வயக்காட்டு வேலைக்கு
ஊரையே எழுப்பிவிடும்
ஆறு மணிச்சங்கு
முறைமாறி எழுப்பி
விடும் சேவலையும்
நாலு மணிக்கு.
விறகடுப்புல வெண்ணிவச்சு
விடியக்காலப் பனிய ஓட்டி
விறுவிறுன்னு எட்டு வச்சா
நாலெட்டுல அழகர் கோயிலு
எட்டெட்டுல சிவன் கோயிலு.
குடுமிச்சாமி மந்திரம்னு
ஏதேதோச் சொல்ல-அந்த
நாராயணனும் சிவனேன்னு
கேட்டுக்கிட்டு நிப்பான்.
அக்ரஹாரப் பொண்ணுக
கூடி ஒக்காந்து
ஆண்டாளப் பாடுங்க.
கிழக்கால வெளிச்சம்
வர்ற நாழிகைல
சூடத்தட்டக் காட்டைல
வரிசையா வந்து நின்னா
புளியோதரை வாசம்
வயித்தக் கவ்வும்
எட்டூருக்கும்.
கோயிலு நிலத்துல
விளைஞ்சு நின்ன கதிர
ஒத்தை ஆளா அறுத்துப்
போட்டு நெல்லுமணிய
நான் கொண்டு வந்து
சேர்க்க – ஊருக்கேப்
பொங்கி போடுது
பெருமாளு.
மண் வாசம் மாறாத கவிதை. நல்ல சொல்லாடலொடு கூடிய நல்ல கருத்துமிக்க கவிதை.
கா.ந.கல்யாணசுந்தரம்.
செய்யாறு.
மிக்க நன்றி கல்யாணசுந்தரம் அவர்களுக்கு