மனிதரில் எத்தனை நிறங்கள்! (65)

"Successful people aren’t born that way. They become successful by establishing
the habit of doing things unsuccessful people don’t like to do. The successful
people don’t always like these things themselves; they just get on and do them."

– William Makepeace Thackeray

பி.ஏ சைக்காலஜி பட்டத்தைப் பெற்றிருந்த ஆர்த்திக்கு அவன் அவள் பிரச்சினையை சொன்ன எளிய விதம் மனதிற்குள் பாராட்ட வைத்தது. தன் துறையில் உலகப் புகழ் பெற்ற அவன் எந்த கஷ்டமான சொல்லையும் உபயோகிக்காமல் ஒரு சாதாரண மனிதருக்கும் புரியும்படியாக சொல்கிறானென்றால் அது சாதாரண விஷயம் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. அவன் சொன்னதற்குத் தலையசைத்தாள்.

அவன் தொடர்ந்து சொன்னான். "……. அன்னைக்கு பயத்துல ஏத்துக்க முடியாமல் மனசுல புதைச்சுட்ட விஷயத்தை இப்ப வெளியே கொண்டு வந்து அந்த மனசோட காயத்தைக் குணப்படுத்த முடியும். அதுக்கு ஹிப்னாடிசம் செய்யலாம். ஆனா அதுவும் ஒரே சிட்டிங்ல முடியறது கஷ்டம் ஆர்த்தி. ஆழ்மனசோட இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் தான் விலகும். அதனால கொஞ்சம் கொஞ்சமா தான் நாம வெளியே கொண்டு வர முடியும். பல சிட்டிங்ஸ் தேவைப்படலாம்."

அவள் தலையசைத்தாள். அவள் முகத்தில் ஒருவித பயம் லேசாகப் படர்வதைக் கண்ட ப்ரசன்னா புன்னகையுடன் சொன்னான். "பயப்பட எதுவுமே இல்லை ஆர்த்தி. என் வார்த்தைல நீங்க தாராளமா நம்பிக்கை வைக்கலாம்"

அவன் சொன்ன விதம் அவள் முகத்தில் படர்ந்த மேகத்தை சிறிது போக்கியது. அவளும் புன்னகை செய்து தலையாட்டினாள்.

"ஆனா ஒரு விஷயத்தை நீங்க ஞாபகம் வச்சுக்கறது நல்லது ஆர்த்தி. உங்களை ஹிப்னாடிசம் செய்து பல உண்மைகளை நாம கண்டுபிடிக்கலாம். உங்க அம்மாவைக் கொன்னது யாருன்னு கூட கண்டுபிடிச்சுடலாம். ஆனா அவங்களை இதை வச்சு தண்டிக்க முடியாது. இன்னும் நம்ம நாட்டு சட்டத்துல இதை ஒரு நம்பத் தகுந்த ஆதாரமா ஏத்துக்க வழி இல்லை."

ஆர்த்தி மீண்டும் தலையசைத்தாள்.

"சட்டம் இந்த மாதிரி இருக்கறதால பெரும்பாலும் ஹிப்னாடிசம் செய்யறதை டேப்பில் ரிகார்டு செய்கிற பழக்கம் இங்கில்லை. வெளிநாட்டில் அதை செய்யறாங்க. இங்க பர்சனலா கேட்டுகிட்டா மாத்திரம் தான் அப்படி எடுத்து சி.டியா வைக்கறோம். இல்லாட்டி நாங்க எடுக்கறது நோட்ஸ் மட்டும் தான். ரிகார்டு பண்ணிகிட்டா நீங்க கூட பிற்பாடு கேட்டுக்கலாம். இல்லைன்னா என்னோட நோட்ஸ் மூலமா படிச்சுக்கலாம். உங்க விஷயத்துல என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?"

ஆர்த்தி சிறிது யோசித்து விட்டு சொன்னாள், "எதுக்கும் நான் வீட்டுல கேட்டுட்டு சொல்றேனே"

"நல்லது. நாம் அடுத்த புதன்கிழமை ஆரம்பிக்கலாம் ஆர்த்தி"

******

மூர்த்தி அந்த ரெஸ்டாரண்டில் சரியாக ஐந்தரை மணிக்கு நுழைந்தான். மொத்தமாக நாலைந்து பேர் தான் உள்ளே டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். கடைசி மேசை காலியாக இருந்தது. சென்று அமர்ந்து காத்திருந்தான். வரும் ஆள் எப்படி இருப்பான் என்று அறிய அவனுக்கு மிகவும் ஆவலாக இருந்தது. வரப்போகிறவனுடைய பெயர் தெரியாது, விலாசம் தெரியாது, எப்படி இருப்பான் என்று தெரியாது. மூர்த்தியின் ஆபிசில் வேலை செய்யும் நண்பனின் நண்பனுக்குத் தெரிந்தவனாம். பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் அந்த ரெஸ்டாரெண்டில் கடைசி மேசையில் சரியாக ஐந்து முப்பத்தைந்துக்கு சந்திப்பதாக அந்த ஆள் சொல்லி அனுப்பினான். ஒரு வேளை அந்தக் கடைசி மேசையில் யாராவது முன்பே இருந்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் உள்ளே வருவதற்கு சற்று முன் தான் மூர்த்திக்கு வந்தது. நல்ல வேளையாக அந்த மேசை காலியாகத் தான் இருந்தது.

அவன் நண்பன் சொல்லி இருந்தான். "லேட்டா மட்டும் போயிடாதே. அந்தப் பார்ட்டி வெய்ட் செய்யற டைப் இல்லை"

மூர்த்திக்கு இப்படி தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக் கொள்ளும் யாரையுமே பிடித்ததில்லை. ஆனால் வருபவன் தன் தொழிலில் இணையற்றவன் என்று பெயர் எடுத்தவன் என்று கேள்விப்பட்டு இருந்தான்.

சரியாக ஐந்து முப்பத்தைந்திற்கு உயரமான திடகாத்திரமான ஒருவன் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த அவன் மூர்த்தியின் மேசை நோக்கி வந்தான். நடையில் ஒரு உறுதி தெரிந்தது. வந்து மூர்த்தியின் எதிரே அவன் அமர்ந்தான். கைகளை மடித்து மேசையில் வைத்து லேசாக முன்னால் சாய்ந்து "மூர்த்தி?" என்று கேட்டான்.

கைகள் கராத்தே போன்ற கலைகளில் வல்லவனுடையதாக இருந்தது. ஜிம்மில் மணிக்கணக்கில் செலவு செய்து பழக்கப்பட்ட மூர்த்தி அவன் ஒரு அடியில் அடுத்தவனை பேச்சு மூச்சில்லாமல் கிடத்தி விட முடியும் என்பதை சுலபமாக கணித்தான். குரல் ஆழமாக இருந்தது. மூர்த்தி ஆமாம் என்று தலையாட்டினான்.

"விஷயத்தை சொல்லுங்க"

எடுத்தவுடன் அவன் இப்படிக் கேட்டவுடன் உடனையாக மூர்த்திக்கு பேச்சு வரவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு சொன்னான். "டாக்டர் ப்ரசன்னான்னு ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கோயமுத்தூர்ல இருக்கான். அவன் கிட்ட ஆர்த்தின்னு ஒரு பேஷண்ட் இன்னைக்குப் போயிருக்கா. அவன் அந்தப் பொண்ணை ஹிப்னாடைஸ் செய்து என்ன எல்லாம் கண்டு பிடிக்கிறான்னு தெரியணும்…"

சில வினாடிகள் பேசாமல் இருந்த அந்த நபர் பின் சொன்னான். "இன்னைக்குத்தான் முதல்ல போறாள்னா இன்னைக்கு ப்ரிலிமினரியா கேஸ் என்னன்னு தான் அந்த டாக்டர் கேட்பான். ஹிப்னாடிசம் எல்லாம் பிறகு ஒரு நாள் தான் இருக்கும். அது கூட பல நாளாய் இருக்கலாம். கடைசியா ஒரே நாள்ல போய் அந்த ஃபைலை அப்படியே கொண்டு வந்து குடுக்கணும்னா எனக்கு ரெண்டு லட்ச ரூபாய் வேணும். ஒவ்வொரு நாளும் போய் அன்னைய மேட்டர் கொண்டு வந்து தரணும்னா எக்ஸ்ட்ராவா ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் வேணும்."

மூர்த்தி இந்தத் தொகையை எதிர்பார்க்கவில்லை. சிரித்துக் கொண்டு சொன்னான். "உங்க ரேட்டைக் கேட்டா நான் அந்த டாக்டரையோ அந்தப் பொண்ணையோ கொலை செய்யச் சொன்னதுக்குக் கேக்கற மாதிரி இருக்கு. நான் கொலை செய்ய சொல்லலை."

"நான் எந்த வேலை செஞ்சாலும் அதுக்குத் தடயமே இருக்காது. அந்த டாக்டர் கிட்ட இருந்து அந்த ஃபைல் டீடெய்ல்ஸ் திருடிட்டு வந்தேன்னா நான் உள்ளே நுழைஞ்சு அதோட காப்பி எடுத்துருக்கேன்னே அந்த ஆள் கடைசி வரைக்கும் தெரிஞ்சுக்காத மாதிரி இருக்கும். அது தான் என் ஸ்பெஷாலிட்டி. அதனால தான் இந்த ஸ்பெஷல் ரேட்"

"ரேட்டை குறைச்சுக்கிட்டா நல்லாயிருக்கும்"

"நீங்க என் டைமை வேஸ்ட் செய்யறீங்க" அவன் எழுந்து கிளம்பத் தயாரானான்.

மூர்த்தி அவசர அவசரமாக அவனை மறுபடி உட்கார வைத்தான். பஞ்சவர்ணம் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முன்பே சொல்லி அனுப்பி இருந்தாள். இவனைப் பற்றி வேண்டிய அளவு கேள்விப்பட்டு இருக்கிறான். இது போல் ஒருவனை விட்டு விட்டால் பாட்டி தன்னை லேசில் விட மாட்டாள் என்று அவனுக்குப் பயமாய் இருந்தது "கோபிச்சுக்காதீங்க. சும்மா கேட்டேன். அவ்வளவு தான். ஓகே"

அவன் மறுபடி உட்கார்ந்தான். சர்வர் ஒருவன் வந்து என்ன வேண்டும் என்று கேட்டான். அந்த நபர் "எனக்கு காபி" என்று சொல்ல மூர்த்தி எனக்கும் தான் என்று சொன்னான். சர்வர் நகர்ந்தவுடன் மூர்த்தி "உங்க பேர்?" என்று கேட்டான்.

"அசோக்" அவன் பெயர் அதுவாக இருக்காது என்று மூர்த்திக்குத் தோன்றியது.

"நான் நீங்க சொன்ன ரெண்டில் எது செய்யணும்னு பிறகு சொல்றேன். உங்க செல் நம்பர்"

"நானே உங்களைக் கூப்பிடறேன்"

மூர்த்திக்கு லேசாக எரிச்சல் வந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சொன்னான். "சரி என் செல் நம்பரை நோட் செய்துக்கோங்க"

"தேவையில்லை. உங்க நம்பர் தெரியும்" என்றவன் வேகமாக மூர்த்தியின் செல் நம்பரைச் சொன்னான்.

"நாளைக்கு நான் உங்களுக்கு போன் செய்யறேன். மொத்தமா தெரிஞ்சுக்கணுமா, அப்பப்ப தெரிஞ்சுக்கணுமான்னு சொல்லுங்க. அட்வான்சா எனக்கு ஒரு லட்ச ரூபாய் வேணும். எங்கே எப்ப தரணும்னு நாளைக்கு பேசறப்ப சொல்றேன்"

மூர்த்தி மெல்ல தலையாட்டினான்.

காபி வந்தது. இருவரும் மௌனமாக காபி குடித்தார்கள். காபி குடித்தவுடன் அவன் சொன்னான். "நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு போன் செய்யறேன். அதுக்குள்ளே தீர்மானிச்சு வைங்க. பணத்தையும் ரெடி செய்யுங்க"

அவன் எழுந்து போய் விட்டான். மூர்த்தி பில்லைக் கொடுத்து விட்டு வெளியே வந்த போது அவன் மனதில் லேசாக பயம் குடி கொண்டிருந்தது. அசோக் என்ற அந்த மர்ம மனிதன் அவன் மனதில் அந்த பயத்தைக் கிளப்பி இருந்தான்.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. gayathri

    னிcஎ டொ ரெஅட்.எ௯ப்லைன்ச் ப்க்ய்ச்cஒலொக்ய் இன சிம்ப்லெ நய்

Comments are closed.