மாப்பு என்ன வேலையப்பு?

(மின்னஞ்சலின் தழுவல்)

என்னை பெண் பார்த்த மென்பொருள் வல்லுனரிடம் எங்க வீட்டு ஆளுங்க கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும். முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே!

"ஏம்பா, இந்த கம்ப்யூட்டர் படிச்சிட்டு நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?"

”நியாயமான கேள்வியப்பு” எனச் சொன்னார் மாமா.

”வெளிநாட்டுக்காரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். வீட்டுல, நீச்சல் குளத்துல இருந்துக்கிட்டே வேலையை முடிக்கணும். அதுக்கு எவ்வளவு பணம் வேணாலும் செலவு செய்வான்.”

”அது சரி! கூந்தல் இருக்கிற மகராசி கொண்டையைப் போடுவா கூடாரமா” என்று பாட்டி சொல்ல, அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் மாப்பிள்ளை.

”இது மாதிரி அமெரிக்கா, ஜரோப்பாவில இருக்குற பேங்க், இன்ஸூரன்ஸ் கம்பெனிகள்ல ஏதாவது கம்பெனி, "நான் செலவு செய்யத் தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்னு கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.”

”என்னது? கல்கண்டா!” என சின்ன பாட்டி கேட்க, ”இல்ல client”ன்னு சொல்லிட்டுத் தொடர்ந்தார்.

”இந்த மாதிரி Client பிடிக்குறதுக்காகவே எங்க ஆளுங்க கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants… இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

”அதுசரி! ஆத்துல போட்டாலும் அளந்து போடும்பாங்க, காசு கொடுக்குறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பானில்ல! அவனை எப்படி அமுக்குவீங்க மாப்பு?”

‘சரியான பழம் பஞ்சாங்கக் குடும்பம். ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு பழமொழியை சொல்லுதுக’ என மனதிற்குள் திட்டிக் கொண்டே, ”உங்களால இதப் பண்ண முடியுமா? அதப் பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லா கேள்விகளுக்கும், ‘முடியும்’னு பதில் சொல்றது இவங்க வேலை.”

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்பத் திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" எனக்கு ஒரு கவுளி வெத்தலைக் கொடுத்தா சொல்லிட்டே இருப்பேனே! என்னோட ரெசும் கொடுக்கட்டுமா?”

”அது என்ன ரெசும்?”

"அட! அதுதானப்பு.. என் படிப்பு என்ன? பரம்பரையென்ன? அனுபவம் என்ன? எத்தனை பேரை ஆண்டேன்னு சொல்லி ஒரு இரண்டு பக்கத்துக்கு எழுதுவீங்கல்ல அது!”

”அய்யோ! தாத்தா! அதுக்கெல்லாம் நீங்க அப்ளை பண்ண முடியாது. வயசாயிருச்சில்ல!"

”அதனாலென்ன அப்பு! பேக் எக்ஸ்பீரியன்ஸ் போட்டுட்டா போச்சு!”

”back இல்லீங்க! அது fake!”

”ஏதோ ஒண்ணு, நீ மேலே சொல்லு!”

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிகள்லேயும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சுத் தர்றோம், 50 நாள்ல முடிச்சுத் தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாளச் சொல்றாங்களோ, அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்கதான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்”

”அதெப்படி? அவனுக்கு மூளையில்லையா யோசிக்க?”

”அவங்களை சம்மதிக்க வைக்கிறதுதான் நம்ம மக்களோட வேலை. பர்கரும், பீட்ஸாவும் சாப்பிட்டுக்கிட்டே அடுத்த வருஷம் வரை பேசித் தள்ளுவாங்க!”

”தள்ளுவாங்களா? கொல்லுவாங்களா?”

”இரண்டும்தான். நம்ம தொல்லை தாங்காம சரின்னு சொல்லிக் கையெழுத்து போட்டான்னு வைங்க, ஒரே அமுக்கா கோழி அமுக்கற மாதிரி அமுக்க வேண்டியதுதான்”

”ஆனா, அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யணும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ராஜெக்ட்னு ஒன்ன நாங்க டெலிவரி பண்ணுவோம்.”

”அதப் பார்த்துட்டு, ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு புலம்ப ஆரம்பிப்பான்”

”அது சரி! ஆழம் தெரியாம காலை விட்டா, அலைய வேண்டியதுதானே! அப்புறம்?" அப்பா ஆர்வமானார்.

"இப்போதான் நாங்க எம்.ஆர். ராதா குரலில் "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

”சீரா? அங்கேயும் வரதட்சணையா?”

”CR – Change requestங்க!”

”இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

”அப்ப எங்க பொண்ணைக் கொடுத்தாலும் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தாதான் ஒரு வாரம் உன்கூட இருப்பேன்னு சொல்லுவீகளோ?”

”அப்படி இல்லைங்க!”

"இதுக்கு அவன் ஒத்துப்பானா?"

"ஒத்துகிட்டுத்தான் ஆகணும். மொட்டையடிக்கப் போயிட்டு பாதி மொட்டையில வர முடியுங்களா?”

"சரி! ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜெக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவர்தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவருதான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லுங்க."

"அதான் கிடையாது! இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவரப் பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி, டயர்ட் ஆகுறதுதான் இவரு வேலை."

"பாவம்பா!"

"ஆனா, இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவருக்கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்சினையும் தீர்த்து வச்சிடுவாரா?"

"ஒரு பிரச்சினையக் கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்சினை எனக்குப் புரியுதுனு சொல்றது மட்டும்தான் இவரோட வேலை!"

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மாட்யூல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடிப் பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சாத்தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க… டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும்தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர், வேலைக்கு சேரும் போதே ‘இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்டதான் இருக்குனு’ சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ்ப் பசங்கதான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.”

”புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்குறதுக்கு சம்பளமா? புதுசாதான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுறாங்களா? சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ல?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜெக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்ல ஒரே தூசியா இருந்துச்சு. தும்மல் போட்டதுல டீம் மெம்பருக்கு பன்றிக் காய்ச்சல், மெடிக்ளைம் அப்படின்னு சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் கறப்போம்.”

”என்ன மாப்பு! மாட்டிலிருந்து பால் கறக்கற தினுசா சொல்றீங்க?”

”அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிக்கலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.”

”அவனும் சரி.. சனியனை எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி, முன்ன பின்ன ஆனாலும் முடிச்சிக் கொடுத்துட்டு கையக் கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தானே?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாமதான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜெக்டு முடியப் போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அதப் புரிஞ்சிக்கக் கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், எங்களத் தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர இந்தப் ப்ரொஜெக்டப் பார்த்துக்கச் சொல்லுங்கன்னு புதுப் பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

”கழுத கெட்டா குட்டிச்சுவர்ன்னு சும்மாவா சொன்னாங்க!”

”இதுக்குப் பேரு Maintenance and Support. இந்த வேலை வருஷக் கணக்கா போகும்.”

இத்தனை கேள்வி பதில்களுக்கு பின் அந்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறீங்க? உக்காந்த இடத்தில ஊர் காசு பாக்கறவன் வேண்டாம், உழைச்சு சம்பாதிக்கறவனா பார்க்கலாம்னு வன்பொருள் வல்லுனரா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சாங்க.

கொடுமை கொடுமையின்னு கோயிலுக்குப் போனா, அங்க ஒரு கொடுமை நடந்த மாதிரி, அவரும் மென்பொருள் வல்லுனரா அவதாரம் எடுத்த கதையைச் சொல்ல, இன்னும் பல பக்கம் வேணுமிங்க. மறுக்கா சொல்றேனுங்க அதை !

About The Author

6 Comments

  1. gomathi mylraj

    சிரிச்சிக்கிட்டே ஒத்துக்க வேண்டிய உண்மை.

  2. P.Balakrishnan

    மூலக்கதையைப் படித்துள்ளேன். பழமொழிகள் நன்று.

  3. sundar

    அருமை…….நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது

  4. Kavitha Prakash

    வருகைக்கு நன்றி கோமதி, பாலு சார், சுந்தர்

  5. KM

    ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன். நன்றி!.
    னானும் இந்தக் களத்துல தான் இருக்கேன், உண்மைக்கும் இதற்கும் ரொம்ப தூரம் இல்லை.

  6. sathish kannan

    இப்பவே கண்ண கட்டுதே!!! சிரிப்பதற்கு ஒரு வாரமாவது டைம் கொடுங்க அதற்கு பின் வன்பொருள் வல்லுனரை பற்றி…………

Comments are closed.