்.
அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாது அவன் இருப்பது போல் தோன்றியது. அவனும் இருப்புக் கொள்ளாதவன் போல் தான் நின்றான்.
(தொடரும்)