டாக்டர்.என்.ஜே.ஸ்டோவெல் நாத்திகராக இருந்தார். அவர் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்று அவரைக் கடவுள் மேல் நம்பிக்கை வைக்கச் செய்தது.
இந்த டாக்டர்தான், எப்படி மனிதனுக்கு மனிதன், கை ரேகையில் வித்தியாசம் காணப்படுகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு மனித மூளையிலிருந்து வெளிப்படும் அலைகளிலும் வேறுபாடு உள்ளது என்பதைக் கண்டுபிடித்தவர். இந்த அலைவரிசைகளைப் பதிவு செய்யச் சாத்தியக்கூறு உள்ளது என்பதையும் அவர் கண்டறிந்தார்.
அடுத்த பரிசோதனையாக, மனிதனின் உயிர் போகும்போது அவனது மூளை எப்படிச் செயல்படுகிறது, அதன் அலைகளின் மாதிரி எப்படி உள்ளது என்பதைக் கணிக்க விரும்பினார். பரிசோதனைக்குப் பெண் ஒருவரைத் தெரிவு செய்தார். மூளையில் ஏற்பட்ட புற்று நோயினால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால், தடுமாறாமல், கீழே விழாமல் அவரால் நடக்க முடியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தவிர மற்றபடி அவருடைய சிந்தனை தெளிவாகவே இருந்தது. அவருடைய மரண வேளையும் வந்தது. அவர் மரணத்தைச் சந்திக்கப் போகிறார் என்ற செய்தியும் அவருக்குச் சொல்லப்பட்டது. அவருடைய உயிர் பிரியும் வேளையில் மூளையில் நடைபெறுவது என்ன என்பதைப் பதிவு செய்யும்படியாக அந்த அறையில் ஓர் எந்திரம் வைக்கப்பட்டது. மேலும், அந்தப் பெண் இறுதியாக ஏதாவது கூறினால், அதைப் பதிவு செய்து கொள்ள அந்த அறையில் ஒரு சிறு மைக்ரோபோனும் வைக்கப்பட்டது. இப்பதிவுகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் ஐந்து பேர் கூடியிருந்தனர். அவர்களுக்கு முன்பிருந்த கருவியின் முள், மையத்தில் உள்ள பூஜ்ஜியத்தில் இருந்தது. பூஜ்ஜியத்துக்கு வலப்பக்கத்தில் +500 வரையும் இடப்பக்கத்தில் -500 வரையும் அளவீடுகள் அதில் இருந்தன. 50 கிலோ வாட் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு நிலையத்தின் அலைகளைச் செலுத்தியபோது +9 என்று அளவு காட்டிய கருவி அது என்பது இங்கே நாம் அறிய வேண்டிய ஒன்று.
மரணத்தின் இறுதி வேளையை நெருங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண் ஜெபிக்க ஆரம்பித்தார். இவ்வாழ்வில் தன்னைத் துயரத்திற்கு உட்படுத்தியவர்களை மன்னிக்கும்படியாக அவர் கடவுளிடம் வேண்டிக் கொண்டார். அதை அடுத்த அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். ஏனெனில், திடீரென்று அந்தக் கருவியின் முள் 500க்கு மேலாகச் செல்ல முடியாமல் வலக்கோடியில் அழுந்திக் கொண்டு நின்றது. மூளையிலிருந்து வெளிப்பட்ட ஆற்றல், 50 கிலோ வாட் ஒலிபரப்பு நிலையத்தின் ஆற்றலை விடச் சுமார் 55 மடங்கு அதிகமாகக் காட்டப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக, மரணத் தறுவாயில் இருந்த மற்றொரு மனிதனை இப்பரிசோதனைக்கு ஆட்படுத்தினர். இம்மனிதன் வாழ்நாளெல்லாம் பாவ வாழ்க்கை வாழ்ந்தவன். ஆனால், தன்னை மருத்துவமனையில் கவனித்து வந்த நர்ஸ் மேல் அதிகமாக, அசாதாரண அன்பைக் காட்ட ஆரம்பித்தான். இந்தத் தவறான அன்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் அந்த நர்ஸ். மரணத் தறுவாயிலும் காதல் வெறிகொண்ட அந்த மனிதனை யாவரும் வெறுத்தனர். அவன் மூர்க்க வெறிகொண்டு யாவரையும் திட்ட ஆரம்பித்தான். கடவுளைச் சபித்தான். அவ்வேளையில் முள் 500க்கு இடப்பக்கம் சென்று ஓய்வின்றி அலசடி பட்டுக் கொண்டிருந்தது. பின்பு அம்மனிதன் மரணம் அடைந்தான். விஞ்ஞானிகள், கடவுள் பயங்கொண்டவர்களின் மூளை ஆற்றலுக்கும், கடவுள் பயமற்ற பாவ வாழ்க்கை வாழ்ந்தவர்களின் மூளை ஆற்றலுக்கும், அவற்றின் செயல்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொண்டனர்.
மனித எண்ணங்களை அறிவது எவ்வளவு நிச்சயம்!
நன்றி: ‘பசுமை இந்தியா’ மாத இதழ், நவம்பர் 2012.
“