கலாசாரம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகும். இன்று எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் உள்ள கலாசார சீர்கேடு நம் கண்களை உறுத்துகிறது.
நம் நாட்டின் அன்றைய கலாசாரம் ஆங்கிலேயர்களையே கவர்ந்திருக்கிறது. அதனால்தான் அந்நாட்டுப் பெண்கள், நம் நாட்டு உடையான புடவையை அணிந்து மகிழ்ந்தார்கள்; பொட்டு வைத்துக் கொண்டார்கள்; வளையல் அணிந்து கொண்டார்கள். ஆனால், இன்று நம் நாட்டுப் பெண்கள் நாகரிக உடை என்னும் பெயரில், நமது தட்பவெப்ப சூழ்நிலைக்கு சாதகமில்லாத இறுக்கமான உடையை அணிந்து கொண்டிருக்கிறார்கள். புரட்சிக் கவிஞன் பாரதியார் விரும்பியது சிந்தனையிலும், செயலிலும் வீரமும், விவேகமும் உள்ள புதுமைப் பெண்களைதான். ஆனால் இன்று பெண்கள் அழகுப் பதுமைகளாக தம்மை நிலை நிறுத்துவதை புதுமையாக எண்ணிக் கொள்வது வருத்தத்தை அளிக்கிறது.
‘இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்’ என்ற கருத்து முரண்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்த இளைஞர்கள் விடுதலைக்காக வீடு துறந்தனர்; ஆசை துறந்தனர்; இளமையையே துறந்தனர். அதனால் நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம்! ஆனால், இன்று பெரும்பான்மையான இளைஞர்களில் இலக்கு தம்மை நோக்கியே இருக்கிறதே ஒழிய நாட்டு நன்மை கருத்தில் வருவதே இல்லை.
அது மட்டுமா? நம் நாட்டின் குடும்பம் என்ற கோயில் சிதைந்து கொண்டு வருவது இன்னும் வேதனையை ஏற்படுத்துகிறது. பிள்ளை தம் வயதான பெற்றோரை கண்போல் காத்து வளர்த்த அந்த அற்புதக் கலாசாரம் மாறி, இன்று அவர்களைக் கண் காணாத முதியோர் இல்லத்தில் கொண்டு விடுகிற "நாகரீகம்" மேலோங்கி நிற்கிறது. இதைப் பற்றி ஒரு சாட்டையடிக் கவிதை ஒன்று உண்டு:
‘வீட்டிற்குப் பெயர்
அன்னை இல்லம்- அன்னை
இருப்பதோ
முதியோர் இல்லம்!’
‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி’ என்ற பெருமை நம் தமிழுக்கு மட்டுமே உண்டு. ஆனால் இதையும் விட்டு வைக்கவில்லை மொழிக் கலப்பு. நம் நாட்டில் ‘மணிப்பிரவாள’ தமிழ் என்ற நடை உண்டு. அது தமிழும் வடமொழியும் கலந்து வருவது. அதுபோல் தற்போது தமிழும் அங்கிலமும் கலந்த ஒரு நடை வந்துள்ளது. அதற்கு பெயர் ‘பண்ணி தமிழ்’ என்பார்கள். அதிர்ச்சியாக இருக்கிறதா?
கேளுங்கள், ஒருவர் கூறுகிறார். “நான் மார்னிங் எழுந்ததும் முதலில் வாக் பண்ணி, அப்புறம் பிரஷ் பண்ணி, பாத் பண்ணி, ட்ரெஸ் பண்ணி ஆபீசுக்கு ட்ராவல் பண்ணுவேன்’ என்றாராம். எத்தனை ‘பண்ணிகள்’ பார்த்தீர்களா? நாம் நம்முடைய கன்னித் தமிழை, பண்ணித் தமிழ் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது நம் நாட்டுக் கலாசாரம், ஒழுக்கம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற மிகப்பெரிய சிந்தனையை எழுகிறது. மேலை நாகரிகத்தின் மோகத்தில் சுழன்றாடிக்கொண்டிருக்கும் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது வருங்கால சந்ததியினர் வழித்தடம் மாறுவதற்கு இதுவே வழிகாட்டி என்பது உறுதியாகிறது. பெரும்பாலான வசனங்களின் இரட்டை அர்த்தங்கள் இரும்பைக் காய்ச்சி காதில் ஊற்றியது போல் உள்ளது. காட்சிகளோ கண்களைக் கூசச் செய்கின்றன. ஒன்றிரண்டு நல்ல திரைப்படங்களின் கதி கடலின் நடுவில் இரண்டு சொட்டு அமுதத்தை விட்டது போலாகி விடுகிறது. இந்த மாதிரியான திரைப்படங்களில் காணப்படும் கலாசார சீர்கேடு நம் நாட்டின் மனிதநேயம், அன்பு, மரியாதை போன்ற ஆணிவேரையே அசைத்துவிடும் அபாயம் உள்ளது.
இதுபோல் இந்த கலாசார புதுமை ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. உடல் வருத்தி, மனம் ஒருமித்து, தூய வாழ்க்கை வாழ்ந்து, இறைவனையே நினைத்து மறைந்த மகாமுனிவர்கள் வாழ்ந்த இத்திருநாட்டில் இன்று பல போலி ஆன்மீகவாதிகள்!
மனிதனை மகானாக்கும் கலாசாரம் நம்முடையது. ஆனால் மாறிவரும் கலாசாரம் மக்களை மாக்களாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது! புதுமைகள் தவறில்லை. ஆனால் அவை நமக்கு நன்மை விளைவிக்கின்றனவா என்று ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுதல் அவசியம்.
தமிழ்ப் பேச்சும் மாறிக்கொண்டு வருகிறது. புரசைவாக்கத்திலிருந்து என்பது பொர்ஷ்வாக்கம்லிருந்து என்றும், தாம்பரத்திலிருந்து என்பது தாம்பரம்லிருந்து என்றும் பேசப்படுகிறது, இளைஞைகளின் பொருள் புரியாத பல வார்த்தைகள் தமிழில் கலந்து பேசப்படுகின்றன, பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்று யூகிக்க முடியும், இப்போது தமிழ்ப் பெயர்கள் குதிரைக்கொம்புகளாகிவிட்டன, வேதனைதான்,-அரிமா இளங்கண்ணன்
பண்ணி பன்னி என்று பேசுவதால் அது பன்னி மொழியாகவும், அவர்கள் கூற்றுப்படி funny மொழியாகவும் மாறிவிட்டது
இ.பி.கோ 498ஆ என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்…http://tamil498a.blogspot.com/