ஈஸ்டர் பெருநாள்! தேவமைந்தன் ஏசுபிரான் உயிர்த்தெழுந்ததன் நினைவாகக் கொண்டாடப்படும் திருநாள்! ஆனால், இந்தக் கொண்டாட்டத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கின்றன பல வரலாற்று உண்மைகள்!
தொடக்கத்தில், இந்தப் பெருநாள் சமயச் சார்பற்ற, சிலை வழிபாடாகவே இருந்து வந்திருக்கின்றது. இரண்டாவது நூற்றாண்டில்தான் இது கிறித்துவர்களின் பெருநாளாக மாறியிருக்கின்றது!
10ஆம் நூற்றாண்டுக்கும் 15ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த சாக்சன்ஸ் (Saxons) எனப்படும் இனத்தவர் வசந்த காலத்தின் வருகையை அமர்க்களமாகக் கொண்டாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதற்காக அவர்கள் ஈஸ்டர் (Eastre) என்ற பெண் கடவுளை வழிபட்டிருக்கின்றார்கள். (இந்த ஈஸ்டரின் எழுத்தமைப்பைக் கவனியுங்கள்!). இரண்டாம் நூற்றாண்டில் வந்த கிறித்துவச் சமயப் பரப்புரையாளர்கள் இவர்களைச் சந்தித்து, சிலை வழிபாட்டை நிறுத்தி, அவர்களையும் கிறித்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்திருக்கின்றார்கள். எடுத்த எடுப்பில் எதையும் செய்து விடாமல், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளில் இவர்கள் தம் விழாவைக் கொண்டாடும் விதத்தில், ஊசியில் வாழைப்பழம் ஏற்றுவது போல மாற்றத்தை மெல்லப் புகுத்தினார்கள். Eastre என்ற பெயரில் எழுத்துக்களைச் சற்றே மாற்றி, இன்று நாம் எல்லோரும் அறிந்த Easter ஆக்கினார்கள்.
இதுதான் ஈஸ்டரின் கதை!
இந்த ஈஸ்டர் ஞாயிறு வரும் திகதி* ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். ஒரு காலத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என்று நினைத்த கிழமைகளில் ஈஸ்டர் பெருநாளைக் கொண்டாடி வந்திருக்கின்றார்கள். கொன்ஸ்ன்ரைன் என்ற அரசர்தான் கி.மு.325இல், ஈஸ்டர் பெருநாள் ஞாயிறன்றுதான் கொண்டாடப்பட வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தினார். முழுநிலவு நாளை வைத்து இந்த ஞாயிற்றைக் கணிக்கத் தொடங்கினார்கள். மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில்தான் ஈஸ்டர் பெருநாள் வரும். 2021ஆம் ஆண்டு வரை, ஈஸ்டர் வரும் திகதிகள் உங்களுக்காக இதோ தரப்பட்டுள்ளன.
Gregorian Easter
2012 April 8
2013 March 31
2014 April 20
2015 April 5
2016 March 27
2017 April 16
2018 April 1
2019 April 21
2020 April 12
2021 April 4
சரி, இந்த முயலும் முட்டைகளும் எப்படி ஈஸ்டர் பெருநாளோடு ஒட்டிக் கொண்டன? சிலை வழிபாடு செய்தவர்கள் -அதாவது சாக்ஸன் என்று அழைக்கப்பட்ட ஜெர்மானியர்கள்- தங்கள் பெண்கடவுளான ஈஸ்டரை வழிபட்டபோது, நிலமகளின் சின்னமான முயலை வைத்தே வழிபட்டிருக்கின்றார்கள். அமெரிக்கா சென்றபோது ஜெர்மானியர்கள், ஈஸ்டரோடு முயலையும் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால் உள்நாட்டுப் போர் வெடித்து ஓயும் வரை, கிறித்துவர்கள் யாரும் முயலை இந்த விழாவுடன் இணைத்துக் கொள்ளவேயில்லை.
ஏன் முட்டைகளுக்கு நிறமூட்டுகின்றார்கள்?
தொடக்கம் முதலே, பிறப்பின் அடையாளமாகவே முட்டைகளைக் கருதி வந்திருக்கின்றார்கள். பொன்னிறமான இலைகளில் சுற்றியோ, நாட்டுப்புறத்தவராக இருந்தால், இலைகளையும் குறிப்பிட்ட சில பூவிதழ்களையும் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, அதில் முட்டைகளை இட்டு நிறமூட்டியோ, பின்னரே முட்டைகளைப் பரிசளித்திருக்கின்றார்கள்.
சிலுவையில் அறையப்பட்டு, மரணித்த ஏசுபிரான் மூன்றாம் நாள் கல்லறைக் கல்லைப் புரட்டிக் கொண்டு வெளிவந்து உயிர்த்தெழுந்த ஞாயிறுதான் இந்த ஈஸ்டர் ஞாயிறு. அயல் மண்ணில் வாழத் தொடங்கித் தமிழர்களான நம்முள்ளும் பல உணர்வுகள் மரணித்துப் போயிருக்கின்றன. இறையுணர்வு, உறவுகளின் மீதான நேசம், பெரியவர்களை மதித்தல் எனப் பல உணர்வுகள் நம்மிடையே மெல்ல மெல்ல மரணித்து வருகின்றன. இது நல்லதற்கில்லை! இந்த உயிர்த்தெழுந்த பெருநாளில், நம்மிடையே மரணித்து வரும் உணர்வுகளும் உயிர்த்தெழ வேண்டும்! அன்பில்தான் உலகமனைத்தும் உலா வரவேண்டும்! ஆளுக்கு ஆள் அன்பு காட்டத் தவறிவிட்டால், அவனியில் எஞ்சுவது வெறும் மோதல்களும் இரத்தக் களரியும்தான்! இது இனியும் வேண்டாமே உறவுகளே!
பணம்தான் எல்லாம் எனும் உணர்வு மரணிக்கட்டும்! அன்பு உயிர்த்தெழட்டும்!
கடவுள் மறுப்பு மரணிக்கட்டும்! இறை நம்பிக்கை உயிர்த்தெழட்டும்!
மதிப்போம்! உலகத்தாரை நேசிப்போம்! சாகடிக்கப்பட்ட நல்உணர்வுகள் உயிர்த்தெழட்டும்! உண்மையான கொண்டாட்டம் கிடைப்பது அப்பொழுதுதான்!