மஹாத்மா காந்திப் படம் ஒன்று. அதையடுத்து, பலே பாண்டியா படத்தில் மருதுவாய் வருகிற ரெண்டாவது சிவாஜி அட்டகாசமாய்ப் போஸ் கொடுக்கிற படம் ஒன்று.
நான் வாழ்க போட்ட நடராஜன் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பாரா அல்லது வாழ்ந்து முடித்திருப்பாரா என்கிற உறுத்தலோடு அந்தக் கடையில் எட்டிப் பார்த்தேன். வயசாளிகள் ரெண்டு பேர் உள்ளே பெஞ்ச்சில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் தொழில் செய்கிற நாவிதராகவும், மற்றவர் அவருக்குக் கம்ப்பெனி கொடுக்க வந்த சிநேகிதராகவும் இருக்கலாம்.
"ஐயா, நடராஜன் கட தானேங்க இது?" "ஆமா, நீங்க?"
"ஒரு காலத்ல நடராஜனோட கஸ்டமர்ங்க நா. நடராஜன்…இருக்… காருங்களா……?"
"அவர் போய் எட்டு வருசம் ஆச்சே சார். இப்ப நாந்தான் கடைய நடத்திட்டிருக்கேன்."
"ஆனா, அன்னிக்கி நடராஜன் மாட்டி வச்சிருந்த அதே மஹாத்மா காந்திப் படம், அதே சிவாஜி கணேசன் படம் எல்லாம் அப்டியே இருக்கு! பாக்க சந்தோஷமா இருக்கு."
"ஆமா சார், படங்களக் கழட்டாம நடராசன் ஞாபகார்த்தமா அப்டியே வச்சிர்க்கோம். சார் இப்ப எங்க இருக்கீய?"
"நா இப்ப மெட்ராஸ்ல இருக்கேங்க. ரொம்ப நாளக்யப்புறம் பாளையங்கோட்டக்கி வந்தேன். கடையப் பாத்ததும் நடராஜன் ஞாபகம் வந்துச்சு. அப்ப நா வறேங்க ஐயா."
"ரொம்ப சந்தோசம் சார். பேய்ட்டு வாங்க. இந்த ஊருக்கு மறுவாட்டி வந்தீயன்னா நம்ம கடையவும் வந்து எட்டிப் பாத்துட்டுப் போங்க."
"நிச்சயமா."
நடராஜன் கடையிலிருந்து வலது பக்கம் பார்வையைத் திருப்பிய போது வடக்கு பஜார் ரோடும், அதன் முனையிலிருந்த சங்கரம் பிள்ளைக் கடையும் கண்ணில் பட்டன. நடராஜனைப் போலவே அழகான மனிதர் சங்கரம் பிள்ளை. கல்லூரி நாட்களில், சாயங்காலங்களில் நண்பர்கள் ஜோதி வினாயகத்தோடும், சேகர், ஹில்பர்ட்டோடும் நின்று அரட்டையடிக்கிற இடம் இந்த சங்கரம் பிள்ளைக்கடை முக்கு தான்.
கடையில் விற்பனைக்கிருக்கிற எல்லாப் பத்திரிகை களையும் எனக்கு ஓசியிலேயே வாசிக்கக் கொடுக்கிற சங்கரம் பிள்ளை இன்னும் வாழ்ந்திருக்க சாத்தியமே இல்லை என்கிற நிச்சயத்தோடேயே அவருடைய கடையை சமீபித்தேன்.
சங்கரம் பிள்ளையுடவே முகச்சாயலிலிருந்த இளைஞரிடம் விசாரித்தேன்.
"சார், நீங்க சங்கரம்புள்ள ஸன்னுங்களா?"
"ஆமா சார்."
"அப்பா….?"
"அப்பா போய் ரெண்டு வருஷம் ஆச்சு சார்." ரெண்டு வருஷம் தானா? அடடே, கொஞ்சத்தில்தான் மிஸ் பண்ணியிருக்கிறேன். ரெண்டு வருஷம் முந்தி பாளையங்கோட்டைப் பக்கம் வந்திருந்தால் சங்கரம் பிள்ளையைக் கடைசி கடைசியாய் ஒரு தரம் பார்த்து விட்டுப் போயிருக்கலாம்.
அந்த மன வருத்தத்துடனேயே வடக்கு பஜார் வழியாய் நடந்த போது, வலது புறம் மஹாத்மா காந்தி மார்க்கெட்டின் கேட் வந்தது.
கல்லூரிக் காலங்களில், லீவ் நாட்களில், கொழும்புக் கூடையோடு வந்து, காய்கறிகளும், மட்டன், மீனும் வாங்கிக் கொண்டு போகிற மஹாத்மா காந்தி மார்க்கெட்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, மார்க்கெட்டுக்கு வந்த போது, நெஞ்சில் ரத்தங்கசியச் செய்த கொடூரமான காட்சியொன்று இப்போது மனசில் விரிகிறது.
கசாப்புக் கடைகளுக்குப் போகிற பாதையில் ஒரு சிறு கும்பல்.
கும்பலின் இடையே கிடைத்த இடைவெளிக்குள்ளே தலையை நுழைத்துப் பார்வையை ஓடவிட்டபோது தான் அந்தக் கொடுமையைக் காண நேர்ந்தது.
ஒரு கொடுங்கோல்க் கசாப்புக்காரன் முயல் ஒன்றைத் தோலுரித்துக் கொண்டிருந்தான், உயிரோடு.
பரிதாபத்துக்குரிய அந்த ஜீவனைக் காதுகளைப் பற்றி உயர்த்திப் பிடித்தபடி, கத்தியைக் கொண்டு அதன் கழுத்தைச் சுற்றிக் கீறி, அது பதறப் பதறத் துகிலுரித்துக் கொண்டிருந்தான்.
முயலினால் பதறத்தான் முடியும், கதற முடியாது. முயலுக்குக் குரல் கிடையாது. தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தக் கூட த்ராணியற்ற அந்த வாயில்லாப் பிராணிக்கு இழைக்கப்பட்ட சித்ரவதை என்னிலிருந்து ஓர் அவலக் கவிதையாய் வெளிப்பட்டுப் பின்பு கணையாழியில் பிரசுரம் பெற்றது.
முயலுக்கு முகம்
மனுஷக் குழந்தை போல
மஹாத்மா காந்தி மார்க்கெட்டில்
அந்த குரலில்லா ஜீவனைக்
கன்னத்துத் தோல் படபடக்க
கண் இமைகள் முணுமுணுக்க
கழுத்தைக் கீறியொருவன்
உயிரோடு துகிலுரித்த கொடுமை
(கூட்டத்தில் ஒரு மிருகாபிமானி:
கொன்னுட்டாவது உறிய்யா பாவம்)
வள்ளுவனின் புலால் மறுப்பும்
மஹாத்மாவின் ஜீவ அஹிம்சையும்
சம்மட்டியாய்
மாறி மாறி என் மூளையில்
முயல்க் கொலை நடந்த அன்றுதான் மார்க்கெட்டில் வைத்துச் சான்ராஜாவைப் பார்த்தேன், பல வருஷங் களுக்குப் பின்னால்.
பழுத்துக் கொழுத்த ரெண்டு வாழைக்குலைகளை ரெண்டு தோள்களிலும் தொங்கவிட்டபடி, பழங்கள் கால்களில் இடற, வேலைப் பளுவும் வாழைப் பளுவும் தோள்களை அழுத்த, மிகுந்த சங்கடத்தோடு அவன் நகர்ந்து கொண்டிருப்பது புரிந்தது.
அவன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறதை மனவேதனையோடு பார்த்தபடி நின்றிருந்த என்னை ஏறெடுத்துப் பார்த்தவன், பல வருஷங்களுக்குப் பிறகு பார்க்கிற முகமென்றாலும், என்னை அடையாளங் கண்டுகொண்டு, சிக்கனமாய் ஒரு புன்னகையை சிந்தி விட்டு அவன் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான், சிரமத்தோடு.
நான் கல்லூரியில் படிக்கிறவன் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கும். மாறாக, தான் ஒரு கூலித் தொழிலாளியாயிருக்கிறோமே என்கிற தாழ்வுணர்ச்சியும் விரக்தியும் வாழைக்குலைகளின் கனத்தோடு சேர்ந்து மேலும் அவனை அழுத்தியிருக்க வேண்டும்.
(தொடரும்)
“