Solitude excludes pleasure, and does not always secure peace.
– Samuel Johnson
அர்ஜுனின் எதிரே வந்து கொண்டிருந்த பெண்மணி தன் முகத்தை அருவருப்புடன் திருப்பிக் கொண்டாள். அது அர்ஜுனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த அருவருப்பை அவன் மற்றவர்களிடம் பார்த்து தான் வளர்ந்திருக்கிறான். பார்க்கிங் ஏரியாவில் இருந்த தன் வழக்கமான காரில் ஏறி அமர்ந்து கொண்டான். அந்த கோயமுத்தூர் அலுவலகத்திலிருந்து கார் வெளியே வந்த போது கேட்டைத் திறந்த வாட்ச்மேன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு ஒரு சல்யூட் அடித்தான்.
இந்த சல்யூட் தனக்கல்ல சிவகாமி அம்மாளின் விசுவாசி என்பதற்காக கிடைத்தது என்று அர்ஜுனுக்குத் தெரியும். அதனால் அந்த சல்யூட்டையும் அவன் பொருட்படுத்தவில்லை. வெளியே லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. காரை ஓட்டும் போது மனம் ஏனோ அலைபாய்ந்தது. விமானத்தில், சென்னையில் அந்த ஆஸ்பத்திரியில் என்று பலரும் அவனைக் கண்டவுடன் பட்ட அருவருப்பு அவனுக்குத் தாயை நினைவுபடுத்தியது. முதல் முதலில் அவள் முகத்தில் தான் அந்த அருவருப்பைப் பார்த்திருக்கிறான். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதெல்லாம் அவன் வீட்டு விஷயத்தில் பொய்த்துத் தான் போனது.
"இந்த அசிங்கத்தைப் பிறந்தவுடனே அழிச்சிருக்க வேண்டியது தானே" என்று பக்கத்து வீட்டுக்காரி அவன் தாயிடம் ஒரு நாள் கேட்டது காதில் விழுந்தது.
"அப்ப எனக்கு தைரியம் வரலை" என்ற அவன் தாயின் பதில் இன்னும் நெஞ்சில் திராவகமாக விழுகிறது.
அவள் இரண்டு தெரு தள்ளி இருந்த ஒருவனுடன் ஓடிப் போய் அவன் நடுத்தெருவில் நிராதரவாக நின்ற போது அவள் அவனைத் தைரியமாக ஆரம்பத்திலேயே கொன்றிருந்தால் அது இதை விடக் கருணை உள்ள செயலாக இருந்திருக்கும் என்று தோன்றியது. நாட்கணக்கில் அழுதான். இரக்கப்பட்டு அவள் திரும்பி வருவாள் என்ற நப்பாசை மனதின் ஒரு மூலையில் சில நாட்கள் இருந்தது. அழுகையும் அந்த எதிர்பார்ப்பும் கடைசியில் வரண்டு போனது.
ஆரம்பத்தில் தெருவில் திரியும் சிறுவர்களின் தொந்திரவும் கிண்டலும் தாங்க முடியாமல் போன போது இயல்பாகவே திடகாத்திரமாக இருந்த அவனுக்கு ஓரிருவரை அடித்து நொறுக்க சிரமம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் பின்னர் எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள். தூரத்தில் இருந்து கல் எறிய ஆரம்பித்தார்கள். எத்தனையோ நாட்கள் சரியாக உறக்கமில்லாமல் இருந்திருக்கிறான். எப்போது எங்கிருந்து கல் வந்து விழும் என்று சொல்ல முடியாது. சாவதற்கும் அவனுக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில் தான் ஒரு தெய்வமாக சிவகாமி அவன் வாழ்க்கையில் வந்தாள்.
ஒருநாள் பல சிறுவர்களின் கற்களை சந்தித்துக் கொண்டு இருந்த போது தான் சிவகாமியை அவன் முதன் முதலில் சந்தித்தான். அவனைப் பாதுகாப்பாய் பின்னுக்குத் தள்ளி பத்திரகாளி போல் ரௌத்திராகாரமாக அந்த சிறுவர்களை சீறித் துரத்திய அந்தக் காட்சி மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. தாங்கள் தங்கிய ஓட்டலுக்கு அழைத்துப் போய் முதலில் வயிறார சாப்பிட வைத்தாள். தங்களுடனேயே வந்து விடுகிறாயா என்று அவள் கேட்ட போது அவனால் நம்ப முடியவில்லை. தலையசைத்தான். இந்தியாவிற்கு அவளுடனே வந்த போதிலும் அவள் ஒரு சில நாட்களில் தன்னைக் கைகழுவி விடுவாள் என நிறைய நாட்கள் பயந்தான். இப்படிப்பட்ட மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அவனால் உடனடியாக நம்ப முடியவில்லை. அவள் அப்படிக் கைவிட மாட்டாள் என்று உறுதியானவுடன் தனக்குள் ஒரு நிரந்தர சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டான். உடலில் கடைசி துளி உயிர் உள்ளவரை அவளுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதி பூண்டான். அவள் எந்த வேலை தந்தாலும் அவன் ஏன் எதற்கு என்று எப்போதுமே கேட்டதில்லை. அது சரியா, தவறா என்று யோசித்ததில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் தான் எல்லாம்.
எழுதப் படிக்க சொல்லித் தர ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்தாள். அவனுக்கு பங்களாவிற்கு வெளியே இருந்த சிறிய அவுட் ஹவுசைத் தங்கக் கொடுத்தாள். அவன் செய்யும் வேலைக்கு ஒரு சம்பளம் நிர்ணயித்துக் கொடுத்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் என்ற அந்தஸ்தைக் கொடுத்தாள். அவன் முகத்தின் விகாரம் அவளைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவன் முகத்தைப் பார்த்து தான் அன்றிலிருந்து இன்று வரை பேசுகிறாள். இப்போது அவன் முகத்தை மாற்ற முயற்சி செய்கிறாள்.
அவன் முகத்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்வது பற்றி சிவகாமி முதலில் சொன்ன போது அவனால் நிறைய நேரம் எதுவும் பேச முடியவில்லை. கடைசியில் பேச முடிந்த போது சொன்னான். "அதுக்கு நிறைய செலவாகுமே மேடம்"
"அதனாலென்ன?"
"என் கிட்டே அவ்வளவு பணம் இல்லை மேடம்"
"என் கிட்ட இருக்கு"
சொன்ன சிவகாமி தன் செல் போனில் எண்களை அழுத்த ஆரம்பித்தாள். இது சம்பந்தமான பேச்சு இத்தோடு முடிந்தது என்று அர்த்தம்.
பிறகு அவளே சென்னையில் டாக்டரிடம் பேசி அப்பாயின்மென்ட் வாங்கி அவனை அனுப்பியும் வைத்தாள். அங்கு மூன்று மணி நேரம் அவர்கள் விதவிதமான பரிசோதனைகள் செய்தார்கள், அளவுகள் எடுத்தார்கள். டாக்டரிடம் அவன் தெரிந்து கொள்ளும் ஆவலில் எவ்வளவு செலவாகும் என்று கேட்டான். டாக்டர் சொன்னார். "20 லட்சம்".
அர்ஜுன் வாயடைத்துப் போனான். டாக்டர் கேட்டார். "நீங்க மேடத்துக்கு என்ன உறவு?"
அர்ஜுன் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. அவன் யாருக்குமே உறவில்லை. பெற்றவள் கூட உறவை உதறி விட்டுப் போன இந்த துர்ப்பாக்கியசாலி, சிவகாமி போல் ஒருத்திக்கு என்ன உறவாக முடியும்?
டாக்டர் பதிலுக்குக் காத்திருக்கிறார் என்று தெரிந்த போது உண்மையைச் சொன்னான். "நான் அவங்க கிட்ட வேலை பார்க்கிறேன்"
கேட்ட போது டாக்டரும் வாயடைத்துப் போன மாதிரி தெரிந்தது. அவன் கிளம்பும் போது டாக்டர் சொன்னார். "மேடம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சர்ஜரி செய்யணும்னாங்க. நான் ரெண்டு நாள்ல சில இமேஜஸ் அவங்களுக்கு ஈ மெயில்ல அனுப்பி வைக்கிறேன்னு சொல்லுங்க. அவங்கள ஏதாவது ஒன்னை செலக்ட் செய்யச் சொல்லுங்க. அடுத்த வாரம் ஒரு நாள் சர்ஜரி செய்துடலாம்….."
இப்போது கூட அவனுக்கு எல்லாமே கனவு போலத் தான் இருந்தது. தனக்காக சிவகாமி 20 லட்சம் ரூபாய் செலவு செய்யத் தயாரானது திகைப்பாக இருந்தது. என்ன மனுஷி அவள். இது வரை அவள் அவனுக்காக செய்ததற்கே ஏழு ஜென்மத்திற்கு அவள் செருப்பாகத் தேய்ந்தால் கூட பட்ட கடன் தீராது என்று அவனுக்குத் தோன்றியது. அத்துடன் இந்தக் கடனும் சேர்ந்தால்……?
அவனுடைய கார் ஒரு சிக்னலில் நின்றது. இப்போது மழை வலுத்து விட்டது. அந்த மழையில் ஒரு ரெயின் கோட் அணிந்த நபர் சிக்னலில் தெருவைக் கடக்க இருபக்கமும் பார்த்து விட்டு ஒரு அடி வைத்தவர் அப்போது தான் மிக அருகில் அர்ஜுனைக் கவனித்தார். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவர் அடுத்த கணம் பேயைக் கண்டது போல தலை தெறிக்க தெருவைக் கடந்து ஓடினார்.
அர்ஜுன் தன் எண்ணங்களில் ஆழ்ந்திருந்ததால் ஆரம்பத்தில் அவ்வளவு விரைவாக நடந்தது அறிவுக்கு எட்டவில்லை. தன்னைக் கண்டு அந்த உருவம் ஸ்தம்பித்து நின்றதும், பின் தலை தெறிக்க ஓடியதும், பிறகு தான் மூளையில் மின்னலாகத் தாக்கியது. ஆனால் அந்த நபரின் அடையாளம் தெரியவில்லை. அது ஆணா, பெண்ணா என்பது உட்பட எதுவும் தெரியாவிட்டாலும் ஓடுவது தன்னைப் பார்த்து விட்டுத் தான் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. யாரது?
(தொடரும்)“
நல்ல சஸ்பென்ஸ் தொடர். சிவகாமி கேரக்டர் வித்தியாசமாவும், மர்மமாவும் கொண்டு போறது நல்லாருக்கு.
Well done Mr.Ganesan. the story is very interesting and the way you portray the characters is awesome. I know very well that u will update the episodes once in a week.But after reading every new episode I used to check Nilacharal site for the next issue daily…… I got addicted to this story………I am very excited and thrilled to read the forthcoming episodes….all the best….. keep going………
பாராட்டி ஊக்குவித்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
-என்.கணேசன்