Empathy-Your pain, in my heart.
– Jess Lair
பஞ்சவர்ணம் மூன்றாம் வகுப்பில் கால் பரீட்சை வரை தான் பள்ளிக்கூடம் போய் இருக்கிறாள் என்றாலும் அறிவு கூர்மைக்கும், பள்ளிப் படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு ஒரு அருமையான உதாரணமாகத் திகழ்ந்தாள். எந்த வார்த்தை எந்த சூழ்நிலையில் எந்த அளவு எடுபடும் என்பதைக் கணிப்பதில் அவள் அனுபவ ஞானம் அலாதியானது. தான் சொல்லிக் கொடுத்ததை பேரன் எந்த அளவு ஒப்பித்து விட்டு வந்திருக்கிறான் என்பதை அவனிடம் திரும்பவும் சொல்லச் சொல்லிக் கேட்ட பிறகு திருப்தியடைந்தாள். ஆனால் அடுத்து ஒரு அரை மணி நேரம் மூர்த்தியைப் பல கேள்விகள் கேட்டாள். மூர்த்தி சொன்னதைக் கேட்ட போது ஆர்த்தியின் முகபாவம் எப்படி இருந்தது, அமிர்தம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாள், அமிர்தம் ஆர்த்தியிடம் நல்ல பெயரெடுத்திருப்பாளா என்பது போன்ற பல கேள்விகள் தொடர்ச்சியாகக் கேட்டாள். மூர்த்தியும் சலிக்காமல் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தான். அவனுக்கு பாட்டி மீது பாசமும், மதிப்பும் நிறைய இருந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவள் எதிர்பார்த்தபடியே பலரும் நடப்பது பார்த்து அவன் பிரமித்துப் போய் இருக்கிறான். சொல்வதை எல்லாம் சொல்லி விட்டு அவள் கருத்துக்காகக் காத்திருந்தான்.
பஞ்சவர்ணம் சொன்னாள். "இனி அந்தப் பொண்ணு உஷாராயிக்குவாள். தாத்தா பாட்டி மேல் பாசமாய் இருக்கிற மாதிரி தான் தெரியுது. அவங்களையும் பார்த்து பேச ஆரம்பிக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். சரி பவானி, இனி நீ அந்தக் கிழங்களைப் பத்தி சொல்லு."
அடுத்த அரை மணி நேரம் பவானியும் தாயிடம் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வந்தது. மூர்த்தி அளவுக்கு ஆர்வமாகச் சொல்லாவிட்டாலும் பவானியும் தாயிடம் ஒன்று விடாமல் சொன்னாள். நீலகண்டன் தம்பதியருக்கு ஒதுக்கி இருந்த அறையில் உள்ள பொருள்கள், அவர்கள் இருவரும் பவானியிடம் பேசியது என்ன, அவர்கள் என்ன மனநிலையில் இருந்தார்கள் என்பதையெல்லாம் விளக்கமாக மகளைச் சொல்லச் சொன்னாள். நீலகண்டன் அதிருப்தியுடன் இருந்தார், மனைவியைப் பார்த்து அடிக்கடி முறைத்தார் என்பதை பவானி சொன்ன போது பஞ்சவர்ணம் முகத்தில் புன்னகை அரும்பியது. மற்றவர்களிடம் இருக்கும் அபிப்பிராய பேதங்களைக் கண்டு பிடித்து அவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் அவளுக்கு நிகர் யாருமில்லை. மகள் சொன்னதில் இருந்து ஓரளவு நீலகண்டன் தம்பதியரைக் குறித்து கணிக்க முடிந்தாலும் முழுவதும் தெரிய அவர்களிடம் பேசித் தான் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
பிறகு ஆர்வத்துடன் மகளைக் கேட்டாள். "அது சரி ஆர்த்தியை ஆகாஷ் எந்த அளவு கவர்ந்திருக்கிறான்னு நினைக்கிறாய்"
பவானி நிஜமாகவே திரு திருவென்று விழித்தாள். "தெரியலை. எனக்கு எப்படித் தெரியும்?"
பஞ்சவர்ணத்திற்குக் கோபம் வந்தது. "ஒரு பொண்ணு ஒரு பையனைப் பார்க்கிற பார்வையிலேயே கண்டு பிடிச்சுடலாம். இதுக்கெல்லாம் பாடமா எடுத்துட்டு இருக்க முடியும். இப்படி பேக்கு மாதிரி இருக்கறதால தான் எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு நிற்கிறாய். எல்லாம் என் தலையெழுத்து. இந்தத் தடியன் என்னடான்னா அவள் வர்ற நேரமாய் பார்த்து எங்கேயோ இருக்கான். அப்பவே இருந்து அந்தக் கிழங்களோட பெட்டி படுக்கைகளை எல்லாம் எடுத்துட்டு வர ஒத்தாசையெல்லாம் செஞ்சிருந்தால் நல்லா இருந்துருக்கும். சரி தொலையட்டும். . பவானி எனக்கு அவங்க மூணு பேரையும் பார்த்துப் பேசணும். சிவகாமி இல்லாத நேரமாய் பார்த்து சீக்கிரமாய் ஒருதடவை கூட்டிகிட்டு வா"
சரியென்று பவானி தலையசைத்தாள். இனி என்ன திட்டம் தீட்டி அம்மா அவர்களைப் பலிகடா ஆக்கப் போகிறாள் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. ஆர்த்தியின் தாத்தாவும் பாட்டியும் நல்ல மனிதர்களாகத் தோன்றினார்கள். பவானி பெருமூச்சு விட்டாள்.
அந்த அறைக்குள் நுழைந்த சந்திரசேகர் மனதை இனம் புரியாத சுமை திடீரென்று அழுத்தியது. அவரும் ஆனந்தியும் ஆர்த்தியும் சேர்ந்து வாழ்ந்த அந்த அறையில் இன்னும் ஆனந்தியின் சுவடுகள் அப்படியே இருந்தன. எத்தனையோ இனிமையான நினைவுகளும், கசப்பான நினைவுகளும் அந்த அறையில் நிறைந்திருந்தன. இறந்த காலம் உயிர் பெற்று வந்தது போல் ஒரு உணர்வு மேலோங்கி நின்றது. ஆர்த்தி ஆனந்தியாய் ஒரு கணம் தெரிந்தாள். ஆனால் மறு கணம் முகம் வெளுக்க நிராதரவாக நின்று கொண்டிருந்த ஆர்த்தியைப் பார்த்த போது ஆனந்தி மறைந்து போனாள். ஆனந்தி எப்போதும் இப்படி பயந்து போய் பரிதாபமாக நின்றதில்லை.
தன்னை சுதாரித்துக் கொண்டு மகளைக் கவலையுடன் கேட்டார். "என்னாச்சு ஆர்த்தி?"
மூர்த்தி சொல்லி விட்டுப் போனவைகளை யோசிக்க யோசிக்க அவளையும் அறியாமல் ஒருவித பீதி ஆர்த்தியை ஆட்கொண்டிருந்தது. சாவிகள் இல்லாத அந்த பீரோக்கள், தாயின் பிணத்தை சாக்கில் போட்டு தூக்கிக் கொண்டு வந்தவன் இப்போதும் இந்த வீட்டில் இருக்கிறான் என்ற தகவல், ஜாக்கிரதையாயிருங்கள், உஷாராக இருங்கள் என்று அவன் எச்சரித்த விதம் எல்லாம் அவளை நிலைகுலைய வைத்து விட்டது. சுபாவத்தில் அவள் மென்மையானவளே தவிர பயந்தாங்கொள்ளி அல்ல. ஆனாலும் இன்றைய தினம் அவள் தைரியம் இழந்து விட்டாள் என்பதே உண்மை. அதிலும் தாத்தா பாட்டி உயிருக்கே ஆபத்து என்கிற மாதிரி மூர்த்தி சொல்லி விட்டுப் போனது அவளை மிகவும் பாதித்து விட்டது. தாத்தா பாட்டி இங்கு வந்ததன் உண்மையான காரணம் தன் மேல் உள்ள பாசம் தான் என்பதை அவள் அறிவாள். அவர்களுக்கு இங்கு ஆபத்து என்றால் அவளால் எப்படித் தாங்க முடியும்?
கீழே ஹாலில் இருந்த போது தென்பட்ட மனிதரை விட மாறிய மனிதராக அப்பா அவள் கண்களுக்குத் தெரிந்தார். அவர் முகத்தில் மகளுக்காகத் தெரிந்த கவலையும், இறுக்கம் குறைந்து அவர் முகத்தில் தெரிந்த கனிவும் அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
மனம் விட்டு தந்தையிடம் சொன்னாள். "அப்பா எனக்கு என்னவோ பயமாக இருக்கு.."
சந்திரசேகர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. "பயமா? எதுக்கு?"
திடீர் என்று அவர்களுக்கு இடையே ஒரு திரை விழுந்தது போல் ஆர்த்தி உணர்ந்தாள். தந்தையிடம் இது விஷயமாக மனம் விட்டு எதையும் சொல்ல முடியாது என்று தோன்றியது. பெரியக்கா கிழித்த கோட்டை தாண்ட மாட்டார் என்று பெயரெடுத்த மனிதரிடம் தன் பயத்தையும் சந்தேகங்களையும் அவளால் எப்படிச் சொல்ல முடியும். ஒருவித இயலாமையுடன் சொன்னாள். "தெரியலைப்பா"
சந்திரசேகர் மகளைப் பார்த்துக் கனிவாகப் புன்னகை செய்தார். "நானும் சின்ன வயசுல நிறைய பயப்படுவேன் ஆர்த்தி. ஆனா அக்கா எப்பவுமே பயத்தைப் பெரிய பலவீனம்னு நினைக்கிறவள். நான் இருட்டுக்குப் பயந்தால் என்னை இருட்டான ரூமுல வச்சு ஒரு மணி நேரம் பூட்டி வச்சுடுவாள். பயத்தை ஜெயிக்க ஒரே வழி அதை சந்திக்கறதுதான்னு சொல்வாள். அப்படி எத்தனையோ பயங்களை ஜெயிச்சிருக்கிறேன். சில பயங்களை அவ கிட்ட சொல்லக் கூடத் தயங்குவேன். ஏன்னா அதையும் அவள் சந்திக்க சொல்லுவாளே? ஆனால் பிரச்சினை என்னன்னா நான் சொல்லாட்டியும் கண்டு பிடிச்சு அதையும் சந்திக்க வச்சுடுவாள்….."
ஆர்த்தியால் வாய் விட்டுச் சொல்ல முடியவில்லை. "இப்ப நான் பயப்படறதே உங்கக்காவைப் பார்த்து தான்ப்பா. அவங்களை சந்திக்க என்னையும் அவங்க வரவழைச்சுட்டாங்க….."
(தொடரும்)
“