Beliefs dictate our experience whether we realize it or not. We automatically notice things we’re expecting to see, because we’re looking for them. In this way, the world largely conforms to our beliefs about it. – Rich Rahn
பெற்றோரின் புகைப்படத்தைப் பிடித்துக் கொண்டு சிலையாக நின்று கொண்டிருந்த மருமகளைப் பார்க்கையில் அமிர்தத்தின் மனம் இரக்கப்பட்டது. தானும் சிறு வயதிலேயே தாயை இழந்திருந்ததால் அந்த வேதனையை அமிர்தத்தாலும் உணர முடிந்தது. அப்பா இருந்தார் என்றாலும் அவர் அமிர்தத்தை ஒரு பொருட்டாக என்றுமே நினைத்ததில்லை. அக்கா சிவகாமி ஓரளவு தாயில்லாத குறையைப் போக்கினாள் என்றாலும் சிவகாமி என்றுமே கொஞ்சி, செல்லம் கொடுத்து பாச மழை பொழிகிறவளாக இருந்ததில்லை. சிறு வயதில் எத்தனையோ முறை தாயை எண்ணி அமிர்தமும் ஏங்கி இருக்கிறாள்.
இளகிய மனதுடன் அமிர்தம் சொன்னாள். "உங்கம்மா உன் மேல் உயிரையே வச்சிருந்தாள். நீயும் உங்கம்மா இடுப்பில் இருந்து இறங்க மாட்டாய். எனக்கு இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு"
ஆர்த்தி அமிர்தத்தைக் கண்கலங்க பார்த்தாள். "எனக்கு அம்மா பத்தி எதுவுமே ஞாபகம் இல்லை அத்தை. பாட்டி தாத்தா கூட அம்மா பத்தி அதிகமாய் பேசறதில்லை. ஞாபகப்படுத்திகிட்டு வேதனைப்பட அவங்களும் தயங்கினாங்க".
அமிர்தத்திற்கு அவள் மனநிலை புரிந்தது. மருமகள் தோளில் கை வைத்துச் சொன்னாள். "இது தான் நீ உன் அம்மா, அப்பாவோட மூணு வருஷம் வாழ்ந்த ரூம். அது தான் உங்கம்மாவோட வீணை…இந்த டிரஸ்ஸிங் டேபிள் கல்யாணம் ஆன புதுசுல உங்கம்மா ஆசையாய் வாங்கினது… இன்னும் உங்கம்மாவோட பொருள்கள் எல்லாம் அந்த ரெண்டு பெரிய பீரோவிலும் இருக்கு. அதோட சாவிகள் தான் இல்லை. எங்கே போச்சுன்னு தெரியலை….. ஒரு வேளை அக்கா கிட்ட இருக்கோ என்னவோ…."
வீணையையும், டிரஸ்ஸிங் டேபிளையும், அந்த பீரோக்களையும் ஆர்த்தி இதயம் கனக்கப் பார்த்தாள். அப்போது அறை வாசலில் "ஹாய்" என்ற குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்த போது அறைக் கதவில் கை வைத்தபடி அழகான திடகாத்திரமான ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தவுடன் அமிர்தத்தின் முகம் கறுத்தது. "இந்தத் தடியன் எத்தனை நேரமாய் ஒட்டுக் கேட்டுகிட்டு நிற்கிறான்னு தெரியலையே. இவங்க பரம்பரைக்கே இந்தப் புத்தி போகாது போல் இருக்கு" என்று அமிர்தம் முணுமுணுத்தது ஆர்த்திக்குக் கேட்டது.
"என்ன பெரியம்மா என்னை ஆர்த்தி கிட்ட இன்ட்ரடியூஸ் செய்ய மாட்டீங்களா?" என்று புன்னகையுடன் கேட்டபடி அவன் உள்ளே வந்தான். அப்போதும் இறுகிய முகத்துடன் அமிர்தம் அவனைப் பார்த்தாளே ஒழிய அவனை அறிமுகப்படுத்த முனையவில்லை.
அவனாகவே தன்னை ஆர்த்தியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். "என் பேர் மூர்த்தி. உங்க சித்தியோட அண்ணா மகன்."
ஆர்த்தி புன்னகையுடன் "ஹாய்" என்றாள்.
மூர்த்தி திரும்பி அமிர்தத்திடம் சொன்னான். "மாமா உங்களைக் கூப்பிடறார்"
அப்போதும் அமிர்தம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அசையாமல் நின்றாள். ஆனால் உள்ளூர அவளுக்குக் கோபம் கொப்புளித்தது. "பெரியம்மாவாம் பெரியம்மா. இவன் உறவு கொண்டாடலைன்னு இங்கே யார் அழுதா?" என்று உள்ளுக்குள் வெடித்தாள். அவன் சத்தமாகச் சொன்னான். "உங்க தம்பி உங்களைக் கூப்பிடறாருன்னேன்"
அமிர்தம் அவனை மீண்டும் பொருட்படுத்தாமல் ஆர்த்தியிடம் புன்னகையுடன் சொன்னாள். "சரி ஆர்த்தி, நான் அப்புறமா வர்றேன். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ"
அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற மூர்த்தி மனதில் நினைத்துக் கொண்டான். ‘அழுத்தத்துல இவள் இவங்கக்காவுக்கு எந்த விதத்திலும் குறஞ்சவ இல்ல. அவள் கிட்ட இருக்கிற தைரியமும், அதிகாரமும் இருந்திருந்தா இவளும் எல்லாரையும் என்ன விலைன்னு கேட்பா.’ அவள் கண்ணில் இருந்து மறைந்தவுடன் ஆர்த்தியிடம் தன்னைப் பற்றி மேலும் சொன்னான். "நான் இங்கயே தான் இருக்கேன். எங்கம்மாவும் அப்பாவும் என் சின்ன வயசுலயே இறந்ததால எனக்கு வேற போக்கிடம் இல்லை. எம்.பி.ஏ படிச்சு முடிச்சுட்டு ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் இருக்கேன்" அவன் குரலில் மிகுந்த மரியாதை தெரிந்தது.
ஆர்த்தி தலையசைத்தாள். இன்னும் தாயின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாத நிலையில் அவள் இருந்தாள்.
"நான் எம்.பி.ஏ முடிச்சப்ப உங்கப்பா என்னை உங்க கம்பெனியில் சேரச் சொன்னார். உங்க பெரியத்தைக்குக் கீழே அடிமை மாதிரி வேலை செய்யப் பிடிக்கலை. அதனால் வேற வேலை பார்த்துகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல நான் என் பாட்டியைக் கூட்டிகிட்டு தனியா வீடு பார்த்துகிட்டு போயிடுவேன்"
மனம் விட்டுப் பேசுகிற யதார்த்தம் அவனிடம் தெரிந்தது. பாட்டி என்றவுடன் ஆர்த்தி குழப்பத்துடன் பார்க்க அவன் விவரித்தான். "உங்க சித்தியோட அம்மாவும் இங்கே தான் இருக்காங்க…..
திடீரென்று குரலை வெகுவாகக் குறைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது போல் தொடர்ந்தான். "நீங்க நல்ல மாதிரியாய் தெரியறீங்க, அதனால் சொல்றேன். இது உங்க வீடுன்னு நீங்க நினைச்சுகிட்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இது சிவகாமியம்மா வீடு தான். இங்கே ஒரு அணு அசையணும்னாலும் அந்தம்மா அனுமதி வேணும். அப்படி ஒரு கட்டுப்பாட்டோட எல்லாரையும் அந்தம்மா வச்சிருக்காங்க. அதனால் ரொம்பவும் ஜாக்கிரதையாய் இருங்க. அவங்க கிட்ட மட்டுமில்லை. இப்ப போறாங்களே உங்க சின்னத்தை இவங்க கிட்டயும் எச்சரிக்கையாய் இருங்க. இவங்களும் லேசுப்பட்டவங்க கிடையாது."
ஆர்த்தி முகத்தில் கலவரம் படர்ந்தது.
"என்னடா இப்படி பயப்படுத்தறானேன்னு நினைக்காதீங்க. இவங்க நடத்தற கூத்தை எல்லாம் சின்னதிலே இருந்து பார்த்துகிட்டிருந்ததால சொல்றேன். உங்கம்மாவோட மரணம் ஏகப்பட்ட சந்தேகத்தைக் கிளப்பியிருக்குன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். இப்ப கூட உங்கம்மாவோட பீரோ சாவிகள் காணோம்னு இந்தம்மா சொல்றாங்க. இவங்களுக்கு இது எவ்வளவு வசதியாய் போச்சு பார்த்தீங்களா? சாவி ஒருவேளை அக்கா கிட்ட இருக்கோ என்னவோன்னு சொல்றாங்களே இது விசித்திரமா இல்லைங்களா? சாவி உங்கப்பா கிட்ட இருக்குன்னாலும் அதில் அர்த்தம் இருக்கு….."
ஆர்த்திக்கும் அவன் எழுப்பிய சந்தேகங்கள் நியாயமானதாகவே தோன்றியது. அதே நேரம் அமிர்தம் முணுமுணுத்தது போல இவன் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டிருக்கிறான் என்பதையும் அவளால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
"ஏன் இப்படி முதல்லயே சொல்றேன்னா, சொந்தம்னு நினைக்கிற இவங்க எல்லாம் ரொம்பவும் ஆபத்தானவங்கன்னு நீங்க ஆரம்பத்திலேயே மனசுல பதிய வச்சுகிட்டு உஷாராகிக்கறது நல்லது. சிவகாமியம்மா எப்பவுமே ஒரு தடியனை கூட வச்சுகிட்டு சுத்திகிட்டிருக்கறது உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனா அந்தம்மா கண் அசச்சா போதும், அவன் யாரையுமே கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டான். உங்கம்மா பிணத்தை சாக்குல கட்டி தோளுல போட்டுகிட்டு வந்தவன் கூட அவன் தான்னு உங்களுக்குத் தெரியுமா?"
இதயம் படபடக்க ஆர்த்தி தெரியாது என்று தலையசைத்தாள்.
"அவன் இன்னும் இங்கே தான் இருக்கான். சிவகாமியம்மா நிழல்னு தான் அவனைப் பத்தி எல்லாரும் சொல்வாங்க. அந்தம்மா பின்னாலேயே இருப்பான். எதுக்கும் நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோங்க. உங்க தாத்தா பாட்டி கிட்டயும் சொல்லி வைங்க. பாவம் வயசானவங்க…" சொல்லிக் கொண்டே வந்தவன் திடீர் என்று நிறுத்தி காதுகளைக் கூர்மையாக்கினான்.
"உங்கப்பா வர்றார்னு நினைக்கறேன். நான் கிளம்பறேன். சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லி மின்னலாக அங்கிருந்து மாயமானான். அவன் சொன்னபடி சிறிது நேரத்தில் சந்திரசேகர் உள்ளே நுழைந்தார்.
(தொடரும்)
“