The foot less prompt to meet the morning dew,
The heart less bounding at emotion new,
And hope, once crushed, less quick to spring again.
-Matthew Arnold ‘Thyrsis’ (1866)
மூர்த்தி போன பின் நிறைய நேரம் ஆர்த்தி குழப்பத்தில் அமர்ந்திருந்தாள். சிவகாமி மீது அவள் தந்தை உயிரையே வைத்திருந்தார் என்று சந்திரசேகர் சொல்லி இருந்தார். ஆனால் மூர்த்தியோ அவர் மகள் மீது கடைசியில் சந்தேகப்பட்டு சொத்தையே மாற்றி எழுதியதாகச் சொல்கிறான். இதில் எது உண்மை. சிவகாமியைப் பொறுத்த வரை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தான் காதில் விழுகிறது. ஆரம்பத்தில் இருந்து இப்படித் தான் நடக்கிறது….
பார்வதி பேத்தி அறைக்குள் நுழைந்த போது பேத்தியின் சோர்வைக் கண்டு பயப்பட்டாள். நாளை டாக்டரிடம் போகும் இந்த நேரத்தில் இப்போது என்ன புதிதாக ஒரு மாற்றம்?
"என்ன ஆச்சு ஆர்த்தி?"
ஆர்த்தி மூர்த்தி சொன்னதை எல்லாம் சொன்னாள். ஆகாஷ் டேவிட் மகள் லிசாவைக் காதலித்து விட்டுப் பின் கைவிட்டதாக மூர்த்தி சொன்னதைச் சொன்ன போது அவள் முகத்தில் வேதனை தெரிந்தது. பார்வதி உடனடியாகச் சொன்னாள். "அந்த தடியன் பொய் சொல்றான். ஆகாஷ் அப்படிப்பட்டவன் அல்ல"
"அவர் ஏன் பொய் சொல்லணும் பாட்டி?’
"சில பேருக்கு ஒரு நாளைக்கு இத்தனை பொய் சொல்லணும்னு ஒரு வேண்டுதல் இருக்கும். அத்தனை பொய் சொல்லாட்டா தலை வெடிச்சிடும்."
பாட்டியின் பேச்சு ஆர்த்திக்கு லேசாகப் புன்னகையை வர வைத்தது. சொத்து விஷயத்தைப் பற்றி அவன் சொன்னதையும் ஆர்த்தி சொன்னாள்.
பார்வதி உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை. பின் மெள்ள சொன்னாள். "சொத்தை மகன் பேரில் எழுதாமல் எத்தனையோ பேர் பேரன் பேத்திக்கு எழுதறாங்க…."
"ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கணுமே பாட்டி"
"அந்த மனுஷர் உங்கப்பா கல்யாணத்திற்கு முன்னேயே போய் சேர்ந்துட்டார். அவர் மனசுல என்ன நினைச்சார்னு நமக்கு என்னம்மா தெரியும்"
அந்த நேரமாகப் பார்த்து டேவிட் மேரி தம்பதியர் உள்ளே நுழைந்தார்கள். டேவிட் கேட்டார். "என்னம்மா, யாரை உங்கப்பா கல்யாணத்துக்கு முன்னேயே போய் சேர்ந்துட்டார்னு சொல்றீங்க"
"இவங்கப்பாவோட அப்பாவை"
"சின்னக்கா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துல இறந்தார். அவர் மனசுல என்ன நினைச்சுட்டு இருந்தார்னா கேட்டீங்க. தன்னை ஒரு மகாராஜான்னு நினைச்சுட்டு இருந்தார். எதிர்த்துப் பேசினாலும் சரி எதிரா நடந்துட்டாலும் சரி மனுஷன் விரோதியா தான் பார்ப்பார். முடிஞ்ச அளவு கெடுதல் செய்வார். பெரியக்கா ஒருத்தருக்குத் தான் கட்டுப்படுவார். அவங்களுக்கு ஒண்ணுன்னா மனுஷன் தாங்க மாட்டார். வேற யாருமே அவருக்கு ஒரு பொருட்டில்லை. சாகற வரைக்கும் அப்படித்தான்."
ஆர்த்தியும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மூர்த்தி சொன்னதற்கும் இவர் சொல்வதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றியது.
"சாகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் என் கிட்ட கேட்டார். ‘ஃபுல் ஸ்டாப்பே இல்லாம பேசற உன் நாக்கை இழுத்து வச்சு அறுத்தா என்ன’ன்னு. அப்ப தலை தெறிக்க ஓடுனவன் அவர் செத்துட்டதா ஒரு ஆளுக்கு ரெண்டு ஆளு சொன்னதுக்கப்புறம் தான் சாவுக்கே வந்தேன்…"
பார்வதி வாய் விட்டுச் சிரித்தாள்.
டேவிட் அடுத்த விஷயத்திற்கு உடனடியாக வந்தார். "நாங்க எங்க மகள் வீட்டுக்குப் போய் இருந்தோம். முழுகாம இருக்கிறாள்னு போன் வந்த பிறகு அவளைப் பார்க்கணும்னு ரெண்டு பேருக்கும் தோணுச்சு. போயிட்டு நேத்து தான் வந்தோம். நேத்து ராத்திரி தான் சந்துரு போனில் உன் கனவு பத்தி சொன்னான். டாக்டர் ப்ரசன்னா கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கறதா சொன்னான். நல்ல டாக்டர். சின்னதுல ஆகாஷ் கூட சுத்திகிட்டு இருந்த பயல். இன்னைக்கு அவன் தான் இந்த ஃபீல்டுல லீடிங். பயப்படாதே. எல்லாம் சரியாயிடும். ஆமா அந்தக் கனவுல என்ன தான் வருது….."
ஆர்த்தி என்ன சொல்வது என்று யோசிப்பதற்குள் பார்வதி சொன்னாள். "அதைப் பத்தி ட்ரீட்மென்ட் முடியற வரைக்கும் யார் கிட்டயும் டிஸ்கஷன் செய்ய வேண்டாம்னு சிவகாமி சொல்றாள்…."
"அக்கா சொன்னதுலயும் அர்த்தம் இருக்கு. என்னவா இருந்தா என்ன நமக்கு, குணமானா சரி. ஆர்த்தி, உங்கப்பா உன் மேல உசிரையே வச்சிருக்கான். நேத்து போன்ல பேசுனப்ப அழற மாதிரி ஆயிட்டான்…."
ஆர்த்தி புன்னகைத்து விட்டு பேச்சை மாற்றினாள். "உங்க மகள் எப்படி இருக்காங்க"
"நல்லா இருக்கா ஆர்த்தி"
"எப்ப இங்கே வருவாங்க?"
"அவள் கல்யாணம் ஆன பிறகு ஒரு கிறிஸ்துமஸுக்கு வந்து ஒரு நாள் இருந்துட்டு போனவள் பிறகு வரவேயில்லை. அந்த முதல் கிறிஸ்துமஸுக்குக் கூட அவளைக் கட்டாயப்படுத்தி தான் கூட்டிகிட்டு வந்தோம். பார்க்கணும்னா நாங்க தான் போகணும்…" டேவிட் சொல்ல சொல்ல மேரி முகம் மாறியது. ‘இதை எல்லாம் ஏன் சொல்றீங்க?’ என்பது போல கணவனைப் பார்க்க டேவிட் உதட்டைக் கடித்துக் கொண்டார்.
"ஏன் அவள் வர்றதில்லை" என்று பார்வதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
ஒரு நிமிடம் கணவனும் மனைவியும் ஒன்றும் சொல்லவில்லை. மேரியின் முகத்தில் சோகம் படர்ந்தது. "இந்தக் காலத்துக் குழந்தைகள் வேற எதையும் கத்துக்கறாங்களோ இல்லையோ, பிடிவாதத்தை மட்டும் நல்லா கத்துக்கறாங்க. காரணமே தேவையில்லை…"
பார்வதியும் ஆர்த்தியும் அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை.
மேரி அந்த அறை மேசையில் அடுக்கி வைத்திருந்த டைரிகளை வெறித்துப் பார்த்தாள். "இது ஆனந்தியோட டைரிகளா?"
"ஆமாம். அம்மா எண்ணங்கள் எப்படி இருந்ததுன்னு புரிஞ்சுக்க இந்த டைரிகள் ரொம்பவே உதவியாய் இருந்தது" என்று ஆர்த்தி சொன்னாள்.
"எல்லா டைரியும் படிச்சுட்டியா?" மேரியின் முகத்தில் திகைப்பு தெரிந்தது.
"இருந்தது எல்லாம் படிச்சுட்டேன். உங்களைப் பத்தி கூட ரொம்ப புகழ்ந்து எழுதி இருக்காங்க"
மேரி லேசாகக் கண் கலங்கினாள். "எனக்கு அவள் போன பிறகு அந்த அளவுக்கு நெருக்கமான ஒரு தோழி கிடைக்கலை…..அது சரி இருந்தது எல்லாம்னு சொல்றியே, எல்லா டைரியும் கிடைக்கலையா?"
"கடைசி ரெண்டு வருஷத்து டைரி கிடைக்கலை"
மேரி கணவனை அர்த்தத்துடன் பார்த்தாள். டேவிட் அந்த டைரிகளையே பார்த்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் நின்றார். பழைய நினைவுகள் வெள்ளமாகத் திரண்டு வந்து மனதைப் பாடாய்ப் படுத்தின. மனதில் குற்றவுணர்ச்சி லேசாக உறுத்தியது. அவர் நினைத்திருந்தால் அந்தப் பழைய நிகழ்வுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால்…. ஆனால்….
(தொடரும்)
“
கதை அருமையா போகுது. தொடரட்டும்.
ஆசிரியருக்கு வாழ்த்துகல்!
அடுத்த வாரம் எப்பொது வரும் என்னும் ஆவல் அதிகம் உள்ளது.மிக நல்ல த்ரில்லெர்.தயவு செய்து சீக்கிரம் தொடரை முடித்து விட வேண்டாம். நன்றி.