மஹாத்மா காந்தி மார்க்கெட் (4)

மார்க்கெட்டின் உள்ளமைப்பு அடியோடு மாறிப் போயிருக்கிறது.

அந்த அப்பாவி முயலின் கழுத்தைக் கீறின கசாப்புக் கடை முகப்பைக் காணவில்லை. வலது பக்கம் வரிசையாய் வாழைப்பழ ஹோல் சேல் கடைகள்.

அந்த வாழைப் பழ வளாகத்தில் சான்ராஜா தென்பட மாட்டானா என்கிற எதிர்பார்ப்போடு ரெண்டு பக்கமும் பார்வையைச் செலுத்தியபடி நடக்கிறேன்.

ம்ஹூம். நண்பனைக் காணவில்லை.

அவனுடைய பெயரைச் சொல்லி ஒரு கடைக் காரரிடம் விசாரித்ததில், "நம்ம பாய் மொதலாளியக் கேக்கியளா?" என்று எதிர்த்த கடையைக் கை காட்டுகிறார்.

சான்ராஜாவுடைய இன்றைய பெயர் பாய் முதலாளியா! ஆஹா!

கூலித் தொழிலாளியாளிருந்து, உழைப்பால் உயர்ந்து முதலாளியாகிவிட்ட அவனை நினைத்துப் பூரிக்கிற நெஞ்சோடு எதிர்த்த கடையில் கல்லாவிலிருந்த டீன் ஏஜரை எதிர்கொண்டு, "சான்ராஜா….’ என்று நான் இழுக்கவும், "வாப்பா இல்லியே" என்கிறான் அவன். சான்ராஜாவுடைய கடைக்குட்டிப் பையனாயிருக்க வேண்டும்.

"வாப்பா எங்க போயிருக்காங்க தம்பி?"

"காய் பாக்கப் போயிருக்காவ. நீங்க எங்கயிருந்து வாறிய?"

"மெட்ராஸ்லயிருந்து வாறேன் தம்பி. ஒங்க வாப்பாவோட அந்தக் காலத்து தோஸ்த் நான். வாப்பா வாறதுக்கு நேரமாகுமோ?"

"வெள்ளன பேய்ட்டாவ. இன்னும் ஒரு மணி நேரத்ல வந்துருவாவ. இரிங்க, வந்துருவாவ."

"வரட்டும் தம்பி. ஒரு அவர் ஆகும்ல்ல, அது வரக்யும் நா நம்ம ஊரச் சுத்திப் பாத்துட்டு வாறேன்."

"வாப்பா வந்தா ஒங்கப் பேர் என்னண்டு சொல்ல?"

"ஹீரான்னு சொல்லு." சொல்லிவிட்டு நான் ஊர் சுற்றக் கிளம்பினேன்.

வடக்கு பஜாரிலிருந்து தெற்கு பஜாருக்கு நடந்து, முருகன் ஸ்டோர், பொன்னையா பிள்ளை ஸ்டோர் வழியாக லூர்து நாதன் சிலைக்கு வந்தேன்.

நான் படித்த சேவியர்க் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மேல் போலீஸ்காரர்கள் அராஜகம் புரிந்த போது வெகுண்டெழுந்து போராடி உயிரைவிட்ட மாணவர்த் தலைவன் லூர்து நாதன். காமராஜர் திறந்து வைத்த சிலை.

லூர்து நாதனிடம் விடைபெற்றுக் கொண்டு கட்டபொம்மன் சிலைக்கு வந்து, அங்கிருந்து சரோஜினி பார்க், சேவியர்க் கல்லூரி, நம்ம ஆரம்ப காலக் கான்வென்ட் வழியாக மலரும் நினைவுகளின் சுகமான சுமையோடு திரும்பவும் மஹாத்மா காந்தி மார்க் கெட்டுக்குள் புகுந்து, பழ மண்டிக்குள் பிரவேசித்தால், அங்கே சான்ராஜா!

"எலேய், ஹீரா, நீயா!" என்று என்னை இழுத்துக் கட்டிக் கொண்டான்.

வாழைக் குலைகளைச் சுமந்து சுமந்து முறுக் கேறிப்போன உடம்பு, இப்போது முதலாளியான பின்னால் டச் விட்டுப் போனதால் கொஞ்சம் தளர்ந்திருந்தது.

"பாத்து எத்தன வருஷம் ஆச்சு டேய், நீ காலேஜ்ல படிச்சிட்டிருந்தப்ப ஒரு நா இதே மார்க்கெட்ல பாத்தோம் ஞாபகமிருக்கா?"

"ஆமா, நீ பாத்தும் பாக்காதது மாதிரிப் போனியே!"

"நல்லா ஞாபகம் வச்சிர்க்கியே டேய், அப்ப ரொம்பக் கஷ்டத்ல இருந்தேன். இப்பக் கொஞ்சம் சுமாரான வசதியோட இருக்கேன், சொந்தத்ல கட வச்சிர்க்கேன். நீ அன்னிக்கிப் பாத்த மாறியே காலேஜ்ப் பையனாட்டம் இருக்கியே டேய்! நாந்தான் கெழவனாய்ட்டேன். சரி வா, வூட்டுக்கு போவோம். சாப்ட்டுக்கிட்டே பேசலாம்."

"சாப்பாடெல்லாம் வேண்டாம்ப்பா. நா ஊருக்குக் கௌம்பணும்."

"இந் நேரத்ல எந்த ரயில் இருக்கு?" "ரயில் இல்ல. பஸ்."

"மெட்ராஸ்க்கு பஸ்லயா போறா?"

"மெட்ராஸ் இல்ல, ராஜபாளையம். அங்கயிருந்து பொதிகை எக்ஸ்ப்ரஸ்ஸப் புடிக்கணும்."

"அதுக்கென்ன, பட்னியாவா போவா? வூட்டுக்கு வந்து சாப்ட்டுட்டுக் கௌம்பலாம்."

"இல்லப்பா, பஸ்ல போறப்ப நா ஒண்ணும் சாப்புடறதில்ல. அப்பறம் வயிறு தகராறு பண்ணிரும். ஒன்னப் பாத்ததே போதும். நெஞ்சும் வயிறும் நெறஞ்சு போச்சு. டைம் ஆயிட்டிருக்கு பார்."

"இதென்ன டேய், நீ வலது கைல வாட்ச் கட்டியிருக்கா! ஒன்னோட ஸ்டைல் தனிதாம் போல."

"நீ மட்டும் ரெண்டு கைலயும் வாட்ச் கட்டிக்கிட்டு வரலியா!"

பழசை நான் லேசாய்க் கிண்டி விடவும், சான்ராஜா பெரிதாய்ச் சிரித்தான். குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். என்னைக் கட்டிக் கொண்டு சிரித்தான்.

வாட்ச் கதையோடு, அவனுக்கு அவனுடைய ஏரோப்ளேன் கதையுங்கூட ஞாபகத்துக்கு வந்திருக்கும்!

சிரித்து ஓய்ந்த பின்னால், "ஆமாண்டேய், மெட்ராஸ்ல என்ன யாவாரம் பண்ணிட்டடிக்கா?" என்றான்.

"அண்ணா நகர்ல கன்னா பின்னான்னு ஒரு கட வச்சிருக்கண்டு யாரோ எப்பவோ சொன்ன மாறி ஞாபகம்…."

"வச்சிருந்தேன். நஷ்டமாப் போச்சு, இப்ப மூடியாச்சு."

"அதுக்கென்ன, திரும்பவும் ஒரு யாவாரம் செட்டப் பண்ணு. மறுபடி டாப்ல வந்துருவா. நல்லவங்கள ஆண்டவன் கைவுட மாட்டான். சரி, இப்ப எப்டி நேரம் போவுது?"

"பத்திரிகைகளுக்குக் கத எழுதிட்டிருக்கேன். காலம் ஓடுது."

"அப்ப, என்னப் பாத்ததையும் கதயா எழுதிருவா?"

"நிச்சயமா. ஆரம்பத்லயிருந்து எழுதுவேன்."

"ஆரம்பத்லயிருந்துன்னா?"

"ஏரோப்ளேன் கதயிலயிருந்து."

"எலேய், சேட்டக்காரப் பய டேய் நீ. எழுது எழுது. கத, புஸ்தகத்ல வந்தா எனக்கொரு புஸ்தகம் அனுப்பி வையி டேய்."

"கட்டாயமா அனுப்பறேன் சான்ராஜா. அப்ப நா கௌம்பட்டுமா?"

"ஏமாத்திப்புட்டு ஓடப்பாக்கா. சரி, கௌம்பு. இந்தா நம்பக் கார்ட வச்சிக்க. அடுத்த வாட்டி வர்றப்ப போன் போட்டுட்டு வா. வந்து, நம்ம வூட்ல தங்கிட்டு சாப்ட்டுட்டுப் போவணும் என்ன?"

முன்னொரு காலத்தில், எங்களுடைய பங்களா வீட்டின் கேட்டின் மறைவில் நின்று, நான் தின்றது போக எஞ்சியதை வாங்கித் தின்றவன், இன்றைக்கு எனக்குச் சொல்கிற விருந்தோம்பல் வார்த்தைகளில் என் கண்கள் பனிக்கப் பார்க்கின்றன.

"பஸ் ஸ்டாண்டுக்கு எப்டிப் போறா?" என்றவனுக்கு, "டவுன் பஸ்" என்று சுருக்கமாய் நான் பதில் சொன்னதை அவன் ஆட்சேபிக்கிறான்.

"டவுன் பஸ்ல எப்டி டேய் போவா, இந்தா எம் மவனப் போய் பைக்ல வுட்டுட்டு வரச் சொல்லுதேன்."

********

சான்ராஜாவுடைய மகன் பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ணி விட்ட பின்னால், கிளம்பத் தயாராயிருந்த ராஜபாளையம் பஸ்ஸில் ஏறிக் கொண்டு பையனுக்குக் கையசைக்கிறேன். சுகமான நினைவுகளோடு கண்களை மூடியபடி ஸீட்டில் சாய்கிறேன்.

திடீரென்று ஏதோ நினைப்பு வந்து, கண் விழித்துப் பார்த்தால், தச்சநல்லூர் ரோடில் பஸ் போய்க் கொண்டிருக்கிறது.

வெறுங்கையோடல்லவா நான் போய்க் கொண்டிருக்கிறேன் என்றொரு இடறல். அடடே. நான் பாளையங் கோட்டைக்கு வந்ததே நார்த்தங்காய் ஊறுகாய் வாங்குவதற்காக அல்லவா!

அட விடப்பா, எப்படிப்பட்ட புராதன சிநேகிதம் ஒன்றைப் புதுப்பித்து விட்ட சாதனையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாய்!

உறவுகளை விடவா டேய் ஊறுகாய் முக்கியம்!

(முடிந்தது)

(நன்றி : வடக்கு வாசல்,ஃபிப்ரவரி 2009) 

About The Author