மரணிக்கு முன் ஒரு நிமிடம்
எழுதிவிடுகிறேன்
உங்கள் தீராத
மனப் பக்கங்களில்
ஒவ்வொரு முறை
இதயம் துடித்து
அடங்கும் போதும்
ஓராயிரம் எண்ணக் குமுறல்கள்
இதயத்தின் ஓரத்தில்
உடைப்பெடுத்து
ஆங்காங்கே அடைத்துப்
பின் பெருவலியோடு
மூளையில் மையம் கொள்ளும்
பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைந்து கொண்டவைதான்
எனக்கோ விரல்களின் வழியே
வீழ்கின்றன
இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன
ஒருபுறம்
இனங்களுக்கிடையே போராட்டம்
மறுபுறம்
ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம்
எதைத் தொட
எதை விட… ?
இரவின் நிசப்தத்தைக்
கிழித்துச் செல்லும்
பல்குழல் எறிகணை போல்
ஓங்காரமாய் ஓலமிடும்
இனவெறிகள்
கறைகளோடே
சுத்தம் பற்றிப் போதிக்கும்
நம் சாதீயச்
சவர்க்காரங்கள்
எத்தனைமுறை வெளுத்தாலும்
கரைவதேயில்லையே ஏன்?
இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன…