தெற்கு வானத்தில் நீளமான ஒளிக்கற்றை – கிடுகிடுவென பூமிக்கு இறங்கி வருவது போலொரு காட்சி – அடிக்கடி வரும் இதன் நிஜம் குறித்து அதிர்வுகள் அல்லது பிரமையோ. அனுமானிக்க முடியவில்லை. ஏதோ அவசரமான செய்தியைச் சொல்லிவிடுவதைப் போன்ற சீரான வேகம். இதன் பொருளென்ன. வெளிச்சத்தில் ஒளிந்து வரும் புதுமையென்ன. விடியற்காலை கொல்லைக் கிணற்றடியில் பூத்துக் குலுங்கும் செம்பருத்திப் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போதும் அது வந்தது. இன்ன பொழுதென்றில்லாமல் தோன்றும் போதெல்லாம் வந்துபோகும் உரிமையை எடுத்துக் கொண்டாற்போல் என்ன இது. இதன் மொழியென்ன பொருளென்ன. வதையா சுகமா புரியலையே!
வானமும் நட்சத்திரங்களும் மர்மங்களற்றவை. சற்று நெருங்கிச் சினேகித்தால் பொலபொலவென அனைத்தையும் கொட்டித் தீர்க்கும். ஏன் விளங்கலே. நேசத்தைத் தள்ளி வைத்ததால் நேர்ந்ததோ. அதை லாவகமாகப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு என்ன சேதி எனக் கொஞ்சலாய்க் கேட்க மனசற்றிருந்தது பிழையோ விசாலாட்சி.
விசாலாட்சி மாடியிலிருந்து பார்த்தாள். வடக்குக் கரை தெரிந்தது. காவிரியின் சோனித்தனமும் சோம்பேறித்தனமும் தெரிந்தது. அதன் கம்பீரத்தையும் நுரைப்பிரவாகத்தையும் களவாடியதார். யாரானாலும் மன்னித்தல் இல்லை. தியாகராஜரின் மௌனத் தியானம் புரிந்தது. பிலகரியையும் கரகரப்பிரியாவையும் விழுங்கி தன்னுள் புதைத்துக் கொண்டு விட்டாரோ. பாவம். பகுள பஞ்சமியன்று வருடாவருடம் கூத்துதான். ஏகப்பட்ட ஆடம்பரங்களையும் அராஜகங் களையும் பொய்மைச் சிரிப்புகளையும் பணக்காரப் பவிசுகளையும் புரிந்து கொள்ளாமலா இருப்பார். நிஜமாகவே கல்லாய்ப் போய்விட்டாரோ.
காற்றுத்துகள்களுக்குள் புகுந்து ரட்சித்து வந்த இந்தோளத்தையும் ஆரபியையும் மீட்டெடுக்க இப்போது யாருளர்? என்னைப் பேணிப் பராமரிப்பாயாக – என்னை உன் ஆளுகைக்குள் கொண்டு வருவாயாக. அதுவே எங்களுக்குப் பேருவகை. கதன குதூகலமும் ரவிச்சந்திரிகாவும் இரைஞ்சின. பந்துவராளியும் கௌரி மனோகரியும் கெஞ்சின. ராக தேவதைகள் விசாலாட்சியிடம் கெஞ்சின. இருட்டில் உழன்று உயிர்க்கும் என் யதார்த்தம் புரியாமல் இதுவோர் விந்தைதான்.
"ரா…ரா…ரணதீர…ரகுவீர… ராரா… ராஜகுமாரா…. ரா…"
"ஏன் விசாலாட்சி ஆர் பாடறா… பெருமாள் கோயில்லேயா. மேல் சஞ்சாரத்திலே இழைய வேண்டாமோ… இப்படி கீழ் ஸ்தாயியிலேயே கடிச்சு துப்பிண்டிருக்கான் வித்வான். உசைனீ தானேடி இது" என்று பாட்டி சந்தேகம் கேட்பாள். "ராகத்தின் ஒரு நூலாவது ஏதாவது ஓரிடத்தில் கம்பீரமாத் தெரியனும். உசைனீ கேட்கறவாளை தன் கூடவே கை பிடிச்சு அழைச்சுண்டு போகும். தியாகராஜ ஸ்வாமிக்கு, ராமச்சந்திர மூர்த்தி திரும்பக் கிடைச்ச சந்தோஷத்திலே குபீர்னு கிளம்பின சாகித்யம். ஸ்வாமிகள் ஆனந்தக் கூத்தாடற காட்சி ஸ்வரங்கள்ளேயே தெரியனும். நான் பாடறேன். நீயும் பாடு…" தெருவே கூடும். சங்கீதம் கேட்க தனிச்செவிகளா என்ன? கேட்கிறது மனசு என்கிறபோது செவிகளுக்கென்ன வேலை…?
சாத்தியமற்ற விஷயங்களின் நினைப்புகூட உவப்பான தில்லை. உதடுகளில் அவ்வப்போது புன்னகை விரியும். எதனால் எதன் பொருட்டு அல்லது எதை நினைத்து, அல்லது புன்னகை தவிர இங்கே வேறு பொக்கிஷம் இல்லை என்றாற்போல் – சாலாட்சி எங்கே போயிட்டே. மாமனார் மேலவிடயல் கல்யாணத்திற்குப் போகனும்னு பறக்கறார். இப்பவே நாழியாச்சாம்…"
இருபது பேர் சின்னதும் பெரிதுமாய் வீடு நிறைய மனிதர்கள். சின்னத் திருவிழாக் கூட்டம். ஆறு கட்டு. எல்லா இடங்களிலும் நடமாட்டம். அதிகாரக் குரல்கள். ஆரவாரம் ஆணைகள். அத்தனையையும் ஏற்றுச் செய்து முடிக்க விசாலாட்சி. புருஷன் இவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதாக ஞாபகமில்லை. "அடியே… அல்லது அடியேய்ய்…"
தியாகமா அடிமைத்தனமா. பிறந்த வீட்டின் சுமைகள் குறித்த கணக்கா? விடையறிய முயன்றதில்லை. இவளன்றி இந்த வீட்டில் ஏதும் அசைய முடியுமோ. இவ்வளவு பெரிய குடும்பத்தைக் கட்டி மேய்க்க யாரால் முடியும் உன் தவிர! முள் கிரீடம் சூட்டியாயிற்று. "என்ன சாலாட்சி கால்லே சக்கரம் கட்டிண்டிருக்கியோ! பாதங்களுக்கு சாமர்த்தியமாய் முள் செருப்பு. கைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத பொன் விலங்குகள். புண்ணாகாதோ. காயம் படாதோ. பழகினால் எல்லாமே மரத்துப் போகும் விதியறியாமலா? கூடத்தில் விஸ்ராந்தியாய் உட்கார்ந்து ஒரு ‘பாவ யாமி கோபால பாலம் மன சேவிதம்…’ என்று யமுனா கல்யாணியில் லயிக்க இடமில்லை. சோறும் கூரையும் புணர்தலும் போதுமோ?
ஒரு நவராத்ரி கொலு, கல்யாண நலுங்கு, வெள்ளிக்கிழமை பூஜை என எங்கேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ… வந்தவுடனே புரிந்து கொண்டாள். இந்த மாதிரியான கனவுகளுக்குக்கூட இங்கே இடமில்லை. சமையலறையில் தன்னை மீறி ஒரு நாள் வெளிப்பட்ட ராக மத்தாப்புகள் சுட்டிருக்க வேண்டும். "குடும்ப ஸ்த்ரீகளுக்கு இதெல்லாம் சரிவருமோ! மாற்றி மாற்றி உபதேசம். நரகத்திற்கே உரிய வார்த்தைகள். என்ன உஷ்ணம். எப்படி முடியும் விலகி நிற்க? அதிசயம்தான்.
"சாலாட்சி ஒரு சிம்மேந்திர மத்திமம் பாடேன். யாராவது எங்காவது மதிய சாப்பிட்டிற்குப் பிறகு நல்ல உச்சி வெயில் நேரத்தில் பாடுவார்களா பாட்டு கேட்பார்களா. பாடும் சூழலா அது. அங்கு எல்லாமே வாய்த்தது. அப்பா பாடுவார். அம்மாவிற்கும் பாட்டு பிரமாதமாய் வரும். தம்பிக்கு நல்ல குரல். சியாமளா கச்சேரியில் பாடுவாள். எல்லாவற்றுக்கும் மனசு வேணும். மனசு வாய்த்தால் யாவும் நேர்த்தியாய்க் கூடுவதில் ஆச்சரியமென்ன!
"சட்ஜமத்தில் ஏன்டீ அரை மாத்திரை நீட்டறே. கல்யாணி, ரீதிகௌளையாயிடும். பாட்டிவிட மாட்டாள். ஸ்ருதி சுத்தமில்லேன்னா அதுக்குப் பேர் சங்கீதமில்லே. ம்…ம்…ம்’னு நிரவிப் பாடனும். கல்யாணி குழந்தை மாதிரி – கொஞ்சம் தாஜா செய்தா இழுத்த இழுப்புக்கெல்லாம் தளர் நடைபோட்டு வரும். எங்கே இப்போ பாடு…’ வாசுதேவ யெனி…’ நேரம் காலம் அதனதன் வேகத்தைத் துறந்து வாசற்படியிலே நிற்கிறாற் போலிருக்கும். இந்த சங்கீத யாகம் எப்போ முடியும்னு தெரியாது…
ஊரே திரண்டு பெண் பார்க்க வந்தாற்போலிருந்தது. "பொண் புடிச்சிருக்கு. குடும்பப்பாங்கா இருக்கா. காரியத்தில் படு சுட்டின்னு தெரியறது. இதுபோதும் எங்களுக்கு. அதக்கொண்டா இதக்கொண்டான்னு பிச்சுப் புடுங்கலே. கடல் மாதிரி நிலம் நீச்சுன்னு ஏகப்பட்டது கிடக்கு. ஏழுதலமொறக்கு உட்காந்து சாப்பிடலாம். இத ஆள்றதுக்கு சமத்து இருந்தா போறும்… பஜ்ஜி பிரமாதம். இன்னும் ரெண்டு போடுங்கோ… அம்மாடி உன் மாமனாருக்கு நாக்கு அசாத்ய நீட்டம். அவருக்கும் ரெண்டு போடு… கூடமே கலகல… ஒரு கீர்த்தனை பாடேன்னு யாராவது கேட்கமாட்டார்களா. மனசு துடித்தது. ‘பொண் நன்னா பாடுவா ஏழு வருஷ பாடாந்தரம்" என்று அப்பா இடையில் புகுந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. "குடும்ப ஸ்த்ரீகளுக்கு சங்கீதம், சதிர்க்கச்சேரி இதெல்லாம் சரிவராது." சட்டென முடித்தாள் ஒரு பெண்மணி. அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. வறுமையும் இல்லாமையும் துன்பமும் – மேன்மையான, எல்லா விஷயங்களையும் சாப்பிட்டுவிடுமோ. விழுங்கியது. விழுங்கி ஏப்பம் விட்டது. விசாலாட்சி அதிஷ்டக்காரி என்று எதிர்வீட்டு ராதாபாய் திருஷ்டி கழித்துப் போனாள். பலருக்கும் பொறாமை.
முதலில் எல்லாமே வித்யாசமாக இருந்தது. விடியும்போது எப்போதுமே ரம்மியம்தான். கிணற்று ஜகடை ஒலியில் மலையமாருதம் கேட்டது. ராமா… நீ யெட…" என்று தோதாய் இழைக்க வேண்டும் போலிருந்தது.
"சாலு. பால் கறந்தாச்சா பார். தூங்கி எழுந்ததுமே பெரியவருக்கு காபி மொகத்திலே முழிச்சாகனும். லேட்டானா அமர்க்களப்படுத்திடுவார்.
– வாசல்லே யாருன்னு பாரு. குருக்கள் கோயில் பிரசாதம் கொண்டு வந்திருப்பான். ஆடிக்கிருத்திகை மொதல் மண்டகப்படி நம்மளது.
– இன்னிக்கு உன் பிறந்த நாள். நேத்திக்கே ராகவன் சொன்னான். ஏழு பவுன்லே அட்டிகை வாங்கிண்டு வந்திருக்கேன். அம்பாள் பாதத்திலே வச்சுட்டு எடுத்துப் போட்டுக்கோ. பகவான் புண்ணியத்திலே எதுக்கும் கொறச்சலில்லே –
ஜன்னல் வழியாக திடீரென்று வந்து மெல்லத் தடவிச் சென்ற வாடைக்காற்று இதம் தருவதாயிருந்தது. பனிக்குளிரும் சங்கீத அனுபவமும் ஒன்றெனத் தோன்றுவது சரிதான். அது தருவது முக்தி, தவம் உபாசனை இன்னும் எல்லாமே. இன்று எதற்குள் புகுந்து கொண்டேன். எந்த உன்னதத்தையும் அடைய முடியாத காரிருளில் – சத்தியத்தை ஏந்தியவர்க்கு காரிருள் இல்லை. ஒளியை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டவள் நீ. சங்கீத மேன்மையை சதா ஜபித்துக் கொண்டிருக்கும் உனக்குத் துன்பம் ஏது என்பார் தாத்தா.
"கொல்லையில் பசு மாடு கத்தறது என்னன்னு பார். சாலாட்சி யாராவது இதையெல்லாம் லட்சியம் பண்றார்களா பார். பொறுப்பில்லை. நீதான் பொறுப்பானவ. போய்ப் பாத்துட்டு வா… தாகமா இருக்கோ என்னவோ. ஆனக்குப்பத்திலிருந்து பெரிய மாமா குடும்ப சகிதமாய் வராறாம். அந்த மனுஷனுக்கு நாக்கு சதா ருசியிலேயே கிடக்கணும். விதவிதமா பண்ணிப் போடனும். மோர்க் குழம்பு, ரவா இட்லி, புதினா கொத்சு – ஞாபகம் வச்சுக்கோ. துளி ருசி கொறஞ்சாலும் தாம்தூம்னு குதிப்பார். அந்த காலத்திலே நம்ம குடும்பத்துக்கு வேணது செஞ்சிருக்கார்.
போராட்டம் ஏன்? இயல்பாய் இரு. இயல்பாய் இருத்தலின் அழகைப் புரிந்து கொள். இதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்ந்து போகும்போது சாகும் இயல்புள்ளவர்கள் நித்யர்கள் ஆகிறார்கள். நீ நித்யமானவள். உன் தவம் உள்ளுக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள். பிலகரியையும், சகானாவையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறி. இறுக்கம் தளர். தரையில் நடந்து பழகு. வானம் யாருக்கு வசப்பட்டிருக்கு? என் ஜீவனை விட்டொழிக்கச் சொல்லுவது யார். என்ன அசட்டு உபதேசம். ரசனை துறந்த அடையாளம்.
அம்மா என் அம்மா… இப்ப என்ன பண்ணிண்டு இருப்பே. "நடமாடித் திரிந்துனது இடதுகால் உதவாமல் முடமானதேவென்று சொல்லுவீரய்யா…" காம்போதியில் ஏறி வானத்தில் சஞ்சாரம் பண்ணிட்டிருப்பே. எனக்குத் தெரியும்.
"சாலு என்ன யோசனை. எப்போதும் வாட்டமாவே தெரியறது முகம். ஊர் நினைப்போ. இங்கே ஏதாவது கொறயோ. நீயாவது விபரம் தெரிஞ்ச வயசிலே வந்தே. நான் வாக்கப்பட்டு வரும்போது எனக்குப் பதிமூணு. அம்மி, கல்லுரல், அரிக்கேன் லைட்டு, கரியடுப்பு, புகைச்சல் ஊதி ஊதி முகமே வீங்கிப் போயிடும். இப்ப பொத்தானைத் தட்டினா நிமிஷத்திலே சமையல். கிரைண்டர், ஏ.சி, வாஷிங்மிஷன், டிவி, சிரமம் போச்சு. மாமனார் மாமியார் புருஷன் மச்சினர்கள் முன்னால் உட்கார முடியுமோ. மாமனார் நூறு தடவ வாசலுக்கும் கொல்லைக்குமா அலைவார். எழுந்து நின்னு எழுந்து நின்னு இடுப்பும் காலும் ஒடிஞ்சே போயிடும். இப்ப உனக்கெல்லாம் எவ்வளவு ஸ்வதந்திரம்… .பொம்மனாட்டிகளுக்கே எல்லா ஸ்வதந்திரமும் புரிஞ்சுதோ.
"என்னன்னு பாரேன் மாமனார் லொக்கு லொக்குனு இருமறார். ஒரு டம்ளர் காபி கொண்டு குடு. அப்படியே எனக்கொரு வாய்…"
"உன் கை மணம் அபாரம். இன்னொரு கரண்டி ரசம் விடேன். மைசூர் ரசமா." சமுத்திரத்தையே உறிஞ்சிக் குடிக்கற மாதிரி ஒரு கோரமான இரைச்சல்… "அனுபவிச்சுச் சாப்பிடனும்."
"சாலாட்சி மாத்திரை எடுத்துண்டு வா… நீதான் கவனமா குடுப்பே. பவானி ஒரு தடவ மாத்திக் கொடுத்துட்டா…"
– அமாவாசை என்னிக்குன்னு சித்த பஞ்சாங்கத்தப் பாத்துச் சொல்லு… இந்த வீட்லே ஒரு நாள் நட்சத்திரம் கெடையாது. எல்லாம் நாஸ்தீகாள் மாதிரிதான். அதான் எவ்வளவு வந்தாலும் சட்னு கொல்லை வழியாப் போயிடறது…
"என்ன தவம் செய்தனை யசோதா… எங்கும் நிறை பரபிர்மம் அம்மா என்றழைக்க – என்ன தவம்…" தூரத்தில் யார் வீட்டு ரேடியோவிலிருந்துன்னு தெரியலே சுநாதம் கேட்கிறது. எம்.எஸ்.மாதிரி இருக்கே. இல்லே பட்டம்மா வா? நாதத்தை உபாசிப்பவள். நாதம் என் ஜீவன். நாதமே நான். அதின்றேல் நானேது… இப்போ என் உயிர்ப்பு ஆச்சரியம் தருவது. யாருமற்ற பாலைவெளியில் எந்தப்பக்கம் ஓடுவது. ஓடியென்ன ஆகப் போகிறது. பின் என் தப்பித்தல் எப்போது – இந்த நொடியிலா அடுத்த நொடியிலா… எந்த க்ஷணத்தில் – அறிந்தேனில்லை.
சாலுவுக்கு பொறந்த வீட்டு ஞாபகம். அடிக்கடி வந்து வதைக்கறது. அம்மா ஞாபகமா! எதானாலும் நமக்கெல்லாம் இது கூடாது என்ற மாமியாருக்கு என்ன பதில் சொல்ல? என்னுலகம் வேறானது எனக் கூறவும் கூடுமோ. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது வானத்து ஒளிக்கற்றை மெல்ல மெல்ல கீழிறங்கிக் கொண்டிருப்பது போலத் தெரிந்தது. எவ்வளவு தூரம். எப்போது முடியும் பயணம்?
"இவளை ஒரு நல்ல டாக்டரிடம் அழைச்சுண்டு போகணும். கலகலப்பாவே இல்லை. ஏதாவது உபாதையா. சொல்ல மாட்டேங்கறா. பயந்த கோளாறோ… காத்தாயி கிட்டே வேண்டிண்டிருக்கேன். ஒரு நட போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்திடனும்" யாரோ கூடத்தில் பேசிக் கொண்டிருப்பது லேசாய்க் கேட்டது.
மத்யானம் எல்லோரும் குட்டித் தூக்கம் போடும்போது மனசு குறுகுறுக்கும். தூக்கத்தை பாதியில் விட்டால் எல்லோருமே மூர்க்கர்கள். உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் நாதநாமக் கிரியையை ஒரே தட்டு… அடக்க முடியாதுதான். அடங்கிப் போய்விட்டதாக பிரமை. மனசுக்குள் பாடியென்ன. நாதவீச்சு நாலா திசைகளுக்கும் சென்று வியாபித்து ரட்சிக்க வேண்டாமோ. உயிர் கொடுக்க வேண்டாமோ. இது ஒரு பேரவஸ்தை.
"ஒரு டம்ளர் மோர் கொடேன். நெஞ்சு கபகபங்கறது. காலம்பற தோசைப் பொடியில் காரம் தூக்கல்."
காலம் எல்லாற்றையும் மாற்றிவிடும். சமன்பாட்டிற்குக் கொண்டு வந்துவிடும். காலம் அருமருந்து. என்னளவில் அது எப்போது சித்திக்கும்? கேள்விகள் சூழ தினம் தினம் திக்குமுக்காடல். அதிகாலை இருட்டு பிரிவதற்குள் வாசல் பெருக்கி கோலம் போட்டு நிமிரும்போது கிழக்கே அசட்டு வெளிச்சம். பூபாளம் முடித்து மலயமாருதத்தின் வேளை. நின்று யோசிக்கும் முன் நூறு குரல்கள்.
"தலைவலி… மண்டையப் பிளக்கறது. சீக்கிரம் காபி போடு…"
ஊரில் பாட்டி போய்ச் சேர்ந்துவிட்ட சேதி கேட்டபோது பாட்டியைவிட அவளின் குரல் மிடுக்கு போய்விட்டதே என்ற தாளாத வருத்தம். புதுசு புதுசா கண்டுபிடித்து சேதி தருவாள் எங்கே பெற்ற வரம்?
"இன்னும் கம்பீரம் வேணும். தாளம் தப்பறது. சக்ரவாகத்த மத்திம காலத்திலே பாடனும். சரணத்தமட்டும் விளம்ப காலத்திலே இசைக்கனும் சரி… க…ம…ப..த… நிச்…ச் நி த ப ம க ரி ச… பதினாறாவது மேளம். துளிதப்பினா காலை வாரிவிட்டுடும். சா…ச் நீ தா… திச்ர ஏகத்திலே லயிச்சு மேலே மேலே சஞ்சாரம் பண்ணனும். சங்கீதத்திலே பூர்ணம்னு கெடையாது. சமுத்திரம். அள்ள அள்ளக் கொறயாது. புதுசு புதுசாக் கிடைக்கும். நீ… பிரமாதமாயிட்டே… சாப்பிடறயோ இல்லையோ… சாதகம் முக்கியம் தினம் தினம். சங்கீதத்திலே முற்றும்னு கிடையாது. முடிஞ்சுடுத்துன்னும் இல்லே. வாத்தியார்னு யாரும் இல்லே. எல்லாரும் கத்துண்டிருக்கறவா தான்…"
"சாலாட்சி இவ்வளவு நாழி என்ன பண்றே…" சட்டென்று இந்த உலகத்திற்கு இறங்கி வந்த போது நெஞ்செரிச்சல். உடம்பே பற்றி எரிந்தவிடும்போல் தாள முடியாத சூடு…. காப்பாத்து என் தேவீ என்னைக் காப்பாத்து. முடியலே…. என்னாலே முடியலே…."
"இவ்வளவு நாழி என்ன பண்றாள். வாசல்லே போய்ப் பாரேன்…"
வானப் பெருவெளியிலிருந்த ஒளிக்கீற்று வழக்கத்திற்கும் மாறான வேகத்தோடு பூமியை நோக்கி பயணிப்பது போலிருந்தது. அண்டவெளியையே இருகூறுகளாக்கி விடுவதை போன்ற உத்தேசத்தோடு என்ன புதுமையிது. என்ன நிகழ்கிறது. ஒளிக்கற்றையின் மேலேறிக் கொண்டு சவாரி செய்வதார். யாரது யார் சிரிப்பது எதன் பொருட்டு இந்தச் சிரிப்பு. இதன் பொருளை அறிந்தவர்யாருளர்? குளிரில் நடுங்கியபடியே ஒரு பட்சி பொந்திற்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது. அவசரமாக அலகை ஒரு தடவை தீட்டிவிட்டு விர்ர்ரென தெற்கு நோக்கிப் பறந்தது.
"சாலாட்சி…விசாலாட்சி… சாலு… என்ன பண்றே… கொல்லையிலே என்ன அதிசயம் கொட்டிக்கிடக்கு…"
எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் பதிலாக வானிலிருந்து ஒளிக்கற்றையின் ஊடே கலந்து –
– ‘நன்னு ப்ரோவ…நீ…தாமசமா…’ இனிய குரல் எங்கும் ரம்மியமாய் வியாபித்தது.
அருமையான கதை. சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் உள்ள எனக்கு இந்தக் கதையின் நாயகி சாலுவை
நினைத்து மனம் அழுதது. எத்தனை கொடிய இரக்கமற்ற சங்கீத சூன்ய ஜன்மங்கள்!!? பெண் பார்க்கும்
போதே பெண்ணுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டுவிட்டு அந்த விருப்புக்களுக்கு வாய்ப்பு
உள்ள இடங்களிலேதான் பெண்ணைப் பெற்றோர் சம்பந்தம் செய்து கொள்ளவேண்டும். ஒரு பெண்ணின்
வாழ்க்கையைப் பாழாக்க யாருக்கும் உரிமை இல்லை. பொருள் வசதி ஒன்றை மட்டுமே பார்க்கும் சுயநலம்
எப்படிப்பட்ட இழப்பை உண்டாக்கி வாழ்க்கையையே சூன்யமாக்கி விடுகிறது.
அலர்மேலு ரிஷி
சங்கீதம் தெரிந்தவர்கலுக்கும், ரசிப்பவர்கலுக்கும், சாலாட்சிஐ நினைத்து உல்லம் கன்டிப்பாக உருகும். விஷ்வனாதன் அவர்கலுக்கு நன்ரியும் பாராட்டுகலும் சமர்பனம்.