ப்ரபு :
அந்த ஜோஸ்யர் சொல்லுவது அப்படியே பலிக்கும். முன்னே ரெண்டுமுறை எனக்குப் பலித்திருக்கிறது.
இன்ட்டர்வ்யூவுக்கு முதல்நாள் ஜோஸ்யரைப் பார்க்கப் போனது ரொம்ப சரி. ஆனால் இந்தப் பயல் ராஜாவையும் கூட்டிக் கொண்டு போனதுதான் ரொம்பத் தப்பு.
ஒங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குக் கட்டாயம் இந்த வேல கெடக்யும் என்று சர்வ நிச்சயமாய்ச் சொன்னார். நான் தனியாய்ப் போயிருந்தால் எனக்கே எனக்கு இந்த வேலை கிடைக்குமென்று சொல்லியிருப்பார். மனசுக்கு ரொம்பத் தெம்பா யிருந்திருக்கும். பரவாயில்லை. ராஜாவோடு ஒரு ஃப்ரண்ட்லி ஃபைட் போட்டுப் பார்த்து விடலாமென்று இவனையும் கூட்டிக் கொண்டு இன்ட்டர்வ்யூக்குக் கிளம்பினேன்.
அபசகுனமாய் நாய் குறுக்கே வந்தது. அபசகுனம் அவனுக்குத்தான், எனக்கில்லை.
ப்ரபு, நேத்து ராத்திரி வாங்கின பரோட்டா மிச்சமிருக்கே இந்த நாய்க்குப் போட்டுட்டு வந்துர்றேன் கொஞ்சம் வெய்ட் பண்றியாடா என்றான்.
தெரு நாய்க்குப் பரோட்டா போடுவதா முக்கியம்? பங்ச்சுவாலிட்டி முக்கியமில்லையா?
பதினொண்ணுக்கு இன்ட்டர்வ்யூ என்றால் பத்து அம்பதுக்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டாமா?
உன் செல்ல நாய்க்கு நாஷ்டா குடுத்துட்டு நீ ஒன்னோட பைக்க எடுத்க்கிட்டு சாவகாசமா வந்து சேரு, நா கௌம்பறேன் என்று அவனைக் கழட்டி விட்டுவிட்டு பைக்கில் பறந்து விட்டேன்.
எஸ்பிஸிஏவில் ஊழியம் செய்யப் போக வேண்டியவ னெல்லாம் எதற்கு எம்.ஸி.ஏ. படித்தான்?
இவன் ரூமைத் திறந்து பரோட்டாவை எடுத்து நாய்க்கு ஊட்டி விட்டுவிட்டு பிறகு இவனுடைய ஓட்டை பைக்கை ஸ்டார்ட் பண்ணி, வழியில் பெட்ரோல் போட்டுக் கொண்டு அண்ணாநகரிலிருந்து அடையார் வந்து சேர்வதற்குள் இன்ட்டர்வ்யூ முடிந்துவிடும். அப்புறம், நானே ராஜா, நானே மந்திரி. ஜோஸ்யர் சொன்னது பலிக்கப் போகிறது!
ராஜா :
மீந்து போன பரோட்டாக்களைக் காலி செய்துவிட்டு அந்த நாய், வாலை ஆட்டிக் கொண்டு ஓடினதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருந்தது. நாளைக்கு ஒரு டாக் பெல்ட் வாங்கி இதன் கழுத்தில் கட்டிவிட்டு இதற்கொரு அங்கீகாரம் வழங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
ட்ராஃபிக் நெரிசலின் இண்டு இடுக்குகளுக்குள்ளே புகுந்து புறப்பட்டு அடையாரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது நெல்சன் மாணிக்கம் சாலையின் நெருக்கடியில் அந்தப் பரிதாபக் காட்சி கண்ணில் பட்டது.
மக்கர் பண்ணி ஆஃப் ஆகிப்போன கார் ஒன்றை டிப்டாப்பாய் உடையணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர் தன்னந்தனியாய்த் தள்ளப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார், ஸ்டீரியங்கை ஒரு கையாலும், முன் கதவை ஒரு கையாலும் பற்றியபடி.
ஓர் அனிச்சைச் செயலாய், பைக்கை ப்ளாட்ஃபாம் மேலே ஏற்றி நிறுத்திவிட்டு அந்தக் காரை நோக்கி ஓடினேன். மே ஐ ஹெல்ப் யூ சார் என்று கேட்டு, அவருடைய ஒப்புதலுக்குக் காத்திராமல் பின்னாலிருந்து காரைத் தள்ளினேன்.
ஒரு கால் கிலோ மீட்டர் தள்ளி விட்ட பின்னால்தான் காருக்கு ஒதுக்குப்புறமாய் ஓர் ஓரம் கிட்டியது.
ரொம்பத் தாங்ஸ் என்று என்னை நோக்கித் திரும்பினார். இன்னிக்கிப் பாத்து டிரைவர் வரல. நீங்க் ஹெல்ப் பண்ணாட்டித் திக்குமுக்காடிப் போயிருப்பேன் என்றார். தளர்த்தி விட்டிருந்த ட்டையின் பிண்ணனியில் அவருடைய சட்டை தொப்பலாய் நனைந்திருந்தது. அவருடைய சட்டை மட்டுமல்ல என்னுடையதும்தான். வியர்வை வாசம். இக்கோலத்தில் இன்ட்டர்வ்யூவுக்கு எங்கே போவது!
இத்தன வெஹிக்கிள்ஸ் பாஸ் பண்ணிப் போகுது, யாருக்கும் எனக்கு ஒரு கை குடுக்கணும்னு தோணல, ஒங்களுக்குத் தோணியிருக்கு பாருங்க தம்பி, நீங்க ஒரு வித்யாசமான, விசேஷமான ஆள். ரொம்ப நன்றி தம்பி, என்று நெகிழ்ந்து போனார். மெக்கானிக்குக்கு ஃபோன் பண்ணியிருக்கேன் தம்பி, நீங்க கௌம்புங்க என்றார்.
தொடர்ந்து கேட்டார், நான் எங்கே வேலை செய்கிறேன் என்று. சொன்னேன், எட்டாவது தடவையாய் இன்ட்டர்வ்யூவுக்குப் போகவிருந்ததை. கம்ப்பெனியின் பேரைக் கேட்டார். சொன்னேன். இந்த வேலை எனக்குக் கட்டாயம் கிடைக்குமென்று ஆருடம் சொன்னார். இந்நேரம் இன்ட்டர்வ்யூ அடையார்ல நடந்துட்டிருக்கும் சார். நா இங்க நிக்கிறேனே! என்று சிரித்தேன்.
இன்ட்டர்வ்யூக்குப் போகவே இல்லை. அப்புறம் எங்கிந்து வேலை கிடைக்க! இதெல்லாம் நம்ம கையில இல்ல தம்பி, மேலேயிருந்து ஒருத்தன்தான் எல்லாருக்கும் வேல போட்டுத் தர்றான். நா சொல்றேன் பாருங்க, இந்த வேல ஒங்களுக்குத்தான் என்று ஆணித்தரமாய்ச் சொன்னார்.
உதவி செய்தவனுக்கு நல்லதாய் நாலு வார்த்தைச் சொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார். எனிவே, அவருடைய நல்ல மனசுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கிற பெருமிதத்தோடு ரூமைப் பார்க்க வண்டியைத் திருப்பினேன். இந்நேரம் ப்ரபு இன்ட்டர்வ்யூவில் விளாசிக் கொண்டிருப்பான். இந்த வேலை அவனுக்கு நிச்சயம் கிடைக்கும்.
அவனுக்கு கிடைத்தாலென்ன எனக்குக் கிடைத்தாலென்ன.
ப்ரபு :
ரூமுக்குத் திரும்பியபோது ராஜா ரூமுக்குள்ளேயே இருப்பது தெரிந்தது. இந்தப் பயல் அடையாறுக்குக் கிளம்பவே இல்லை போல. அந்த ஓட்டை பைக் ஸ்டார்ட் ஆகியே இருக்காது!
என்னைப் பார்த்ததும் கங்ராட்ஸ் ப்ரபு என்று கை கொடுத்தான். எதுக்கு என்று கேட்டதற்கு, உன் ஜோஸ்யர் சொன்ன மாதிரி உனக்கே உனக்கு இந்த வேலை கிடைத்திருக்கும். அதுக்குத்தான் என்றான். அவனிடம் சொன்னேன். இன்ட்டர்வ்யூவுக்குத் தலைமை தாங்க வேண்டிய எம்.டி. கார் வழியில் ஸ்ட்ரக் ஆகிவிட்டது என்று ஆஃபீஸ்க்கு வந்து சேரவேயில்லை, இன்ட்டர்வ்யூ கான்ஸல் ஆகிவிட்டது என்று.
சரி, அதற்கு இந்தப் பயல் ஏன் இப்படி வாயைப் பிளக்கிறான்!
(ஆனந்தவிகடன், 29.08.2007)
“