வேகமாக ஓடி வந்த காளை மாட்டை நோக்கிச் சென்றார் கற்பகத்தின் தந்தை. அக்ஷயா பயந்து கூக்குரலிட்டாள். பிள்ளைகளெல்லாரும் மரத்தின் பின் ஒளிந்து கொண்டார்கள்.
"ஓவ்… ஓவ்" என்ற ஒலி எழுப்பிக் கொண்டே அந்தக் காளை மாட்டை நெருங்கிய அவர், அதன் கூரான கொம்புகளைப் பிடிக்க முற்பட்டார். காளை திமிறிக் கொண்டே ஓடியது. அதன் கொம்புகளை இறுகப் பற்றிக் கொண்டு தொங்கினார் அவர். சற்று நேரத்தில் மாடு ஓடுவதை நிறுத்தி சாதுவாகக் காட்சியளித்தது. அதன் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுத்தபடி அவர்களிருந்த இடத்துக்கு வந்தார் கற்பகத்தின் தந்தை சின்னான்.
அக்ஷயா அவரை அதிசயமாகப் பார்த்தாள். "உங்களுக்கு பயமே இல்லையா, அங்கிள்?"
"இதில என்ன தாயி பயம்?" என்று அப்பாவியாய்க் கேட்டார் அவர்.
"எங்கப்பா பயப்படவே மாட்டாரு, வருசா வருசம் ஜல்லிக்கட்டுல காளை அடக்குவார், பணம் எல்லாம் ஜெயிச்சிருக்காரு" பெருமிதத்தோடு சொன்னாள் கற்பகம்.
வயல்வெளி வழியாக மீண்டும் நடையைத் தொடர்ந்தார்கள்.
ரோகிணி நடந்து கொண்டே, "அச்சயா, உனக்குப் பிடிச்ச சாப்பாடு எது?" என்று கேட்டாள்.
"எனக்குப் பருப்பு சாதம்னா உயிர். உனக்குத் தெரியாதா?"
"சாதம் எதிலருந்து பண்ணுவாங்க?"
"ம்ம்… ரைஸ்லருந்து"
"சரி, ரைஸுக்குத் தமிழ்ல என்னன்னு சொல்லு பார்ப்போம்" என்று சவால் விட்டாள்.
அக்ஷயாவுக்குப் பதில் தெரியாவிட்டாலும், "எனக்குத் தெரியாது. ஸோ வாட்?" என்று கேட்டாள் எரிச்சலாக.
"உங்கம்மா என்ன மொழி பேசறாங்க?"
"டமில்"
"அப்பா?"
"அப்பாவுக்கு நிறைய லாங்குவேஜ் தெரியும்" என்றாள் பெருமையாக.
"சரி, வீட்ல என்ன மொழி பேசுவாங்க?"
"டமில்"
"உங்க தாத்தா, பாட்டி?"
"டமில். ஸோ வாட்?" தன்னை ரோகிணி இப்படிக் கேள்வி கேட்பது அக்க்ஷயாவுக்குப் பிடிக்கவில்லை.
"உன்னைச் சுத்தி எல்லாரும் பேசற மொழியே உனக்குச் சரியாத் தெரியலை. ஷேம் ஷேம்" என்றாள் ரோகிணி. மற்றவர்களும் அவளுடன் சேர்ந்து கொண்டார்கள்.
அக்ஷயா விட்டுக் கொடுக்காமல், "ஆனா எனக்கு இங்கிலீஷ் நல்லாத் தெரியுமே. உங்களுக்கெல்லாம் ஒண்ணுமே தெரியலையே" என்றாள்.
"உனக்குத் தாய்மொழியே தெரியலை. எங்களுக்கு வேற மொழி தெரியாட்டா ஒண்ணும் தப்பில்லை, தெரியுமா?" என்றாள் செல்லம்.
"ஆமா, தாய்மொழி கண் மாதிரியாம். வேற மொழியெல்லாம் கண்ணாடி மாதிரியாம். கோதை அக்கா சொன்னாங்க" என்று மைனா தன் பங்குக்குச் சொல்லவும் அக்ஷயா பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.
"கண்ணே இல்லாமல் கண்ணாடி போட்டு என்ன பிரயோசனம்?" என்று கற்பகம் எடுத்துக் கொடுக்க அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள்.
அக்ஷயா கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டாள். ஏன் அவளுக்குச் சரியாகத் தமிழ் கற்றுக் கொடுக்கவில்லை என்று அம்மாவிடம் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
"சரி, அதை விடு. இது என்ன தெரியுமா?" என்று ஒரு செடியைக் காட்டினாள் ரோகிணி. அதன் உச்சியில் முத்து முத்தாய்க் காய்த்திருந்தது.
அக்ஷயா தெரியாதெனப் பரிதாபமாய் தலையசைத்தாள். அந்த சிறுமிகளுக்குத் தனக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் தெரிந்திருக்கிறதென்று அவளுக்கு இப்போது புரிந்திருந்தது.
"இது கூடத் தெரியாமலா பருப்பு சாதம் சாப்பிடறே? இதுதான் நெல் செடி. இதுலர்ந்துதான் அரிசி, அதான் ரைஸ் வருது. பிடிச்சுப் பாரு" என்றாள்.
அக்ஷயா குனிந்து நெற்செடியையும் நெல் மணிகளையும் ஆராய்ந்தாள்.
"இதுக்குள்ளருந்து எப்படி ரைஸை எடுப்பாங்க?" என்று கேட்டாள் அக்ஷயா. ஆனால் அவளுக்குப் பதில் சொல்ல யாருமில்லை. சுற்று முற்றும் தேடினாள் அக்ஷயா. தோழிகள் யாரையும் காணவில்லை.
“ரோகிணி… செல்லம்… கற்பகம்… “ என்று ஒவ்வொரு பெயராய்க் கூப்பிட்டுப் பார்த்தாள். பதிலில்லை. கண்ணுக்குத் தெரிந்த வரை வேறு மனிதர்களே இல்லை. அச்சத்துடன் நடுங்க ஆரம்பித்தாள் அக்ஷயா.
(அடுத்த வாரம் பார்ப்போமா?)“