முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே!
-பாரதியார்.
காரில் ஊட்டிக்குத் திரும்பிய போதும் ஆகாஷ் ஆர்த்தியிடம் ஒன்றும் பேசவில்லை. ஆர்த்தியிடம் பேசி முடித்து வெளியே வந்த பின் ப்ரசன்னா அடுத்த புதன்கிழமை சிகிச்சை ஆரம்பிக்கலாம் என்று சொன்னானே ஒழிய ஆர்த்தியின் கேஸைப் பற்றி வேறெதுவும் ஆகாஷிடம் சொல்லவில்லை. ஒரு டாக்டராக அவன் எல்லாவற்றையும் நண்பனிடம் கூட சொல்லக் கூடாதென்றாலும் பொதுவாகக் கூட எதையும் சொல்லாதது ஆகாஷிற்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் ஆகாஷாக எதையும் கேட்கப் போகவில்லை. அவனிடம் ஏதாவது பேசி அவன் கேட்ட "என்னடா லவ்வா" என்ற கேள்விக்கு மறுத்து அலட்சியமாய் பதில் சொல்ல ஆகாஷ் நினைத்ததும் நடக்கவில்லை. இன்னொரு இளைஞன் ப்ரசன்னா அறைக்குள் நுழையக் காத்திருந்ததால் ப்ரசன்னா புன்னகையுடன் தலையசைத்து விட்டு உள்ளே போய் விட்டான்.
ஆர்த்தி ப்ரசன்னாவின் அறையில் இருந்து வெளியே வந்த பிறகு சிறிது தெளிவு அடைந்திருப்பது போல ஆகாஷிற்குத் தோன்றியது. காரில் ஏறியவுடன் ஆர்த்தி சொன்னாள். "டாக்டர் ரொம்ப நல்லவராய் தெரியறார்."
ஆகாஷ் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். "எங்கம்மாவைத் தவிர உலகத்தில் உனக்கு எல்லாரும் நல்லவங்க தான்".
அவன் பேசும் மனநிலையில் இல்லை என்று புரிந்த போது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இது நிறைய நாட்களாகவே நடப்பது தான் என்றாலும் இன்றும் அது புதிதாக வலிக்க வைத்தது.
தங்கள் இடையே நிலவிய அந்த மௌனத்தின் நாராசத்தை விரட்ட ஆகாஷ் காரில் பாட்டை முடுக்கி விட்டான். அதிலும் இனிமையான காதல் பாட்டுகளே வந்தது அவனுள் ஒருவித எரிச்சலைக் கிளப்பியது. ஆனாலதை மாற்ற அவன் முயற்சிக்கவில்லை.
இரவு நேரமாக இருந்ததால் மேட்டுப்பாளையம் தாண்டி பாதையில் அதிக போக்குவரத்து இருக்கவில்லை. ஆர்த்திக்கு களைப்பாக இருந்தது. அப்படியே தூங்கிப் போனாள். எதிரே வந்த வாகனங்களின் ஹெட் லைட் வெளிச்சத்தில் அசந்து தூங்கும் அவள் தேவதை போல் தெரிந்தாள். தான் அவளைப் பார்ப்பது அவள் உட்பட யாருக்கும் தெரியாது என்பதால் அவளை அடிக்கடி பார்த்தான். குழந்தை போல் நிஷ்களங்கமாய் தூங்கும் அவள் மீது அவனால் அந்தக் கணம் கோபம் கொள்ள முடியவில்லை.
அந்த நேரமாகப் பார்த்து காரில் பாட்டு ஒலித்தது.
"கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு…."
அவளுடைய நீளமான கூந்தலை அவன் ரசித்துப் பார்த்தான். பாப் வெட்டிக் கொள்ளும் இந்தக் காலத்தில் இவ்வளவு அழகான நீண்ட கூந்தலை அவன் அதிகம் பார்த்ததில்லை. அதுவும் அழகான ஒரு பெண்ணிடம் பார்த்ததே இல்லை. அதுவும் இப்போதெல்லாம் அவள் அழகு கூடிக் கொண்டே வருகிறது…….
ஆகாஷுக்கு இப்படியெல்லாம் எண்ணும் தன் மீதே கோபம் வந்தது. என்ன மனசு இது என்று நொந்து கொண்டான். இத்தனை காலம் கட்டுப்பாட்டோடு இருந்த மனம் இவளை சந்தித்த பிறகு சுதந்திரம் வாங்கிக் கொண்டு தன்னிஷ்டத்துக்கு இயங்க ஆரம்பித்து விட்டதை அவனால் சகிக்க முடியவில்லை. அவளை அடிக்கடி பார்ப்பதை நிறுத்தி கஷ்டப்பட்டு கவனத்தைத் திருப்பினான்.
+++++++++++++++++++++
பஞ்சவர்ணத்திடம் மூர்த்தி அசோக் சந்திப்பை ஒப்பித்து விட்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவள் பேரன் வர்ணனையில் அந்த அசோக்கை மனதில் ஓரளவு நிர்ணயித்திருந்தாள். கேள்விப்பட்டதெல்லாம் அவளுக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.
"அவன் பேசினதப் பார்த்தா எந்தப் பக்கத்துக் காரன்னு தோணுது?"
மூர்த்தி யோசித்து விட்டு சொன்னான். "தமிழ்நாட்டுக்காரனாத் தெரியலை. பார்த்தா வடநாட்டுக்காரனா இருக்கலாம்னு தோணுது. ஆனா தமிழைத் தப்பில்லாம பேசறான்…நல்லாப் படிச்சவன் மாதிரி தான் இருக்கு. பார்த்தா அவன் இந்தத் தொழில் செய்யறவன்னு யாரும் சொல்ல முடியாது…."
"அப்புறம் என்ன தோணுது?"
"ஒருவிதமான பயம் தோணுது பாட்டி"
பஞ்சவர்ணம் பேரனைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். "என்னை சந்திக்கறதுக்கு முன்னாடி என்னோட செல் நம்பர் முதற்கொண்டு தெரிஞ்சுகிட்டு வந்துருக்கான்…."
"அது உன் சிநேகிதன் மூலமாகவோ, இல்லை சிநேகிதனோட சிநேகிதன் மூலமாகவோ கூட அவன் வாங்கி இருக்கலாம்டா"
"ஆனா எனக்கென்னவோ அப்படித் தோணலை பாட்டி. அவன் ஒரு ப்ரொஃபஷனலா என்னைப் பத்தி சகலத்தையும் தெரிஞ்சுகிட்டு வந்த மாதிரி தான் தோணுது"
பஞ்சவர்ணம் பேரன் சொன்னதை நம்பினாள். அவன் குரலில் பயம் தெரிவது அபூர்வம். அவள் அவனை அப்படி வளர்த்தவில்லை. அவனுடைய உள்ளுணர்வு உண்மையாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. மூர்த்தி தொடர்ந்தான்.
"பாட்டி ஒவ்வொரு மனுஷன் கிட்டயும் ஏதாவது பலவீனம் இருக்கும் இல்லியா. ஆனா இவனைப் பார்த்தா எனக்கு ஏனோ இவன் கிட்ட அப்படி எதுவும் பலவீனம் இருக்கிற மாதிரி தோணலை. கொஞ்சம் கூட அவசரமோ, பதட்டமோ, பயமோ இவனைப் பாதிக்கற மாதிரி தோணலை. நான் ரேட்டைக் கொஞ்சம் குறைச்சுக்கலாமேன்னு கேட்டவுடன் அவன் எழுந்தது கூட ஒரு நடிப்புக்காகன்னு தோணலை. நான் தடுக்கலைன்னா அலட்சியமா போய் இருப்பான். எனக்கு அவனோட பேர் கூட அசோக்கா இருக்காதுன்னு தோணுது. ஏதோ ஒரு மர்ம மனிதனா தெரியறான்."
பஞ்சவர்ணம் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தாள். ஆரம்ப வேகம் போகப் போகக் குறைய ஆரம்பிக்கையில் நடப்பதை நிறுத்தாமல் சொன்னாள். "அவன் பெரிய கில்லாடியா இருப்பான்கிறதுல சந்தேகம் இல்லை. ஆனா நம்ம வேலைக்கு இப்படிப்பட்ட சாமர்த்தியமான ஆள் தான் வேணும். ஆனா நாம ஜாக்கிரதையா கையாளணும். இந்த மாதிரி ஆள் எல்லாம் வெடிகுண்டு மாதிரி. சரியா கையாண்டா எதிரியை அழிச்சுடலாம். ஏமாந்தா நம்மையே அழிச்சுடும். ஆனா பணத்தை சரியா தர்ற வரைக்கும் அவனால் நமக்கு எந்தப் பிரச்சினையும் வராது. நம்ம வேலையை கச்சிதமா செஞ்சு தருவான்னு தான் எனக்குப் படுதுடா"
"சரி அவன் கிட்ட மொத்தமா தெரிஞ்சுக்க ஏற்பாடு செய்யலாமா. இல்லை அப்பப்ப தெரிஞ்சுட்டு வரச் சொல்லலாமா?"
பஞ்சவர்ணம் சிறிதும் யோசிக்காமல் சொன்னாள். "அப்பப்ப நடந்ததை வந்து தெரிவிக்கச் சொல்லு. பணம் பெரிய விஷயமே இல்லை. நமக்கு இப்ப ரொம்ப முக்கியம் நேரம் தாண்டா. நம்ம அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கணும்கிறதுக்கு ஆர்த்தியோட ஆழ்மனப் பதிவுகளை எல்லாருக்கும் முன்னாடி நாம் தெரிஞ்சுக்கறது முக்கியம்டா மூர்த்தி."
(தொடரும்)
பரவா இல்லை நன்ராக இருகிரது