ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்
ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் 2008-ம் ஆண்டு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்துள்ளது. அம்னியாடிக் ப்ளூயிட் டிரைவ்ட் ஸ்டெம் செல்களை சுருக்கமாக ஏ.எஃப்.எஸ் (AFS) என்று குறிப்பிடுகின்றனர். இந்த அரியவகை ஸ்டெம் செல் மனித உடலில் உள்ள 220 விசேஷமான செல் மாதிரிகளில் பலவற்றை உருவாக்க உதவும் ஆற்றல் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த ஏ.எஃப்.எஸ் செல்கள், கரு செல்களுக்கும் வயதுக்கு வந்தோரின் ஸ்டெம் செல்களுக்கும் இடைப்படியான ஆற்றல் வாய்ந்த உபயோகரமான செல்கள் என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. மரபணுக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க உதவும் நடைமுறைக்கு இது மிக, மிக முக்கியமானதாகும்.
குழந்தை பிறந்த பின்னர் தாய்மார்கள் இழக்கும் திசுக்களும் ஏ.எஃப்.எஸ் செல்களுக்கு இன்னொரு மூலமாகும். அமெரிக்காவில் வருடத்திற்கு 40 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவிலோ இன்னும் அதிகம். இந்த நிலையில் ஏ.எஃப்.எஸ் செல்கள் ஏராளமான வியாதிகளைத் தீர்க்க உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமான செய்தியாகும். உலகம் முழுவதிலும் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வருங்காலத்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில்தான் அதிகக் கவனம் செலுத்தப் போகின்றனர்.
வைட்டமின் டி மூலம் கிடைக்கும் ஆதாயங்கள்!
"சூரிய ஒளி வைட்டமின்" என்று செல்லமாக அழைக்கப்படும் வைட்டமின் டி, எலும்புகளின் வலிவை அதிகரிப்பதோடு நமது உடல், கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது என்பதை நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவர்.
ஆனால் 2007-ம் ஆண்டில் வெளியான ஆய்வு முடிவுகள் கூடவே வேறு பல ஆதாயங்களையும் வைட்டமின் டி நமக்குத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (multiple sclerosis) நோயையும் இந்த வைட்டமின் டி விரட்டுகிறது.
ஏன்..? கேன்ஸர் நோயைக்கூட உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘வைட்டமின் டி’-க்கு உண்டு என தற்போதைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கேன்ஸரையும் வைட்டமின் டியையும் தொடர்புபடுத்திய முடிவுகள், மருத்துவ உலகில் இன்னமும் உறுதி செய்யப்படாவிட்டாலும்கூட பெருங்குடலில் ஏற்படும் கேன்ஸரை அது தீர்க்கவல்லது என்கிற லேட்டஸ்ட் தகவல் நமக்கொரு நல்ல செய்திதான்! ஆகவே வைட்டமின் டியை நாள்தோறும் நம் உணவில் சேர்க்க வேண்டியது நமது கடமையாகும்!
“