மருந்துக்குக் கூட ஒரு மெடிக்கல் ஷாப் இல்லை இந்த ஊரிலே.
பக்கத்து ஊரில் ஒரு கடை இருக்கிறதென்று சொன்னார்கள்.
செம்மண் சாலையில் ஒண்ணரைக் கிலோமீட்டர் சைக்கிளை மிதித்துக் கொண்டு மெய்ன் ரோடு வந்தேன்.
கல்லூரிக் காலத்தில் சைக்கிளில் ஜாலிரைடு போனதுண்டு. முன்புறமும் பின்புறமும் தோழர் களை உட்கார்த்தி வைத்துக்கொண்டு.
சில சமயம் தோழிகளையும்.
டச் விட்டுப்போய்க் கனகாலமாச்சு.
அதுவும், நாஷனல் பர்மிட் லாரிகளும், பைப்பாஸ் ரைடர்களும் விஷ் விஷ்ஷென்று விரைகிற இந்த ட்ரங்க் சாலையில் பாதுகாப்பாய் சைக்கி ளோட்டுவது ஒரு சர்க்கஸ் மாதிரி.
ரெண்டு கிலோமீட்டர் கடந்த பின்னால் அடுத்த ஊர் வந்தது.
நல்லவேளை, சாலையோரமாகவே இருந்தது மருந்துக்கடை. ஆனாலும் பிரயோஜனமில்லை. நாகரிகமான பல மாத்திரைகள் அங்கே இல்லை.
மாத்திரைகளின் லிஸ்ட்டையும் இருநூறு ரூபாய் அட்வான்ஸையும் கொடுத்துவிட்டுப் போனால் மெட்ராஸிலிருந்து மருந்துகளை வரவழைத்து ஒருவார காலத்தில் டெலிவரி தருவதாய்ச் சொன்னார்கள்.
வாலட்டைப் பிரித்துப் பணத்தை எடுத்தபோது, பக்கவாட்டில் ஒரு பரிச்சயமான குரல்.
"இந்தாப்பா, சார்ட்ட அட்வான்ஸெல்லாம் வாங்க வேண்டாம்ப்பா."
தொண்ணூறு டிகிரி கழுத்தைத் திருப்பி பார்த்தால், வெங்கட்.
ரெண்டுமாசம் முன்பு வரை என்னுடைய கடைக்கு ப்ளாஸ்டிக் பொருட்கள் விநியோகம் செய்து கொண்டிருந்த வெங்கட்.
‘நீங்க எங்க வெங்கட் இங்க?’ என்று சிரித்தேன்.
‘எங்க அக்கா இந்த ஊர்லதான் இருக்காங்க சார்’ என்றார் வெங்கட்.
"எங்க அத்தான் கட தான் இது. ஸிட்டிலயிருந்து முப்பது கிலோமீட்டர் தான? வாரம் ஒரு தடவ சும்மா வந்துட்டுப் போவேன்.
ஆமா, நீங்க என்ன சார் இங்க? வியாபாரத்த க்லோஸ் பண்ணப்பறம் அப்பா அம்மாவோட ஒரு கிராமத்ல போய் செட்டில் ஆயிரப் போறதா சொன்னீங்களே, இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டீங்களா சார்?"
"இல்ல வெங்கட், பக்கத்ல, குத்தம்பாக்கம்."
ஊரின் பேரைச் சொன்னதும் வெங்கட்டின் விழிகள் பிரகாசமடைந்தன.
"அருமையான ஊராச்சே சார். அற்புதமான எடத்த நீங்க தேந்தெடுத்திருக்கீங்க சார். அது ஒரு ரோல் மாடல் வில்லேஜ் சார்."
"இருக்கலாம் வெங்கட். ஆனா அங்க ஒரு மெடிக்கல் ஷாப் இல்லியே."
"தேவையில்ல சார். அந்த ஊருக்கு மெடிக்கல் ஷாப்பே தேவையில்ல. அந்த ஊர்ல எல்லாமே அழகான மனுஷங்க.
ஆரோக்யமான மனுஷங்க. வியாதி அங்க யாரையும் அண்டவே அண்டாது. இளங்கோன்னு ஒரு பஞ்சாயத்துத் தலைவர சந்திச்சிருப்பிங்களே?"
"இல்ல வெங்கட். நாங்க வந்து ரெண்டு நாள்தான் ஆச்சு."
"இருக்கட்டுமே சார். ரெண்டு நாளா எப்படி அவர் ஒங்கள மிஸ் பண்ணினார்? சரி இப்ப நீங்க கௌம்புங்க, ஒங்க வீட்ல ஒங்களுக்காக இளங்கோ காத்துட்டிருப்பார் பாருங்க!"
"என்னமோ நேர்ல பாக்கற மாதிரி சொல்றீங்க வெங்கட்!"
"ஞான திருஷ்ட்டில பாக்கறேன் சார். நீங்க வேணா பாருங்களேன், ஒங்களுக்காகவே அவர் காத்துட்டிருப்பார். சரி நீங்க பொறப் படுங்க சார். நாளக்கழிச்சி ஒங்க மருந்து ரெடியாயிருக்கும். இல்ல ஒங்க வீட்லயே டெலிவரி பண்ணிரச் சொல்லட்டுமா?"
"இல்ல வெங்கட், நானே வந்து வாங்கிக்கறேன்."
வெங்கட்டுக்கும், கடைக்காரருக்கும் நன்றி சொல்லி விட்டு நான் சைக்கிளை சமீபித்தபோது, கடைக்காரரிடம் வெங்கட் தணிந்த குரலில் சொன்னது என் காதில் விழுந்தது.
"…. நல்ல மனுஷன் அத்தான். பாவம், வாழ்ந்து கெட்ட மனுஷன். மெட்ராஸ்ல அண்ணாநகர்ல பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வச்சிருந்தார். கடையப் பெரிசாக்கறேன்னு கொஞ்சம் அகலக்கால் வச்சிட்டார். டைம் சரியில்ல. கடகடன்னு கடன் ஏறிப்போச்சு. கடைசில கடை, கார், வீடு எல்லாத்தையும் வித்துப்போட்டு மெட்ராஸ்ல இருக்கவே புடிக்காம வயசான அப்பா அம்மாவக் கூட்டிக்கிட்டு வெளியேறிட்டார். பிஸினஸ் நஷ்டமாப் போனவொடன அவரோட ஒய்ஃப் அவர விட்டுட்டுப் போய்ட்டதாக் கேள்வி…"
குத்தம்பாக்கத்தைப் பார்க்க சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தபோது, வெங்கட்டின் சொற்கள் அசரீரி மாதிரி ஒலித்துக் கொண்டேயிருந்தன.
தொடர்ந்து மனக்கண்ணில் நிழலாடியது, மூணு மாசம் முன்பு வரை நான் வாழ்ந்த ராஜ வாழ்க்கை. பிறகு, வியாபார விஸ்தரிப்புக்காக வாங்கிய மார்வாடிக் கடனுக்கான வட்டி, டெய்லி வட்டி, மீட்டர் வட்டி எல்லாம் குரல்வளையை நெறிக்க, மளமளவென்று சரிந்து போன பிஸினஸ் சாம்ராஜ்யம். நொடித்துப் போன புருஷனோடு எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று குழந்தையைக் கூட்டிக் கொண்டு அம்மாவீட்டுக்கு, சிங்கப்பூருக்கு விமானமேறிவிட்ட படி தாண்டிய பத்தினி. கடையையும், காரையும், வீட்டையும் அவசர அவசரமாய் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு, கடன்களை அடைத்து விட்டு, எஞ்சியிருந்த சில ஆயிரங்களோடும் அம்மா அப்பா வோடும் குத்தம்பாக்கத்தில் குடியேற்றம். செய்யக்கூடியது இனி ஒன்றுமில்லை. இதுதான் இனி வாழ்க்கை என்று ஆகிவிட்டது. பெற்றோருக்கு ஆதரவாயிருந்து கடைசி வரைக்கும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். மெட்ராஸ் வாழ்க்கை இனி கட்டுப்படியாகாது. தவிரவும், சென்னை யிலிருந்து விலகினால் பழைய நண்பர்கள், கஸ்டமர்கள், சப்ளையர்கள் துக்கம் விசாரிப்பதைத் தவிர்க்கலாம்.
எங்கே போய்க் குடியேறுவது என்று யோசித்தபோது, வெங்கட் சொன்ன மாதிரி குத்தம்பாக்கம் என்கிற மாடல் வில்லேஜ் ஒன்று சென்னையிலிருந்து இருபத்தெட்டே கிலோமீட்டர் தொலைவில் இருப்பதை ஒரு பத்திரிகைக் கட்டுரையில் படித்தது நினைவுக்கு வர, இதோ குத்தம்பாக்கத்தில் முன்னூறு ரூபாய்க்கு ஒரு வாடகை வீடு, ரெண்டு கட்டில்கள், ஒரு ரேடியோ, சில தட்டுமுட்டுச் சாமான்கள், அப்பா, அம்மா, நான், இந்த சைக்கிள்.
ஒன்பது வருஷ வியாபார வாழ்க்கையில் முடங்கிக்கிடந்த என்னுடைய கற்பனை வளத்தையும் படைப்புத்திறனையும் நீவிவிட்டு நிமிர்த்தலாம். கதைகள் கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பலாம். அவை பிரசுரமாகிறபோது கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கும். கொஞ்சம் பணமும்.
இந்த சிந்தனைகளோடு சைக்கிளை மிதித்து ஊர் வந்து சேர்ந்து, வீட்டை சமீபித்தபோது ஓர் அதிர்ச்சி.
வீட்டுக்கு முன்னால் ஒரு சிறு கும்பல்.
நோயாளிகளான அப்பாவையும் அம்மாவையும் தனியாய் விட்டுவிட்டுப் போயிருந்தேன்.
கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆச்சு. நான் இல்லாத நேரத்தில் என்ன அசம்பாவிதம் நடந்ததென்று தெரியவில்லையே!
சைக்கிளை, ஸ்டாண்ட் போடக்கூட பொறுமையில்லாமல் கீழே கிடத்திவிட்டு, கும்பல் விலகி வழிவிட, வீட்டுக்குள் புகுந்தேன்.