மனிதரில் எத்தனை நிறங்கள்! (63)

Not so sick, my lord,
As she is troubled with thick-coming fancies,
That keep her from her rest.
– Shakespeare in ‘Macbeth’

ஆர்த்தி அந்தக் காரைப் பார்த்தபடி தயங்கி நிற்பதைக் கண்ட ஆகாஷ் கேட்டான். "என்ன?"

ஆர்த்தி சொன்னாள். "என்னை யாரோ அந்தக் கார்ல இருந்து பார்க்கிற மாதிரி தோணுது….."

ஆகாஷ் எரிச்சலுடன் சொன்னான். "எங்கம்மா தான் அதுக்குள்ளே உட்கார்ந்து உன்னைப் பார்க்கிறாங்க"

அவன் ஓங்கி அறைந்தது போல அவள் துவண்டு போனாள். அவன் கோபத்துடன் டாக்டர் ப்ரசன்னாவின் க்ளினிக் உள்ளே செல்ல, அவள் வேறு வழியில்லாமல் பின்னால் திரும்பி அந்தக் காரை ஒரு முறை பார்த்து விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

உள்ளே ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்த இளம் பெண் ஆகாஷைப் பார்த்ததும் ஆயிரம் வாட்ஸ் பல்பாகப் புன்னகைத்தாள். "ஹலோ"

அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை. ஆகாஷிடம் கொஞ்சும் குரலில் சொன்னாள். "உட்காருங்க ஆகாஷ். டாக்டர் வேறொரு பேஷண்டைப் பார்த்துட்டு இருக்கார். அஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவார்…."

இருவரும் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள். ஆகாஷ் நண்பனைப் பார்க்க பல முறை வந்திருக்க வேண்டும், அதனால் அவனை இந்த ரிசப்ஷனிஸ்ட் அறிந்து வைத்திருக்கிறாள் என்று ஆர்த்தி அனுமானித்தாள். ஆகாஷுக்கு ஆர்த்தியிடம் சற்று முன் காரணமில்லாமல் கடுமையாக நடந்து கொண்டோமோ என்ற சந்தேகம் வந்து உறுத்தியது. ஆர்த்தி பாண்டிச்சேரியில் கேண்டீனில் கூட இன்று போல் தன்னைக் கண்காணிப்பதாக சொல்லி அது சரியாகவும் இருந்தது நினைவுக்கு வந்தது. இன்றும் அது போல் நிஜமாகவே அவளை யாரோ கண்காணிக்கிறார்களோ?

ஆகாஷ் உடனடியாக வெளியே சென்று பார்த்தான். அந்தக் கார் அங்கு இல்லை. மறுபடி வந்து உட்கார்ந்தவன் அங்கிருந்த வாரப் பத்திரிக்கையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். அந்தக் கார் அங்கே இல்லை என்று அவளிடம் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்லவில்லை.

இரண்டு நிமிடங்கள் கழித்து டாக்டர் ப்ரசன்னாவின் அறையில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வெளியே வர, ரிசப்ஷனிஸ்ட் "ஆகாஷ் நீங்கள் போகலாம்" என்றாள்.

ஆகாஷைப் பின்தொடர்ந்த ஆர்த்திக்கு உள்ளே செல்கையில் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

டாக்டர் ப்ரசன்னா ஒரு காலேஜ் வாலிபன் போல மிகவும் இளமையாகத் தெரிந்தான். அவன் அணிந்திருந்த தங்க ப்ரேமிட்ட மூக்குக் கண்ணாடி அவனுக்கு ஒரு கம்பீரத்தைத் தந்தது. ஆகாஷைப் பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக தன் இருக்கையை விட்டு வந்து கை கொடுத்து விட்டு அணைத்துக் கொண்டான். "எப்படிடா இருக்கே?"

"ஃபைன். ப்ரசன்னா, இது என் கசின் ஆர்த்தி"

ப்ரசன்னா நட்பாகப் புன்னகைத்தான். "ஹாய் ஆர்த்தி…. உட்காருங்க"

அவர்கள் உட்கார்ந்தார்கள். தன் இருக்கையில் அமர்ந்தபடி ப்ரசன்னா கேட்டான். "உன்னோட ஓல்டு மேன் எப்படியிருக்கார். தேவனோட கதைகளைப் படிக்கறதுல கின்னஸ் ரிக்கார்டு ஏற்படுத்தி இருப்பாரே"

ஆகாஷ் சிரித்தான். கடுகடுவென்று இருந்த முகம் ப்ரசன்னாவிடம் பேசும் போது முற்றிலுமாக மாறியது. "இன்னும் படிச்சுட்டு இருக்கார்."

"அயர்ன் லேடி எப்படி இருக்காங்க?"

"அம்மா வழக்கம் போல தான் இருக்காங்க. பிசினஸ்… பிசினஸ்…பிசினஸ்" தாயைப் பற்றிப் பேசும் போது ஆகாஷால் ஆர்த்தியை ஒருகணம் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் முகத்தின் கடுகடுப்பு ஒரு கணம் தோன்றி மறைந்தது. ஆர்த்தி அவன் பார்வையின் உஷ்ணம் தாளாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். ஐந்து நிமிடங்கள் நண்பர்கள் இருவரும் தங்கள் நண்பர்களைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

கடைசியில் ப்ரசன்னா ஆர்த்தி பக்கம் திரும்பினான். உடனே ஆகாஷ் ஆர்த்தியின் பிரச்சினை என்ன என்று சொல்ல முற்பட்ட போது புன்னகையுடன் தடுத்தான் ப்ரசன்னா. "நான் ஆர்த்திகிட்டயே கேட்டுக்கறேன் ஆகாஷ்…… நீ வெளியே வெய்ட் செய்யறதானா செய். இல்லை, வேற ஏதாவது வேலை இருந்தா அதை முடிச்சுட்டு வா."

ஆகாஷ் ஆர்த்தியைப் பார்த்தான். ஆர்த்தி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். ஒரு கணம் அவனுடைய கோபம் எல்லாம் காற்றாய்ப் பறந்து மனது இளகியது. தைரியமாக இரு என்பது போல அவளைப் பார்த்துத் தலையசைத்து விட்டு எழுந்தான். அவனுக்கு அந்த ரிசப்ஷனிஸ்ட் பார்வையில் காத்திருக்கப் பிடிக்கவில்லை. "எனக்கு இங்கத்து ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. அதனால அங்கே போயிட்டு வர்றேன். எப்ப வரட்டும்."

"ஒரு மணி நேரம் கழிச்சு வாயேன்"

ஆகாஷை கதவு வரை வந்து வெளியனுப்பிய ப்ரசன்னா கதவருகே நண்பனிடம் மெல்லிய குரலில் கேட்டான். "என்னடா லவ்வா?"

ஆகாஷ் சில வினாடிகள் பேச்சிழந்து நின்றான். பின் பல்லைக் கடித்துக் கொண்டு நண்பனிடம் மறுக்க முற்பட்ட ஆகாஷை ப்ரசன்னா பேச விடவில்லை. சத்தமாக "போயிட்டு வா. ஆகாஷ். பை" என்று சிரித்தபடியே சொன்னான். ப்ரசன்னாவை முறைத்து விட்டு ஆகாஷ் போனான்.

திரும்பவும் வந்து தன் இருக்கையில் அமர்ந்த ப்ரசன்னா ஆர்த்தியைப் பார்த்து புன்னகையுடன் கேட்டான்.

"ஆர்த்தி, என்னை ஒரு டாக்டராய் மட்டுமல்லாமல் ஒரு நல்ல ஃப்ரண்டாவும் உங்களால் நினைச்சுக்க முடியுமா?"

ப்ரசன்னாவைப் பற்றி சந்திரசேகர் மிகவும் உயர்வாகச் சொல்லி இருந்தார். தன் துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி உலகப் புகழ் பெற்றவன் என்றும், அவனிடம் ஒரு அப்பாயின்மென்ட் வாங்கவே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருந்தார். அப்படிப்பட்டவன் எந்த பந்தாவும் இல்லாமல் தன்னிடம் இப்படிக் கேட்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது வரை அவள் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்த பயம் போய் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. தலையசைத்தாள்.

"தட்ஸ் குட்." என்றவன் தன் செல் போனை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு ஆர்த்தியிடம் சொன்னான். "ஆகாஷ் உங்களை ஏதோ ஒரு பயங்கரக் கனவு அடிக்கடி வந்து தொந்தரவு செய்யுதுன்னு மட்டும் சொல்லி இருந்தான். விவரமா உங்கள் வாயாலேயே கேட்கணும்னு நான் அவன் கிட்ட வேற எதுவுமே கேட்கலை. முதல்ல அந்தக் கனவைப் பத்தி விவரமா என் கிட்ட சொல்லுங்க."

ஆர்த்திக்கு அந்தக் கனவைப் பற்றி நினைக்கையிலேயே ஒருவித பீதி லேசாக எழுந்தது. வார்த்தைகள் வாயில் இருந்து வர மறுத்தன.

ப்ரசன்னா அமைதியாகக் கேட்டான். "அந்தக் கனவைப் பத்தி இது வரைக்கும் யார் கிட்ட எல்லாம் விவரமா சொல்லி இருக்கீங்க?"

ஆர்த்தி மெல்ல சொன்னாள். "சின்ன வயசுல தாத்தா பாட்டி கிட்ட சொல்லி இருக்கேன். அப்ப ஒரு டாக்டர் கிட்ட கூட சொல்லி இருக்கேன். அந்த மூணு பேர் தவிர வேற யார் கிட்டயும் சொன்னதில்லை"

"சரி. இப்ப நாலாவது தடவையா உங்க ஃப்ரண்ட் கிட்ட சொல்றீங்க. தைரியமா இருங்க. இது வரைக்கும் அந்தக் கனவை நீங்க தனியா தான் சந்திச்சிருக்கீங்க. இனிமே உங்க ஃப்ரண்டோட சேர்ந்து சந்திக்கப் போறீங்க. ஓகே. ஆரம்பியுங்க…."

அந்த வார்த்தைகளை அவன் சொன்ன விதம் தைரியமூட்டுவதாக இருந்தது. தயக்கத்துடன் அந்தக் கனவைப் பற்றி அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

(தொடரும்)

About The Author