மனிதரில் எத்தனை நிறங்கள்!(47)

Never trust to general impressions, my boy, but concentrate yourself upon details
– Sherlock Holmes

அன்றிரவு ஆர்த்தி கூட உறங்கி விட்டாள். ஆனால் பஞ்சவர்ணம் உறங்காமல் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள். மூர்த்தி அங்கு நடப்பதை எல்லாம் வேவு பார்த்து வந்து அவளிடம் சொல்லும் வரை அவளால் அமைதியடைய முடியாது. பார்வதி ‘இப்படித் தான் இந்தக் கனவு வந்து பாடாய்ப் படுத்துகிறது’ என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று அவளுக்கு நூறு சதவீதம் சொல்ல முடியாவிட்டாலும், சிவகாமி தடுத்து நிறுத்தி அங்குள்ளவர்களை அனுப்பி வைத்த விதம் அவளுக்குப் பல அர்த்தங்களைத் தந்தது.

பல வருடங்களாக அவள் அறிந்திருந்த சிவகாமி பெருத்த சந்தேகத்தைக் கிளப்பினாள். எதையும் பதறாமல், கணக்கிட்டு செயல்படக்கூடிய சிவகாமி அந்த விஷயத்தை சொல்ல விடாமல் தடுக்கிறாள் என்றால் ஏதாவது பெரிய காரணம் இல்லாமல் இருக்காது என்பது மட்டும் அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. அது என்ன என்ற கேள்விக்குத் தான் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. மூர்த்தி வந்தால் தான் தெரியும்.

கடிகாரத்தைப் பார்த்த போது பஞ்சவர்ணத்திற்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தோன்றியது. சிவகாமி வளவளவென்று பேசக்கூடியவளோ, மற்றவர்கள் வளவளவென்று பேசினால் கேட்கக் கூடியவளோ அல்ல. யாராக இருந்தாலும் ‘விஷயத்திற்கு வா’ என்று பேச்சை வெட்டி விட்டு சாராம்சத்தை மட்டும் கேட்க ஆசைப்படுபவள். அப்படி இருக்கும் போது அவள் ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்னும் ஆர்த்தியின் அறையில் இந்த நள்ளிரவில் பேசிக் கொண்டு இருப்பாள் என்பதை நம்ப முடியவில்லை. அவள் போய் அடுத்த நிமிடம் தன் அறையில் இருக்க வேண்டிய மூர்த்தியும் இன்னும் வராதது அவள் பொறுமையை சோதித்தது.

இந்த வீடு தனது அதிகாரத்தில் வந்த பிறகு தான் இந்த வீட்டில் சுதந்திரமாக வலம் வருவேன் என்று சூளுரைத்து விட்டு தன் அறையில் முடங்கிக் கிடந்தவள் ஆர்த்தி வந்த பின் தான் ஓரிரு முறை தன் நிலையை தளர்த்தி இருக்கிறாள். இப்போது மூர்த்தி வராததைப் பார்க்கையில் சந்தேகம் வலுக்க வேண்டாவெறுப்பாக மறுபடி அந்த அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவைப் பார்த்தாள். சற்று வெளியே வந்து எட்டிப் பார்த்த போது ஆர்த்தியின் அறையில் விளக்கு அணைந்துள்ளது தெரிந்தது. இந்தப்பக்கம் பார்த்த போது மூர்த்தியின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவசரமாக பேரன் அறைக்குப் போன போது அவன் அறை வெளியே தாளிடப்பட்டிருந்தது பார்த்து திகைத்தாள். ‘லைட்டைப் போட்டுட்டு எங்கே போயிட்டான்’ என்று அறை அருகே வந்த போது "பாட்டி" என்று மூர்த்தி அழைத்தான்.

பஞ்சவர்ணம் ஒன்றும் புரியாமல் அறைக்கதவைத் திறந்து விட்டு தன் அறைக்கு வர சைகை செய்து விட்டு தனதறைக்கு விரைந்தாள். அவனும் பின்னாலேயே வர, தனதறைக்குள் வந்தவுடன் மெல்லக் கேட்டாள்.

"என்னாச்சு?"

மூர்த்தி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவமானத்துடன் நடந்ததைச் சொன்னான். அவனுடைய எல்லை மீறிய கோபம் பஞ்சவர்ணத்திற்குப் பிடித்திருந்தது. இந்தக் கோபம் தான் இவனைச் செயல்பட வைக்கும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இந்தக் கோபம் வெடிக்கும் போது வாழ்க்கையில் எதிரிகளை வென்று முடிக்க பலம் பிறக்கும். மூளை திட்டம் போடும். பவானிக்கு இந்தக் கோபம் இல்லாததால் தான் செயலிழந்து விட்டாள்….

"அவன் பரமசிவன் கழுத்தில இருக்கிற பாம்புடா. அது தான் கருடா சௌக்கியமான்னு கேட்கிறான். ஒரு காலம் கண்டிப்பாய் வரும். நீ அப்படிப்பட்ட காலத்தை வரவழைக்கணும். அந்தத் திமிர் பிடிச்சவனையும் அவனை இயக்கிகிட்டு இருக்கற அந்த அகங்காரியையும் பழி வாங்கவாவது நீ அதைச் செய்யணும். ஒரு நாள் சொத்து உன்னுடையதாகிறப்ப உன்னால எல்லாமே முடியும். அது வரைக்கும் இந்தக் கோபத்தைத் தணிச்சுக்காதே."

சொல்லும் போதே பஞ்சவர்ணத்தின் முகம் கோபத்தில் சிவந்தது. பாட்டியின் குரலில் இருந்த அழுத்தத்தையும், அவள் முகத்தில் தெரிந்த கோபத்தையும் பார்த்த போது மூர்த்திக்கு ஒரு கணம் தன் அவமானம் மறந்து பாட்டியின் கோபத்திற்கான காரணம் பற்றிய யோசனை எழுந்தது. ‘நிஜமாகவே சிவகாமி என் அப்பா அம்மாவைக் கொன்றிருப்பாளா? அதனால் தான் பாட்டி இப்படியொரு பகையை மனதில் பாதுகாத்து வருகிறாளா? அதை ஏன் விளக்கமாக என்னிடம் சொல்ல மாட்டேன்கிறாள். என்ன தான் நடந்திருக்கும்?’

பேரனின் முகத்தில் சிந்தனையைப் பார்த்த பஞ்சவர்ணம் அவன் ஏதும் தன்னைக் கேட்கும் முன் தான் முந்தினாள். "அதுசரி. நம்மளையெல்லாம் அனுப்பின அந்த சண்டாளி ஆர்த்தியோட அப்பனையாவது கூட இருக்க விட்டாளா? இல்லை அவனையும் அனுப்பிச்சுட்டாளா?"

"அவர் இருந்தார். ஆர்த்தியோட தாத்தா வெளியே வந்ததைப் பார்த்தேன். அந்தக் கிழவி வெளியே வரலை. ஆர்த்தி கூட அவங்க மூணு பேரும் இருந்தாங்க"

பஞ்சவர்ணம் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் யோசித்தாள். பின் பேரனிடம் சொன்னாள். "விடிஞ்சவுடனே முதல் வேளையா நீ அந்தக் கிழவனைப் பார்த்து பேசப் போறாய். அக்கறையாய் கேட்கற மாதிரி அந்தக் கனவு சமாச்சாரத்தை விசாரி. அந்தக் கிழவியோ ஆர்த்தியோ இது பத்தி பேசுவாங்கன்னு தோணலை. ஆனா அந்தக் கிழவனை விசாரிக்கற மாதிரி விசாரிச்சா எல்லா உண்மையும் வெளிவரும். ஞாபகம் வச்சுக்கோ. இதுல ஏதோ பெரிய ரகசியம் இருக்குன்னு என் உள் மனசு சொல்லுது. இப்ப மணி என்ன. மூணாச்சா. அந்தக் கிழவன் ஆறு மணிக்கு எழுந்து வாக்கிங் போறான். அப்ப பிடிச்சுக்கோ. நீ வர்ற வரைக்கும் எனக்கு இருப்பு கொள்ளாது. போ. போய் அஞ்சரைக்கு அலாரம் வச்சுட்டு படு."

சரியாக நீலகண்டன் ஆறுமணிக்கு தலையில் குல்லாவையும், தோளில் மப்ளரையும் போட்டுக் கொண்டு கிளம்புவதைப் பார்த்த போது மூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. பாட்டி தன் அறையில் இருந்து வெளியே வராவிட்டாலும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தே எத்தனை விஷயங்களைத் தெரிந்து கொள்கிறாள் என்று வியந்தான்.

"ஹலோ தாத்தா குட்மார்னிங்" என்று சொல்லி தோட்டத்தில் அவரைப் பிடித்தான். அவனைத் திரும்பிப் பார்த்த நீலகண்டன் முகத்தில் புன்னகை வந்தது. "குட்மார்னிங், தம்பி"

அவருடன் சேர்ந்து மூர்த்தி நடக்க ஆரம்பித்தான். சிறிது நடந்தவுடன் ஆரம்பித்தான். "எனக்கு நேத்து ராத்திரி தூக்கமே வரலை தாத்தா. ஆர்த்தியை அந்த நிலையிலே பார்த்த பிறகு மனசே தாங்கல…பாவம். கனவு இவ்வளவு தூரம் ஒரு ஆளை பாதிக்கும்னு யாராவது இதுக்கு முன்னால் சொல்லி இருந்தா நான் நம்பி இருக்க மாட்டேன்."

அவன் குரலில் தொனித்த இரக்கமும் கவலையும் நீலகண்டனை மனம் நெகிழ வைத்தது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் நடந்தார்.

மூர்த்தி கேட்டான். "ஏன் தாத்தா இந்தக் கனவு ரொம்ப காலமாவே ஆர்த்தியைப் பாதிக்குதுங்கற மாதிரி பாட்டி சொன்னாங்களே. இதுக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுத்துக்க முடியாதா?"

பார்வதி பாடம் நடத்தி விட்டுத் தான் நேற்றிரவு அவரைத் தூங்க விட்டாள் என்பதால் நீலகண்டனுக்கு அவனிடம் எல்லாவற்றையும் போட்டுடைக்க மனமிருந்தாலும் சுருக்கமாக மட்டும் சொன்னார். "சின்ன வயசுல ஏதோ பாதிக்கற மாதிரி பார்த்துட்டா. அது தான் கனவா வருதுன்னு டாக்டர் சொல்றாங்க. அதுக்கு நல்ல டாக்டராய் பார்த்து ட்ரீட்மெண்ட் செய்யலாம்னு சிவகாமி சொல்றா"

"கனவுல என்ன வருது தாத்தா?"

"ட்ரீட்மென்ட் முடியற வரைக்கும் அதைப்பத்தி பேச வேண்டாம்னு அபிப்பிராயப்படறாங்க.. அதுவும் சரின்னு தான் படுது. என்ன சொல்றே?"

"கரெக்ட் தான் தாத்தா" என்று நாகரீகமாக மூர்த்தி நிறுத்திக் கொண்டான். சற்று தூரம் நடந்த பின் அப்போது தான் நினைவுக்கு வந்தவன் போல "என் எம்டிக்கு போன் செய்து பேச வேண்டிய வேலை இருந்துது. இந்த கலாட்டால மறந்தே போயிட்டேன். செல்லை ரூம்லயே வச்சுட்டேன். நீங்க போங்க தாத்தா. நான் போன் பேசிட்டு வந்துடறேன்…"

அடுத்த ஐந்து நிமிடத்தில் பாட்டியின் அறையில் அனைத்தையும் ஒப்பித்து நின்றான்.

பஞ்சவர்ணம் முகத்தில் மின்னல் அடித்து தங்கியது. ஏதோ பாதிக்கற மாதிரி பார்த்துட்டாள் என்றால் அது அந்த மழை நாளில் தாயின் மரணக்காட்சியாகத் தான் இருக்கும் என்று புரிய அவளுக்கு நிறைய நேரமாகவில்லை. இத்தனை நாள் தான் அறிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கெல்லாம் சாவி ஆர்த்தியின் ஆழ்மனதில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிய போது அபூர்வமாய் அவள் முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது.

(தொடரும்)

About The Author