Not every event has a profound significance for you. There are a few, however, that I would consider likely to have changed things for you, to have illuminated your path.
– Carlos Castaneda
தர்மலிங்கம் இறந்த பின் ஒரு நாள் தேசிகாச்சாரி உயிலைப் படித்துக் காட்ட அந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். முழுக் குடும்பமும் கூடி இருக்க தேசிகாச்சாரி உயிலை வாசித்துக் காட்டினார்.
தர்மலிங்கம் கம்பெனி சொத்தை மூன்றாகப் பிரித்திருந்தார். 20 சதவீதம் சிவகாமிக்கும், 20 சதவீதம் அமிர்தத்திற்கும், 60 சதவீதம் சந்திரசேகருக்கும் எழுதி இருந்தார். ஆனால் சந்திரசேகர் தன் பங்கு ஷேர்களை யாருக்கும் விற்கவோ, தரவோ முடியாதென்றும் அதில் வரும் லாபத்தை மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் சொல்லி இருந்தார். வீடும் ஒரு எஸ்டேட்டும் சிவகாமிக்கும், வேறொரு எஸ்டேட் அமிர்தத்திற்கும், மூன்று எஸ்டேட்டுகள் உள்பட மீதம் இருந்த பல அசையா சொத்துகள் சந்திரசேகருக்கும் தர்மலிங்கம் எழுதி இருந்தார். அவற்றிலும் வரும் வருமானத்தை மட்டுமே சந்திரசேகர் அனுபவிக்க முடியும் என்றும், அவற்றையும் விற்கவோ, தரவோ சந்திரசேகருக்கு உரிமை இல்லை என்றும் எழுதி இருந்தார். சந்திரசேகரின் அத்தனை சொத்துகளும் அவருடைய குழந்தைகள் மேஜர் ஆன பிறகு அவர்களுக்கு சரி சமமாக சேரும் என்றும் சந்திரசேகர் உயிருடன் இருக்கும் வரையில் அவர் அனுமதியுடன் அவர்கள் விற்க முடியும் என்றும் அவர் காலத்திற்குப் பின் அவர்கள் தங்கள் விருப்பப்படி விற்பது உட்பட என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் எழுதி இருந்தார்.
உயில் விவரம் தெரிய வந்த போது சிவகாமியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதில் தேசிகாச்சாரிக்கு ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் எதைப் பற்றியும் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் என்றுமே வெளிப்படுத்தியதில்லை. சங்கரனும் பெரிதாக எதையும் நினைத்த மாதிரி தெரியவில்லை.
அமிர்தத்தின் திகைப்பு அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது. தனக்கு அதிகம் கிடைக்குமென்று அவள் நினைத்திரா விட்டாலும் அக்காவிற்கு இத்தனை குறைவாக கிடைக்கும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. அக்காவை அவள் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் கணவருக்கு தங்களுக்குக் கிடைத்த பங்கு மிகக் குறைவு என்ற அதிருப்தி இருந்தது தெரிந்தது.
ஆனால் தேசிகாச்சாரியை ஆச்சரியப்படுத்தியது சந்திரசேகரின் திகைப்பின்மையே. உயிலின் சாராம்சம் முன்பே தெரிந்திருந்தது போல சந்திரசேகர் அமர்ந்திருந்தார். ஒருவேளை தர்மலிங்கம் முன்பே மகனை அழைத்து இதைத் தெரிவித்திருப்பாரோ என்று தேசிகாச்சாரி சந்தேகப்பட்டார். அப்படிச் சொல்லி இருந்தால் அவர் ஏன் அப்படி உயிலை எழுதினேன் என்றும் மகனிடம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் சந்திரசேகர் அன்றும் சரி, பின்பும் சரி உயிலின் சாராம்சம் பற்றி அவரிடம் பேசியதில்லை.
பிற்காலத்தில் சந்திரசேகரின் மனைவி ஆனந்தி ஒரு விபத்தில் இறந்து போய் அவருடைய ஒரே மகளையும் ஆனந்தியின் பெற்றோர் எடுத்துச் சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்ட போது அவர் வக்கீல் மூளை சந்தேகப்பட்டது. உண்மையிலேயே குழந்தையை அவர்கள் தான் எடுத்துச் சென்று விட்டார்களா இல்லை இதில் ஏதாவது தகிடுதத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்தது. அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கவோ திருப்பிக் கொண்டு வரவோ சிவகாமி எந்த முயற்சியும் எடுக்காதது அவர் சந்தேகத்தை அதிகரித்தது. சந்திரசேகருக்கு அக்கா மேல் உள்ள பக்தியை அறிந்திருந்த தர்மலிங்கம் சிவகாமியின் உண்மையான குணம் அறிந்த பின் தான் சொத்தை சந்திரசேகரிடம் தக்க வைக்க இப்படி உயில் எழுதினாரோ என்ற சந்தேகம் தேசிகாச்சாரிக்கு வலுக்க ஆரம்பித்தது.
பலமுறை குழந்தையைத் திருப்பிக் கொண்டு வருவது பற்றி சந்திரசேகரிடமும் சிவகாமியிடமும் அவர் பேசி இருக்கிறார். சந்திரசேகரிடம் பேசிப் பயனில்லை என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் பாசமாவது அவரைத் தூண்டி விடாதா என்ற நம்பிக்கையில் முயற்சி செய்து பார்த்தார். சந்திரசேகர் சரிவர எந்த பதிலும் சொல்லவில்லை. சிவகாமி குழந்தையை கொண்டு சென்றது கொள்ளைக்காரர்கள் அல்ல சொந்தத் தாத்தா தான் என்பதால் போலீசில் புகார் செய்வதோ, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதோ தங்கள் குடும்ப கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்பது போலப் பேசினாள். மற்றபடி எல்லா முயற்சியும் தான் எடுத்து வருவதாகத் தெரிவித்தாள்.
தேசிகாச்சாரிக்கு சந்தேகம் வலுத்தது. ஏனென்றால் காலம் சென்று கொண்டே இருந்ததே ஒழிய தர்மலிங்கத்தின் ஒரே பேத்தி திரும்ப வருவதாகக் காணோம். சிவகாமி உண்மையாகவே முயற்சி எடுத்திருந்தால் அவளால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர் அறிவார். எதுவும் நடக்கவில்லை என்றால் அவள் முயற்சி எடுக்காததே காரணம் என்பதில் அவருக்கு சந்தேகமே இல்லை.
குழந்தையைக் கொன்று விட்டாளோ என்பது உட்பட பல சந்தேகங்கள் தேசிகாச்சாரிக்கு வந்தன. மகனிடம் எல்லா ஃபைல் கட்டுக்களையும் கொடுத்து விட்டு தொழிலில் இருந்து விலகி விட்ட போதும் அவருக்கு ஆர்த்தி விஷயம் உண்மையில் ஒரு உறுத்தலாகவே இருந்தது. வாரிசு என்று ஒன்று இருந்தால் தானே அதற்குப் போகும் என்று சிவகாமி அந்தக் குழந்தையை அப்புறப்படுத்தி விட்டதாகவே அவர் நினைத்து வந்தார்.
வெளிப்பார்வைக்கு அவள் மீது தப்பு சொல்லும்படி எதுவும் இல்லை. தம்பிக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகவே ஏழை வீட்டுப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்த போது தர்மலிங்கம் இருந்திருந்தால் இதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டார் என்பதை தேசிகாச்சாரி கூட நினைத்தார். அதே போல் இரண்டாவது மனைவியைக் கூட ஏழைப் பெண்ணாகவே தான் அவள் தேர்ந்தெடுத்தாள். ஒரு கோணத்தில் பார்க்கையில் இது அவளுக்குப் பணம், அந்தஸ்த்தில் பெரிய தாத்பரியம் இல்லை என்று தோன்ற வைத்தாலும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது இது போன்ற ஏழைப் பெண்களிடம் இருந்தோ, அவர்கள் குடும்பத்தினரிடம் இருந்தோ தனக்கு எதிர்ப்பு இருக்காது என்பது தான் அவளுடைய உள்நோக்கமாய் இருக்குமோ என்று பெருத்த சந்தேகத்தை வரவழைத்தது. அவள் தானும் ஒரு நடுத்தர வர்க்கத்து, சற்று மென்மையான இளைஞனைத் திருமணம் செய்து கொண்டது கூட தன் சுதந்திரத்திற்கு எந்த வித இடைஞ்சலையும் இது போன்ற இளைஞன் ஏற்படுத்த மாட்டான் என்ற கணக்கில் தான் என்றும் அவருக்குத் தோன்றியது.
ஆர்த்தி வந்திருக்கிறாள் என்று தகவல் வந்த போது வேறெதாவது பெண்ணை வைத்து சிவகாமி ஆள் மாறாட்டம் செய்கிறாளோ என்ற சந்தேகம் கூட வந்தது. கூடவே தாத்தா பாட்டியும் வந்திருக்கிறார்கள் என்றறிந்த போது தான் அந்த சந்தேகம் நீங்கியது. ஆனால் நேரடியாக அந்தப் பெண்ணைப் பார்த்து உயில் விவரத்தைத் தெரிவித்து, சில டாக்குமெண்ட்களில் அவள் கையெழுத்து வாங்கி அவள் நிலைமையைப் பாதுகாப்பது தன் கடமை என்று நினைத்தார். அது தான் அவருடைய முதல் கட்சிக்காரரின் ஆத்மசாந்திக்கு தான் செய்யக் கூடிய கைம்மாறு என்று தானே அவளை நேரில் பார்க்கக் கிளம்பி இருக்கிறார்.
(தொடரும்)“