Who never doubted, never half believed.
Where doubt is, there truth is—it is her
shadow.
— Philip James Bailey
ஆர்த்தியைப் பின் தொடர்வது யாராக இருக்கும் என்று பஞ்சவர்ணம் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த அதே வேளையில் நீலகண்டனும், பார்வதியும் ஆர்த்தியின் அறையில் இருந்து கொண்டு பல்வேறு கோணங்களில் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தெளிவாக எந்த முடிவுக்கும் அவர்களால் வர முடியவில்லை. கடைசியில் யாராவது தொடர்வது உண்மை தானா, இல்லை அது ஆர்த்தியின் பிரமை தானா என்று கூட அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை.
கடைசியில் ஆர்த்தி ப்ரசன்னா ஹிப்னாடிசம் செய்வதை டேப் செய்து வைத்துக் கொள்வதா, இல்லை நோட்ஸ் எடுத்துக் கொண்டால் போதுமா அன்று தன்னைக் கேட்டதை அவர்களிடம் சொன்னாள்.
நீலகண்டன் உறுதியாகச் சொன்னார். "டேப் செய்துக்கறது தான் நல்லது. இவங்க வெளியே வர்ற உண்மையை நம்ம கிட்ட மறைச்சாலும் மறைச்சுடுவாங்க."
பார்வதி சொன்னாள். "அதை நாம எப்படி சொல்ல முடியும். இவங்கப்பா என்ன சொல்றாரோ"
"இவங்க அப்பா எப்ப சொந்தமா முடிவெடுத்திருக்கார். அக்கா சொல்ற முடிவு தான் அவரோடதா இருக்கும். அந்த மகராசி டேப் செய்யறதெல்லாம் என்னத்துக்குன்னு சொல்வாள். வேணும்னா பார்த்துக்கோயேன்"
+++++++++++
ஆர்த்தி மறுநாள் காலை கீழே ஹாலுக்கு வந்த போது சிவகாமி வாக்கிங் போய் விட்டுத் திரும்ப வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். மருமகளைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள். "குட் மார்னிங் ஆர்த்தி".
"குட் மார்னிங் அத்தை"
‘என்னுடன் வா’ என்று சைகை காட்டி விட்டு தனதறைக்கு சிவகாமி செல்ல ஆர்த்தி ஒருவித படபடப்புடன் அத்தையைப் பின் தொடர்ந்தாள்.
சிவகாமியின் அறை மிக அழகாக இருந்தது. எல்லாவற்றையும் மிக அழகாகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தாள். அறையில் மூன்றே மூன்று புகைப்படங்கள் இருந்தன. ஒன்றில் அவள், அவள் கணவன், ஆகாஷ் இருந்தார்கள். அது சமீபத்திய புகைப்படமாக இருந்தது. இன்னொன்றில் அவள், அமிர்தம், சந்திரசேகர் மூவரும் இருந்தார்கள். அது சுமார் நாற்பது வருடங்களுக்கு முந்தைய புகைப்படம். மூன்றாவதில் சிவகாமியும் அவள் தந்தையும் நின்றிருந்தார்கள். அதுவும் கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
தாத்தாவின் புகைப்படம் பெரியதாக ஹாலிலும், சிறியதாக அப்பாவின் அறையிலும் கூட இருக்கிறது என்றாலும் அதிலெல்லாம் அவர் முகம் சற்று கடுமையாக காணப்பட்டது. ஆனால் சிவகாமியுடன் இருக்கும் இந்தப் படத்தில் அவர் முகத்தில் சிறு புன்னகை இருந்தது. ஆர்த்தி அந்த மாற்றத்தைத் தன்னை மறந்து சுவாரசியத்துடன் கவனித்தாள்.
"என்ன ஆர்த்தி அந்த ஃபோட்டோவை அப்படிப் பார்க்கிறாய்?"
ஆர்த்தி தயக்கத்துடன் தான் கண்ட அந்த வித்தியாசத்தை சொன்னாள்.
சிவகாமி ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் அவளையே கூர்ந்து பார்த்தாள். மருமகள் கவனிப்பதில் புத்திசாலியாக இருக்கிறாள் என்று எண்ணியவள் புன்னகையுடன் தந்தையைப் பற்றி சொன்னாள். "மனுஷன் எப்பவுமே கடுகடுன்னு தான் இருப்பார். பெருசா காரணம் எதுவும் இருந்த மாதிரி தெரியலை. அவர் சுபாவமே அப்படித்தான்."
"பாட்டி ஃபோட்டா எதுவும் இல்லையா?"
"ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சுடும்னு நினைச்ச காலம் அது. அதனால அவ எடுக்கலை. அவ உயிரோட இருக்கற வரை எங்களையும் ஃபோட்டோ எடுத்துக்க விடலை. ஆனாலும் சீக்கிரமே போய் சேர்ந்துட்டா. பார்க்க கிட்டத்தட்ட அமிர்தம் மாதிரி இருப்பா….." சிவகாமி தன் தாயின் நினைவுகளில் சில வினாடிகள் சஞ்சரித்து விட்டு திடீரென்று கேட்டாள். "அதுசரி டாக்டர் என்ன சொன்னார்?"
ஆர்த்திக்கு அவள் திடுதிப்பென்று பேசிக் கொண்டிருந்ததை வெட்டி விட்டு இப்படிக் கேட்டவுடன் என்ன சொல்வதென்று ஒரு கணம் புரியவில்லை. பின் சுதாரித்துக் கொண்டு சொன்னாள். "நான் சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டார். அடுத்த புதன் கிழமையில் இருந்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னு சொன்னார்"
"எப்படி ட்ரீட்மெண்ட் செய்யப் போறார்னு சொன்னாரா?"
"ஹிப்னாடிசம் செய்யறதா சொன்னார்"
சிவகாமி சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். முன்பே அறிந்திருந்தாலும் அந்தத் தகவல் அவளை ஏதோ விதத்தில் பாதித்ததாக ஆர்த்திக்குத் தோன்றியது. ஆனால் சிவகாமி பேசிய போது அந்த பாதிப்பின் சாயல் இல்லை. "என்ன வேணுமோ அதைச் செய்யட்டும். உனக்கு குணமானா சரி"
"அந்த ஹிப்னாடிசம் செய்யற செஷனை டேப்பில் ரெகார்டு செய்யணுமா, இல்லை நோட்ஸ் எடுத்துகிட்டா போதுமான்னு கேட்டார். நாமளா கேட்டுகிட்டா மட்டும் தான் டேப்பில் ரெகார்டு செய்வாங்களாம். என்னை என்ன செய்யலாம்னு கேட்டார். நான் வீட்டில் கேட்டு சொல்றதா சொன்னேன்"
சிவகாமி மருமகளைக் கூர்மையாகப் பார்த்தாள். ஆர்த்திக்கு நீலகண்டன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் சொன்னபடி டேப் செய்ய வேண்டாம் என்று சொல்வாளா, செய்யலாம் என்று சொல்வாளா என்று யோசித்தபடி அத்தையின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
"இதுல வீட்டுல கேட்க என்ன இருக்கு. உனக்கு எது நல்லதுன்னு தோணுதோ அதை அங்கேயே சொல்லி இருக்கலாமே"
ஆர்த்தி அசந்து போனாள். இந்த அத்தையை கணிக்கவே முடிய மாட்டேன்கிறதே!
"அவர் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை….."
"ஆர்த்தி எப்பவுமே உன் விஷயத்தில் நீயே முடிவெடுக்கப் பழகறது நல்லது. நீ எடுக்கற ஒருசில முடிவுகள் தப்பாக் கூட இருக்கலாம். ஆனா அது கூட ஒரு பாடம் தான். அடுத்து எடுக்கற முடிவுகள் சரியா இருக்க அது உதவும். ஆனா முடிவை எப்பவுமே அடுத்தவங்களை எடுக்க விடறப்ப நாம பல நேரங்கள்ல அதுக்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்த டேப் எடுக்கற விஷயம் பெரிய விஷயம் இல்லை. அதில் நீ என்ன சொன்னாலும் பாதிக்க எதுவும் இல்லை….நான் சொன்னது வாழ்க்கைல முக்கியமான முடிவுகள் பத்தி…."
ஆர்த்தி தலையசைத்தாள். அவள் சொன்னது அர்த்தமுள்ளதாக இருந்தாலும், இந்த வீட்டில் எல்லா முக்கியமான முடிவுகளையும் தானே எடுக்கக்கூடிய ஒருத்தியிடமிருந்து இந்த அறிவுரை வருவது ஆர்த்திக்கு வேடிக்கையாக இருந்தது.
அந்த நேரமாய் சிவகாமியின் செல்போன் இசைக்க மருமகளிடம் தலையாட்டி விட்டு செல்போனைக் கையில் எடுத்தாள். "ஹலோ"
ஆர்த்தி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
"ஹலோ சிவகாமி நான் தேசிகாச்சாரி பேசறேன்மா"
தேசிகாச்சாரி அவர்கள் குடும்ப வக்கீல். சிவகாமியின் தந்தை காலத்து ஆள்.
"சொல்லுங்க சார்"
"உன் தம்பி மகள் வந்துட்டாள்னு நீ தெரிவிச்சதா ஆபிசில் சொன்னாங்க. வாஸ்தவமா?"
"ஆமா சார்"
"நான் அவளைப் பார்த்துப் பேசணுமே"
"நான் அவளை அங்கே அனுப்பட்டுமா, இல்லை நீங்க இங்கே வர்றீங்களா?"
"நானே வர்றேன். நாளைக்குக் காலைல பதினோரு மணிக்கு வீட்டுக்கு வர்றேன்மா. அவளை வீட்டுலயே இருக்கச் சொல்லும்மா."
அவர் போனை வைத்து விட்டார். காலை பதினோரு மணி என்றால் அவளோ, சந்திரசேகரோ வீட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் தான் பெரியவர் அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதில் சிவகாமிக்கு சந்தேகமில்லை. சிவகாமி முகத்தில் லேசாக புன்முறுவல் அரும்பியது. நிறைய நேரம் தன் தந்தையின் புகைப்படத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளுடைய தந்தையும் அந்த அபூர்வ புன்னகையுடன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
(தொடரும்)