நிலைக்கண்ணாடியின் முன்
நிற்கும் போழ்தெல்லாம்
நிலம் கீறி
விதையூன்றிப் பின்
பெயர்த்தெடுக்குமோர்
நாற்று நடுவை
ஞாபகத்தில் விழுகிறது.
புலம் பெயர்ந்த காலோடு
புதுமழை எங்கோ
தொலைந்து போய்விட்டது.
இருட்டில் எப்போதாவது
அது தலைகாட்டும்
நாழிகைகளிலும்
நெடி நுகர
நேரம் ஒன்றுமில்லை
என்றாகிப்போனது!
விளையாத நெல்
– விரல் பட்டு
தொடுக்காத மலர்
– கொம்பேறி
பறிக்காத கனி
– கேணியில்
இறைக்காத நீர்
– ஒரு சொட்டும்
வியர்க்காத மேனி
– ஆனாலும்
பசியாத வயிறு
இது என்
அயல்நாட்டு வாழ்க்கை!
நான்
மருத நிலத்தை
அடகு வைத்துப்
படகு வாங்கிய
நெய்தல் நிலச் சேர்ப்பன்.
ஒரு முழு ஆயுட்காலப்
பொருளீட்டின் முடிவிலும்
வாங்கிவிட முடியுமா
சிதையாத
ஒரு வேனிற்காலத்தையும்
சில்லென்ற
முற்றத்து வேப்பமரத்தையும்?
னிcஎ நொர்ட்ச்
did you mean nice words?
பொருள் தேடிப் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை இன்று இவ்வாறுதான் உள்ளது. சொர்க்கமே ஆனாலும் அது நம் ஊரு போல வருமா? -அரிமா இளங்கண்ணன்