குறிப்புப் பொருள் பற்றிய, தமிழ்நூல்கள் கருத்துக்களேயன்றி அணிநூல்கள் வாயிலாகப் பெற்ற வடநூலார் கருத்துக்களும், மேனாட்டு இலக்கிய அறிமுகத்தால் பெற்ற கருத்துகளும் புதுக்கவிதையின் குறியீட்டை உருவாக்குவதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. எனவே, புதுக்கவிதைகளில் இடம்பெறும் குறியீடுகள் சங்க கால மருதப் பாடல்களிலிருந்து கையாளப்பட்டதைப் பற்றி அறியலாம்.
மருதம்
ஐங்குறுநூறு, நற்றிணைகளில் மருதத்திணைக் குறியீட்டுப் பொருள்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. ‘வேந்தன் மேய தீம்புனல்’ உலகம் எனத் தொல்காப்பியர் கூறுகிறார். இவ்விரு நூல்களில் உள்ள மருதப்பாடல்களில் தலைவி, பரத்தை இவர்களின் ஊடலும் இதனால் தலைவனை மற்ற பொருள், விலங்கு இவற்றைக் குறியீட்டுப் பொருளாக வைத்துச் சாடுவதும் தென்படுகின்றன. இதனை,
"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்" (குறள் – 1330)
என்ற வள்ளுவனின் கூற்றிற்கு முன்பே, வேழப்பத்தில் ஓரம் போகியார் கூறுவதை அறியலாம்.
இயற்கைப் பொருள்களைத் தெய்வங்களாக மதித்துப் போற்றிப் புனைபவை. ‘உள்ளதை உள்ளவாறு புனைதல்’ என்பது உரிப்பொருள் பற்றியதன்று. இது முதல், கருவைப் பற்றியதேயாகும்.
உடன்போன தலைவி, இடைச்சுரத்தில் கண்டாரை "யான் போகின்ற படியை யாய்க் குநீர்" கூறவேண்டும் எனச் சொல்லியது "புதுக்கூறு" என்பது, "உடன் போக்கில் தலைவன் தேரூர்ந்து செல்வது புதுமை என்றல்" முதலியன இக்கூற்றிற்கு உறுதி செய்கின்றன.
புனலாடு மகளிர் சூழல் விளக்கம்
தலைவனும், தலைவியும் இனிய இல்லறம் நிகழ்த்தி வரும்போது, தலைவன் பரத்தையுடன் தொடர்பு கொண்டிருந்தான். இதனால் தலைவி அவன் மீது வருத்தம் காட்டினாள். தலைவன் தோழியிடம், தன் இல்லற இன்ப வாழ்விற்குத் தலைவியைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றான். தோழி, தலைவியிடம் சென்று தலைவனைப் பழித்தாள். மேலும், துரோகத்தைக் கூறித் தூற்றினாள். தலைவி, அவள் கூறும் உரையை ஏற்க மறுத்தது மட்டுமில்லாமல் கற்புக்காலத்தில் அவன் செய்த பல நன்மைகளைக் கூறினாள். தலைவனின் பிழையை மன்னித்து ஏற்றுக் கொண்டாள். தலைவி கூறியதைக் கேட்டதும் தலைவனிடம் வந்தாள் தோழி; தலைவி உடன்பாடு கொண்டாள் என்றாள். தானும் மகிழ்ந்து தலைவனையும் மகிழ வைத்தாள் என்று கூறுவதால் சங்ககால மக்களின் இல்லற வாழ்வைத் தோழி எனும் குறியீடுகள் மூலம் அறிய முடிகிறது.
"கௌவையஞ்சின் காமம் ஏய்க்கும்
என்னை விடினே உள்ளது நாணே
பெரு களிறு வாங்க முரிந்து நிலம் படாது"
தலைவியின் அன்பும், நாணமும் பிணைந்து துன்புறுத்துவதை இவற்றில் அறிய முடிகிறது.
சங்க காலத்தில், பெண்கள் மட்டுமின்றி அஃறிணையாகிய குரங்கும் இவ்வுணர்வோடு வாழ்ந்தது என்பதைச் சங்ககாலப் பாடல்கள் உணர்த்தும். ஆண் குரங்கு இறந்தமையால்,
"இன்புறு கணவர் இடரொரிய மூழ்கத்
துன்புறுவன நோற்றத் துயிருறு மகளிர்"
தலைவன் இல்லையெனில் தலைவி உயிர் துறந்திடுவாள் என்பதைப் போல, அஃறிணையாகிய குரங்கும், தன் துணை இல்லையென்றால் தற்கொலை செய்துகொண்டு விடும் என்பதாக உணர்த்தப்படுகிறது!
மணலாடு எருமை குறியீட்டு விளக்கம்
தலைவியைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் எருமை. மணலாடு சிமையத்தெருமை இளைக்கும். மணலாடு எருமை என்பது நீராடலன்றி சுடுமணலாக மாறிய நிலையில் உள்ள மணற்கண் தலைவி விளையாடியதை எருமை பத்து கூறுகிறது.
தலைவியும், சிறுமியர்போல் மணல் விளையாட்டில் விருப்பம் காட்டியதை இது குறிக்கிறது.. தலைவன் பரத்தையரோடு இருந்த காலத்தைச் சுடுமணல் உணர்த்துகிறது. அவன், தன் தவறு உணர்ந்த உடன் செம்மை நீங்கிக் குளிர்ந்த மணல்போல் ஆனான். தண்ணிய மணலிடத்து எருமை விளையாடியது என்பது தலைவனிடம் தலைவி கூறும் குறிப்புப் பொருளாகும்.
சிமையத்து எருமைக் குறிப்பு உணர்த்தும் குறியீடுகள்
சிமையத்து எருமை, மணல் மேட்டின் மேல் இருந்த எருமையைக் குறிக்கிறது. தலைவி என்னும் நற்பண்புகளின் குணச்சித்திரமாக இக்குறியீடு அமைக்கிறது.
புதுக்கவிதையிலும், அரிய பொருள்கள் இடம்பெறும் தறுவாய்க்கேற்பப் புதிய பொருள்களைக் குறியீடுகளாகக் கூறலாம். இன்றைய நாகரிகச் சூழலில் கற்பை இழந்த கல்லூரி மாணவியின் நிலையை,
"காலி டிபன் பாக்சை
பத்துப் போகத்
தேய்க்கிறாள் ஆயாக்கிழவி" (புதுக்கவிதை நோக்கம்)
என்று, தற்காலப் பெண்களின் கற்பு நிலை சுட்டிக் காட்டப்படுகிறது.
"கூர்முள் வேலிக் கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன் உடன் இனிய"
‘ஒரு வலிமைமிக்க எருமைமாடு, தான் நின்ற இடத்தையே தன் சாணத்தாலும் நீராலும் சேறாக்கிக் கொண்டது. பிறகு அதை விடுத்து, ஊரார் உறங்கும் வேளையில், தறியில் கட்டப்பட்டிருந்ததை அறுத்துவிட்டு, வேலியைத் தாண்டிப் (எல்லையை மீறிப்) பழைய குளம் ஒன்றிலே, மீன்கள் எல்லாம் ஓடும்படிப் புகுந்து, வள்ளைக் கொடியைச் சிதைத்துத் (மயக்கித்) தாமரையின் புத்தம் புதுப் பனிமலரைத் தின்னும் (இளம்பரத்தையர்) ஊரனே’ என்று தோழி தலைவனை இகழ்ந்து, புகழ்ந்து உரைப்பதன் மூலம் தலைவனை எருமைமாட்டுக் குறியீடாகவும், பரத்தையரைப் பனிபடர்ந்த மலராகவும் குறிப்பதைக் காணலாம். தற்போதைய புதுக்கவிதைகளில் இக்குறியீட்டு வடிவம் அடியொற்றி உள்ளது எனலாம்.
இட்ட ஒள்ளிழை எருமை
இட்ட ஒள்ளிழை எருமை என்பது மகளிர் இட்ட நல்ல அணிகலன்களை வெளிப்படுத்தும் நிலையில் உள்ள எருமை என்று தலைவியைக் குறிக்கிறது. தலைவி, நன்கு புனையப்பட்ட ஒள்ளிழைகளைப் புறக் கோபங்களாய்ப் பூண்டு இருப்பவள் மற்றும் கற்பு ஒழுக்கத்தில் சிறந்தவள் என்பதை அணியாகக் கொண்டிருப்பவள்.
புதுக்கவிதையில் சூழல் குறியீடுகள்
ஒவ்வொரு சொல்லும், சூழலுக்கேற்பப் பல்வேறு வகைகளில் பொருள் தருகின்றது. அவை,
"பூச்சோலை நெளிகிறது
திரையாகி அலைகிறது
துருப்பிடித்த சன்னலுக்குத் தெரியுமா?
சீலையின் தவிப்பு?" (புதுக்கவிதை நெருஞ்சி – ப.102)
என்னும் மீனாட்சியின் கவிதை மூலம் அறியலாம்.
"விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்" (கண்ணீர்ப் பூக்கள் ப.36)
என்ற மேத்தாவின் கவிதையில், விழிகளும் விரல்களும் கவிதைக் குறியீடுகளாக அமைகின்றன.
பழனப்பாகல் மயக்கும் எருமை
"பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை" (ஐங்குறு நூறு – பா.99) இங்கு, ஊர்ப்பொதுவிடத்தே வளர்ந்த பாகற் கொடியை அழித்து மேயும் எருமையைக் குறிக்கிறது. பழனப்பாகல் என்பது தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைக் குறிக்கிறது. முயிறு என்னும் குறியீட்டுச் சொல் பரத்தையரைக் குறிக்கிறது. மூசு என்னும் குறியீட்டுச் சொல் பரத்தமை ஒழுக்கத்தினைக் குறிக்கிறது. மேலும், குடம்பை மயக்கும் எருமை என்பது நச்செறும்புகள் தங்குதற்கு இடமான கூட்டை அழிக்கும் எருமை என்பதைக் குறிக்கிறது.
கவிதைக் குறியீடுகள்
புதுக்கவிதையில், சாளரத்தில் கவிதைகளில் படியும் புழுதியையும், கரையான்களையும் நீக்கிச் சாயம் அடித்துப் புதுமைப்படுத்திய பிறகு, சிலநாள் கழித்து மீண்டும் வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகைகளைக் கையில் ஏந்த வேண்டியுள்ளது என வேணுகோபாலனின் கவிதை உணர்த்துகிறது. அவற்றை,
"அரச மரங்களை வெட்டி எறிந்தனர்
ஆலமரங்களை நட்டு வளர்த்தனர்" (சண்முக – ப.9)
என்று, சண்முகசுப்பையா அரசமரம் என்ற சொல்லை சிலேடைப் பொருளாகவும், ஆட்சிமுறையை ஆலமரமாகவும் குறியீடுகளாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம்.
"கழனி எருமை கதிரொடு மயக்கும்" (ஐங்குறுநூறு – ப.99)
கழனியில், வரப்பருகே செழித்து வளர்ந்து, வரப்பின் மேல் சாய்ந்து செழித்து வளர்ந்த நெற்கதிர்களை அழித்துவரும் எருமையைக் குறியீடாகத் தோழி கூறுகிறார்.
பூக்கஞல் ஊரன் எருமைக் குறியீடுகள்
"பூக்கஞல் ஊரன் மகள் இவள்
நோய்க்கு மருந்தாகிய பணைத்தோளே" (ஐங்குறுநூறு – ப.99)
பூக்கஞல் என்னும் சொல் இன்பக் குறியீடாக அமைகிறது. இதில் ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து’ என்னும் குறட்பாவின் கருத்து உணர்த்தப்படுகிறது.
"குறிப்பிணின் உள்ளே குவலயத் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்" (திருமந்திரம் – 587)
இத்தகைய குறியீடுகளை இலக்கியத்தில் மட்டுமின்றி, அறிவியல், உளவியல், சமூகவியல் போன்ற துறைகளில் இன்றைய கவிஞர்கள் பயன்படுத்துவதை அறியலாம்.
ஆக, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் குறியீட்டுப் படிமங்கள் தற்காலப் புதுக்கவிதைக்கு வழிவகுத்து உள்ளன. தலைவன், தலைவி, தோழி எனும் கருத்துப் படிமங்களின் குறியீடுகள் தற்காலத்தில் புதுக்கவிஞர்களான பிரமிள், அப்துல்ரகுமான், கவிதாசன் போன்றோர்களால் அதிகம் கையாளப்பட்டு வருகின்றன.
சங்க மருதப்பாடல்களில் இடம்பெறும் படிமங்களே தற்காலப் புதுக்கவிதையின் குறியீடுகளாக உள்ளன என்பதை, இக்கட்டுரையில் ஓரளவு சுட்டிக்காட்டியுள்ளேன்.
“
நிறைய சொல்லப் பட்டிருக்கிறது இங்கே. ஆனால் நடை மிகவும் அந்நியமாக இருப்பதால் ரசிக்க இயல வில்லை. இன்னும் எளிய நடையில் சொல்லியிருந்தால் அவ்வளவையும் ரசிக்கலாம். நல்ல கருத்துகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என் போன்ற சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ள முடிய வில்லையே? இது என்னுடைய குறைபாடாகக் கூட இருக்கலாம்.
ரவி.