மலையிலே… மலையிலே (7)

நடந்ததை சடுதியில் உணர்ந்து கொண்ட மைனா யோசிக்காமல் தானும் கிணற்றுக்குள் குதித்தாள்.

மூழ்கிக் கொண்டிருந்த அக்ஷயாவின் தலை முடியைப் பற்றி அவளைத் தண்ணீர்க் குழாய் இருந்த பகுதிக்கு இழுத்துச் சென்றாள்.

“அக்ஷயா, இந்தப் பைப்பைப் பிடிச்சுக்கோ. பயப்படாதே. ஒண்ணுமில்லை. நல்லா மூச்சு விடு” என்று அவளை ஆசுவாசப் படுத்தினாள்.

பைப்பைப் பிடித்துக் கொண்டு தன்னை நிதானப் படுத்திக் கொண்ட அக்ஷயா பயத்தின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. மலங்க மலங்க விழித்தபடி இருந்தாள்.

அவள் கன்னத்தில் பலமாகத் தட்டிய செல்லம், "அச்சயா, இங்க பாரு. ஒண்ணும் இல்லை. நான் மைனா. என்னைத் தெரியுதா? பயப்படாதே, அச்சயா. பேசு… பேசுப்பா" என்று அவளைப் பேசும்படி உற்சாகப்படுத்தினாள்.

சற்று நேரத்துக்குப் பிறகு மெல்லத் தலையசைத்தாள் அக்ஷயா. "தேங்க்ஸ், மைனா" என்றாள் மெதுவாக.

"மேலருந்து நம்மளை வாளி கட்டித் தூக்கிருவாங்க. நீ கவலைப் படாதே" என்று தைரியமூட்டினாள் மைனா.

அதே போல வாளியிலேறி மேலே வந்ததும் தயாராக நின்ற செல்லத்தின் அம்மா இருவரையும் துண்டால் துவட்டி விட்டார். செல்லத்தின் துவைத்த பாவாடை சட்டையைக் கொடுத்து இருவரையும் மாற்றிக் கொள்ளச் சொன்னார்.

சாதாரணமாய் இடும்பு பிடித்திருப்பாள் அக்ஷயா. கேலி பேசியியிருப்பாள். ஆனால் அவள் செத்துப் பிழைத்திருக்கிறாளே! வாங்கி உடுத்திக் கொண்டாள்.

"பட்டணத்துப் பிள்ளைக்கு இந்தத் தண்ணி ஒத்துக்கிடுதோ என்னமோ?" எனச் சொல்லித் தலையை நன்றாகத் துவட்டி, சாம்பிராணிப் புகையில் தலையைக் காய வைத்தார் செல்லத்தின் தாய்.

பின் அக்ஷயாவின் பாப் முடியில் கஷ்டப்பட்டு ரிப்பன் கட்டி ஜடை பின்னிவிட்டார். பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, "நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள் சொன்னவுடன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

செல்லத்தின் அம்மா தந்த சூடான மதிய உணவுக்குப் பின் காய்ச்சிய பதனீரைக் கொட்டாங்கச்சிகளில் ஊற்றி ஆற வைத்துக் கருப்பட்டியாக்குவதை செல்லம் அக்ஷயாவுக்கு விளக்கினாள். பிறகு அனைவரும் சேர்ந்து ஆட்டுக் குட்டிக்குத் தேவையான குழை, தளைகளைப் பறித்துப் பெரிய கட்டாக்கினார்கள்.

செல்லத்தின் அக்கா பசு மாட்டிலிருந்து பால் கறப்பதை ஆர்வமாகப் பார்த்தாள் அக்ஷயா. கறந்த பாலில் காப்பி கலந்து அனைவரும் குடித்தானதும் வீட்டிற்குக் கிளம்பத் தயாரானார்கள். செல்லத்தின் அம்மா காய்கறிகளைப் பறித்து ஓலைப் பெட்டியிலிட்டுச் செல்லத்தின் தலையில் ஏற்றிவிட்டார்கள். குழைக் கட்டினை செல்லத்தின் அக்கா தலையில் தூக்கி வைத்துக் கொண்டு முன்னால் நடந்தார்.

"தேங்க் யூ ஆன்டி" என்றாள் அக்ஷயா, செல்லத்தின் அம்மாவைப் பார்த்து.

அவர் அவள் என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் விழிக்க, "தமிழ்ல சொல்லு, அச்சயா" என்றாள் ரோகிணி.

"நன்றி, ஆன்டி" என்று வெட்கத்துடன் கைகூப்பினாள் அக்ஷயா.

அவரும் வெட்கத்துடன், "இருக்கட்டும், பாப்பா" என்று முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

செல்லமும் அவளின் அக்காவும் தலையில் சுமையுடன் வரப்பில் வேகமாக நடைபோடுவதைக் கண்டு அக்ஷயா ஆச்சரியப்படவில்லை. தன்னிடம் இல்லாத பல திறமைகள் கிராமத்தில் வளரும் மற்ற பிள்ளைகளிடம் இருப்பதை அவள் ஏற்கெனவே உணர்ந்திருந்தாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்த போது, "என் பிள்ளை என்ன பட்டிக்காட்டுக் கோலத்தில வந்திருக்கு" என்று அக்ஷயாவின் அம்மா சிரித்தபோது,

"பட்டிக்காடு ஒண்ணும் குறைஞ்சதில்லை. தெரிஞ்சுக்கோங்க" என்றாள் அக்ஷயா.

(முடிவுற்றது)

About The Author