"பே" என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் புதருக்குப் பின்னாலிருந்து குரல் கொடுக்கவும் அக்ஷயா பயத்தில் அலறினாள். தோழிகள் என்று தெரிந்ததும் தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல், "நீங்க எல்லாம் இங்கேதான் இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்" என்றாள்.
அவர்கள் அதை நம்பாமல், "நாங்கதான் உன் மூஞ்சப் பாத்தோமே. உட்ருந்தா அழுதே அழுதிருப்பே. சரியான பயந்தாங்கொள்ளி" என்று அவளை நையாண்டி செய்தார்கள்.
"நான் ஒண்ணும் பயப்படலை" என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தாள் அக்ஷயா.
அப்போது மண்வெட்டியோடு அங்கு நெல்லுக்கு நீர் பாய்ச்ச வந்தார் சின்னான். அவரைப் பார்த்ததும், "அங்கிள், நீங்க இப்பதானே மரத்தில் இருந்து கீழே வந்தீங்க? அதுக்குள்ளே இங்கே வேற வேலை செய்யறீங்க!" என்றாள் வியப்புடன்.
"ஆமா, பாப்பா. நெல்ல நல்லாப் பாத்துக்கலைன்னா வெள்ளாமை போயிரும்ல" என்றார் சிரித்துக் கொண்டே.
அவளுக்கு வெள்ளாமை என்றால் என்னவென்று புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, "நெல் விளையறதுக்கு நெறைய வேலை செய்யணும். இல்லைன்னா அது செத்துப் போயிரும்." என்று விளக்கினாள் கற்பகம்.
"அச்சயா, எங்கப்பா மாதிரி விவசாயிங்கள்லாம் வேலை பாக்கலைன்னா நீ சாப்பிடவே முடியாது தெரியுமா?" என்றாள் மைனா.
"ஆமாமா, உங்கப்பா செய்யற காரு இல்லாம உயிர் வாழலாம். எங்கப்பா செய்யற நெல்லு இல்லாம எல்லாரும் செத்துல்ல போயிருவோம்" என்று குதூகலமாய்ச் சொன்னாள் செல்லம். எல்லாம் நேற்றுக் கோதை அக்கா எடுத்த பாடம்.
அக்ஷயாவுக்கு அவர்கள் சொல்வதிலிருந்த உண்மை புரிந்தது. ஆனால் ஒப்புக் கொள்ள மனமில்லை. பேசாமல் மேலே நடந்தாள்.
"இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு, செல்லம்? கால் வலிக்குது" என்றாள் அக்ஷயா.
"ஒரு நாள் நடக்கறதுக்கே உனக்குக் கால் வலிக்குதா? செல்லம் பாதி நாள் இங்கேருந்துதான் பள்ளிக் கூடத்துக்கு வருவா, தெரியுமா?" என்றாள் ரோகிணி.
"நான் ஸ்கூலுக்குக் கார்லதான் போவேன். எனக்கு நடந்து பழக்கமில்லை"
"ஓஹோ… என்னைக்காவது நடக்க வேண்டி வந்துச்சின்னா என்ன செய்வே?"
"நான் ஏன் நடக்கணும்? எங்கப்பா என்னை எப்பவுமே நடக்க விட மாட்டாங்க. எங்கே போனாலும் கார்லதான் கூட்டிட்டுப் போவாங்க"
"அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி.
அக்ஷயாவின் முகம் வாடியதும் செல்லம், "போதும்டி. பாவம் அச்சயா. இன்னைக்கு அவளை நம்ம ரொம்பக் கேலி பணிட்டோம்" என்றாள்.
"ஆமா, அச்சயா. நீ எங்களை எப்போ பாத்தாலும் குறைச்சுக் குறைச்சுப் பேசுறீல்ல, அதான் கோதையக்கா உங்கிட்ட வெளையாட்டா கிராமத்துப் பெருமையெல்லாம் சொல்லச் சொன்னாங்க. கோச்சுக்காத…" என்று தங்கள் திட்டத்தைப் போட்டுடைத்தாள்.
அக்ஷயாவுக்குக் கொஞ்சம் அவமானமாகவும் கோபமாகவும் இருந்தது. ஆனால் கிராமத்து அனுபவம் அவளுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால், "இட்ஸ் ஒகே" என்று சொல்லியதோடு விட்டுவிட்டாள்.
அதற்குள் வர வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள்.
வெயிலில் வந்ததில் அக்ஷயாவுக்கு மிகுந்த தாகமாக இருந்தது.
"ஐஸ் வாட்டர் இருக்குதா?" என்று கேட்டாள்.
"மண்பானைத் தண்ணி இருக்கு" என்று பானையிலிருந்து நீர் எடுத்து வந்தாள் செல்லம்.
"•பிரிஜ் இல்லையா? எனக்கு சில்லுன்னு தண்ணி வேணும்" ஏமாற்றமாய்ச் சொன்னாள் அக்ஷயா.
"இதைக் குடிச்சித்தான் பாரேன், அச்சயா" என்று செல்லம் வற்புறுத்தவும் விருப்பமில்லாமல் வாங்கி ஒரு வாய் குடித்தாள். நீர் சில்லென்று சுவையாக இருந்தது.
"பரவாயில்லையே, பானையில இருந்த தண்ணி இவ்வளவு சில்லுன்னு இருக்கே" என்று வியந்தாள்.
"அதுதான் மண்பானையோட விசேஷம். குறைஞ்ச செலவில இயற்கையான ஐஸ் வாட்டர்" என்று விளக்கினாள் ரோகிணி.
"ஆ…" எங்கிருந்தோ வந்த அலறல் சத்தம் எல்லோரையும் திடுக்கிட வைத்தது.
(அடுத்த வாரம் பார்ப்போமா?)
“