நான் பயந்த மாதிரி அசம்பாவிதம் ஒன்றுமில்லை.
அப்பாவும் அம்மாவும் அவரவருடைய கட்டில்களில் உட்கார்ந்திருந்தார்கள். அப்பாவுக்குப் பக்கத்தில் கண்ணியமான தோற்றத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரர்.
அம்மாவுக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி.
கீழே, தரையில் சில ஆண்களும், பெண்களும்.
‘இதுதாங்க எம் புள்ள’ என்று அப்பா என்னை அறிமுகப்படுத்தி வைக்கவும், பல ஜோடிக்கரங்கள் என்னை நோக்கிக் குவிந்தன. நான் பதில் வணக்கம் செய்தவுடன் அந்த மனிதர் பேச ஆரம்பித்தார்.
"என்னங்க தம்பி, அப்பா அம்மாவத் தனியா வுட்டுட்டு நீங்க இப்படிப் போகலாங்களா? நல்ல சமயத்துல நா வந்து சேந்தேன். இல்லாட்டி என்ன ஆயிருக்கும்!"
"பக்கத்து ஊருக்கு மருந்து வாங்கப் போயிருந்தேன் சார். என்ன சார் ஆச்சு?"
"என்ன ஆச்சுன்னு அப்பறம் சொல்றேன். மொதல்ல நம்மள அறிமுகப்படுத்திக்குவோம். எம்பேர் ரங்கசாமி இளங்கோ. இந்த ஊர்ல பஞ்சாயத்துத் தலைவனா இருக்கேன். இது என் சம்சாரம். இது மாடசாமி, மாணிக்கம், பீட்டர், சின்னையா, அப்துல்லா, ஆறுமுகம், அலமேல், பார்வதி, செல்லம்மா. வெளிய கொஞ்சம் பேர் நிக்காங்க. நா மெட்ராஸ்க்கு ஒரு வேலையாப் போனேனா, வேல முடியல, அங்கயே தங்க வேண்டியதாப் போச்சு. இல்லாட்டி நீங்க வந்த அன்னிக்கே ஒங்கள வந்து பாத்திருப்பேன். காலைல ஒம்போது மணி போல தான் பட்டணத்துலயிருந்து வந்தேன். வந்ததும் கேள்விப் பட்டேன், புதுசா ஒரு குடும்பம் நம்ம ஊருக்குக் குடி வந்திருக்குன்னு. ஒடனே என் சம்சாரத்தக் கூட்டிக்கிட்டு வந்தேன். இங்க வந்தா, வீடு தொறந்து கெடக்கு. கொரல் குடுத்தா, உள்ள வாங்க சீக்கிரம் வாங்கன்னு ஒரு பொம்பளக் கொரல் கேக்குது. என்னமோ ஏதோன்னு உள்ள ஓடிப்போய்ப் பாத்தா, பாத்ரூம் வாசல்ல பெரியவங்க விழுந்து கெடக்காங்க. ஒங்கம்மா இவங்களத் தூக்க முடியாமத் திண்டாடிக் கிட்டிருக்காங்க. நா வந்து தூக்கிக் கட்டில்ல போட்டேன். நல்ல வேளையா அடியொண்ணும் பலமில்ல. கொஞ்ச நேரம் படுத்துக் கெடந்தாங்க. அப்புறம் எந்திரிச்சி ஒக்காந்துட்டாங்க."
"ரொம்ப ரொம்ப நன்றி சார். இந்த உதவிய நா மறக்கவே மாட்டேன் சார்."
"அட நீங்க ஒரு பக்கம் தம்பி. கீழ விழுந்து கெடக்கிற பெரியவரத் தூக்கி விடறது ஒரு உதவி! அதுக்கு ஒரு நன்றி! அது ஒரு பக்கம் கெடக்கட்டும். நீங்க இனிமே மருந்து வாங்கப் போறேன்னு ஊர் விட்டு ஊர் போயிராதீங்க."
"நா போகாட்டி யார் சார் போவா?"
"அதத்தான் சொல்ல வாறேன். இந்த மாடசாமி இன்னியிலிருந்து இந்த வூட்டு வாசல்லயேதான் கெடப்பான். ஏதொண்ணும் வாங்கணும்னா இவன்ட்ட சொல்லுங்க."
"ஐயையோ, எதுக்குங்க ஒங்களுக்கு செரமம்!"
"செரமமெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி. எங்க ஊருக்கு நீங்க விருந்தாளியா வந்திருக்கீங்க. நீங்க கஷ்டப்படுறத நாங்க அனுமதிக்க முடியாது."
"விருந்தாளியெல்லாமில்லீங்க சார். நாங்க இங்க குடியிருக்க வந்திருக்கோம்."
"தாராளமாக் குடியிருங்க. ஆனா ஒங்களுக்கு வேற முக்கியமான வேலயிருக்கு. பெத்தவங்களப் பாதுகாக்கிற வேல. வயசான காலத்துல அப்பா அம்மாவப் பாத்துக்கிறது எவ்வளவு புனிதமான சேவை தம்பி!"
"ஐயையோ, அப்படியொண்ணும் எனக்கு வயசாயிரல சார்."
இயல்பாய் நான் எடுத்து விட்ட ஹாஸ்யத்துக்குப் பஞ்சாயத்துத் தலைவர் சிரித்தார்.
"பரவாயில்ல. பரவாயில்ல தம்பி, ஒங்க சோகத்துலயிருந்து மீண்டு வந்துட்டீங்க."
"இல்ல சார் அது அவ்வளவு சாதாரணமான சோகம் இல்ல. என்னமோ அப்பப்ப சின்னதா சிரிச்சி என்னையே நா ஏமாத்திக்கிறேன்."
"அப்படிச் சொல்லாதீங்க தம்பி. இப்பத்தான் நீங்க தகிரியமா இருக்கணும். நீங்க வர்றதுக்கு முந்தி அப்பாட்டயும் அம்மாட்டயும் பேசிட்டிருந்தோம். எல்லா வெவரமுஞ் சொன்னாங்க. வாழ்க்கைங்கறது ஒரு சக்கரம் மாதிரி தம்பி. வாழ்க்கைச் சக்கரம் சுத்திக்கிட்டே இருக்கும். மேல போகும், கீழ வரும். இப்ப நீங்க கீழ இருக்கீங்க. அடுத்தது மேல போய்த்தானே ஆகணும் தம்பி!"
அவர் பேசப்பேச எனக்குள்ளே தன்னம்பிக்கையும் உற்சாகமும் துளிர்ப்பதை உணர்ந்தேன். அதை அவரிடமே சொன்னேன், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு.
அப்போது ‘சாப்பாடு ரெடீ’யென்றொரு பெண்குரல் உரக்க ஒலித்தது.
ஐயையோ மறந்தே போனேன்; மத்யானச் சாப்பாட்டுக்குக் குக்கரில் அரிசி போட வேண்டும். ஆமாம் இது என்ன சாப்பாடு ரெடீ?
"சாப்பாடு கொண்டாந்துட்டியா சிவகாமி? ஒங்கையாலயே பரிமாறு. எனக்கும் ஒரு எல போடு."
நான் திகைத்தேன்.
"சார், என்ன சார் இது?"
ரெங்கசாமி இளங்கோவிடமிருந்து சர்வசாதாரணமாய் பதில் வந்தது.
"தெரியல? சாப்பாடு தம்பி. அரிசிச்சோறு, சாம்பார், கூட்டு, பொறியல், அப்பளம், மோரும் ஊறுகாயும் உண்டாம்மா சிவகாமி?"
"ஓ, உண்டு அங்க்கிள். ஃபுல் மீல்ஸ் ஒன்லி!"
"இது பட்டணத்துல போய்ப் படிச்சிட்டு வந்த பொண்ணு. அதனால இவங்க இங்லீஷ்தான் பேசுவாங்க. தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. சரி, பசி உயிர் போகுது. கையக் காலக் கழுவிட்டு வாங்க, சிவகாமி சமயல ஒரு புடி புடிப்போம்."
"நாங்கூட இங்லீஷ் பேசுவேன் சார். திஸ் இஸ் ட்டூ மச் சார்."
"ட்டூ மச்சுமில்ல த்ரீ மச்சுமில்ல. ஒங்களுக்கென்ன சமையல்ல பெரிய நளன்னு நெனப்பா தம்பி? அப்படி என்ன சமையல் பண்ணுவீங்க நீங்க?"
"வந்து… குக்கர்ல சாதம் வைப்பேன். ரசம் வைப்பேன். அப்பளம் பொரிப்பேன். முட்டை பொரிப்பேன்."
"ரொம்பப் பிரமாதம். ஒங்கம்மாட்ட பேச்சக் குடுத்தேன்னா, அவங்களுக்குப் பேசவே முடியல. கேட்டா, நாக்கு செத்துப் போச்சுங்கறாங்க. ஒங்க சமையல்தான் காரணம். இனி ஒங்களுக்கு சமையக்கட்டுல வேல இல்ல தம்பி. தெனம் ஒவ்வொரு வூட்லயிருந்து சாப்பாடு வந்துரும். மிச்சம் வக்யாமச் சாப்புட வேண்டியதுதான் ஒங்க வேல."
ஒரே மலைப்பாய் இருந்தது. மெடிக்கல் ஷாப்பில் வெங்கட் இந்த ஊர் ஜனங்கள் பற்றியும் பஞ்சாயத்துத் தலைவர் பற்றியும் சொன்னது எனக்கு உறைக்க ஆரம்பித்தது.
சாப்பாட்டுப் பந்தி முடிந்த பின்னால் வீடு காலியானது. அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பின தலைவர், என்னைத் தனியாய்க் கூப்பிட்டு ரெண்டு விஷயங்களைச் சொல்லிப் போனார்.
ஒன்று புனிதம், மற்றது புதிர்.
இன்றிலிருந்து தினசரி சாயங்காலம் சாயங்காலம் இளைஞர் அணி ஒன்று வீட்டுக்கு வருமாம். வந்து, அம்மாவையும் அப்பாவையும் வெளியே உலாவ அழைத்துப் போகுமாம். ‘வயக்காடு, மாந்தோப்பு, மல்லிகைத் தோட்டம் இங்கேயெல்லாம் போய் காத்து வாங்கிட்டு வந்தாலே ஒங்கப்பாக்கும் அம்மாவுக்கும் பாதி வியாதி சொஸ்தமாயிரும் பாருங்க.’
"அப்பறம் தம்பி, நாளக்கிக் காலைல ஒரு ஊர்க்கூட்டம் போட்டிருக்கோம். ஒங்களப் பத்தி ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்போறோம். நாளக்கி சாயங்காலம் ஒங்கள வந்து பாக்கறேன் தம்பி. நல்ல முடிவோட வர்றேன்."
பஞ்சாயத்துத் தலைவர் சொன்னது மாதிரியே சாயங்காலம் ஒரு யவ்வனப் பட்டாளம் வந்து அப்பாவையும் அம்மாவையும் கடத்திக் கொண்டு போனது.
அதற்கு முன்னால் தேனீர்.
உபயம் : சிவகாமி, இரவு உணவும் சிவகாமியே.
இந்த உபசரிப்பு கொஞ்சங் கொஞ்சமாய்ப் பழக்கமாகி விட்டாலும், ராத்திரி தூக்கம் பிடிக்கவில்லை. என்ன ஊர்க் கூட்டம்? என்ன என்னைப் பற்றிய முக்கியமான முடிவு?
அடுத்த நாள் புதிரை அவிழ்க்க வந்தார் தலைவர்.
(தொடரும்)